சனி, 9 மே, 2015

விஸ்வரூபம்

ஒரு வழியாய் அக்கினி குஞ்சின் மீது மழை பெய்திருக்கிறது... ஆனால் அந்த அக்கினி குஞ்சு மரப்பொந்திடை வைக்கப்பட்டு மழை பெய்யும் காலத்திற்குள்ளாக அதனை குரங்குகள் எல்லாம் தூக்கிப்போய் பல மரங்களில் பற்றவைத்திருக்கிறது...

விஸ்வரூபம் எடுத்த விஸ்வரூப பிரச்சினையில் வெளியில் தெரியாமல் இருந்த லெட்டர்பேட் குழுக்களும், சில தனிமனித பிரபலங்களும் , சில பல பாரம்பரிய பேரியக்கங்களும், மக்களாட்சியையே மன்னராட்சி ஆக்கிய பேரரசர்களும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குளிர்காய்ந்திருக்கிறார்கள்.

கமலஹாசன் அவர்கள் நூறுகோடி ரூபாய் முதலீட்டில் எல்லோரையும் விளம்பரப்படுத்தி இருக்கிறார்...பிரதிபலனாக எல்லோரும் அவர் படத்தை விளம்பரபடுத்தி இருக்கிறார்கள்..

"எரியும் வீட்டில் பிடுங்கின வரை லாபம் " என்றும் , "வெந்தது போதும் என் முந்தானைல போடு " என்றும் எம் முன்னோர்கள் சொல்லிச்சென்றதை செயல் விளக்கமாய் செய்து காண்பித்த எல்லோரையும் பார்த்து மிரட்சியாகவும் வியப்பாகவும் இருக்கிறது...
அன்பு செல்வன் என்ற அழகான பெயரை அன்பு செல்வன் ஐ பி எஸ் என்று கதாநாயகனுக்கு வைத்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனை புகழ்ந்த ஒரு படித்தவர் அதே மேனன் இன்னொரு படத்தில் அமுதன்- இளமாறன் என்று தமிழ் பெயர்களை வில்லன் கதாபாத்திரத்திற்கு சூட்டிய பொது அதற்கு காரணம் கமல் தான் என்ற ஒரு அற்புத கண்டுபிடிப்பை நிகழ்த்தி அடுத்த நோபல் பரிசுக்கான பரிந்துரையை பெற்றிருக்கிறார்...

எது எப்படியோ.. ஒரு கலைஞனாய் , முதலீடு செய்தவனாய் தனுடைய படைப்புக்கும் பணத்திற்கும் இப்படி ஆபத்து வருகிறதே என்று கமலஹாசன் ஆதங்கப்பட்டது நியாயம். அந்த ஆதங்கமே நான் வேறு மாநிலத்திலோ வேறு நாட்டிலோ கூட குடியேறிவிடலாம் என்று நினைக்கிறேன் என்று அவரை சொல்ல வைத்தது... ஒரு கலைஞனை அப்படி வேதனைப்பட வைத்ததற்காக வெட்க்கப்பட்டோரையும்... 
கமலஹாசன் என்ற சிந்தனையாளனுக்கு தார்மீக ஆதரவு கொடுத்த அனைத்து தரப்பினரையும் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் கமலஹாசன் இந்த நாட்டை விட்டு போனால்.. வேறு மாநிலத்திற்கு போனால்... நாங்கள் எங்கள் ரேஷன் கார்டை ஒப்படைப்போம் என்று ஒரு கும்பல் சொல்கிறதே. அதை என்னென்று சொல்ல???

கமலஹாசன் எங்கு வேண்டுமானாலும் குடியேறி விடுவார். ரேஷன் கார்டை கொடுத்துவிட்டு நீ எங்கே போவாய்..??? கமலஹாசனின் பின்னால் அவரது குடும்பம் போகும்... உன் குடும்பம்...???

ஒரு திரைப்படத்திற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் வதந்திகளால் ஆபத்து வருகிறது என்ற உடன் அந்த கலை படைப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்தது நியாயம்... ஆனால் அரசியல் கட்சி ,,, அடுத்த முதல்வர் என்கிறாயே.... 

அட முட்டாள் தமிழா.. அறிவார்ந்து சிந்திக்க உனக்கு ஏனடா தெரியவில்லை??? உணர்சிகளுக்கு அடிமையாகி...... நீ ஒவ்வொரு முறையும் செய்த தவறால் தான் சுமார் அரை நூற்றாண்டுகள் அரசியல் வியாபாரம் செய்தும், சினிமா வியாபாரம் செய்தும் உன்னை ஒரு சிறு கும்பல் அடிமையாகவே வைத்திருக்கிறது.. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் இப்படி இருக்க போகிறாயோ.!!!!

ஆப்பில் ஏறி அமர்ந்த கதை..

நற்பெயர் என்பது கண்ணாடி பாத்திரம் போன்றது.. மிக எளிதாய் உடைய கூடியது..நாம் மட்டும் கவனமாய் கையாண்டால் பத்தாது....நமக்கு தொடர்பே இல்லாத ஒருவரின் வார்த்தை கூட நமது பகுதியில் நாம் வெகுகாலமாய் சேர்த்து வைத்திருந்த நற்பெயர் எனும் கண்ணாடி பாத்திரத்தை உடைக்கும் என்பதை உணர்த்திய ஒரு நகைச்சுவையான நிகழ்ச்சி இது...

அப்போது காஞ்சிபுரத்தை தலைமையகமாக கொண்டு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களின் விற்பனை அலுவலராக ஒரு வடநாட்டு விவசாய பூச்சிக்கொல்லி நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தேன்.. காஞ்சிபுரத்தில் சுமார் ஐந்தாண்டுகாலம் ஒரு குடும்பத்தினருடன் கட்டண விருந்தாளியாக தங்கி உண்டு அவர்கள் குடும்பத்திலும் அந்த தெருவிலும் ஒரு நெருங்கிய உறுப்பினராக ஆகி இருந்தேன்... அந்த தெருவில் இருக்கும் அனைத்து குடும்பத்தினருமே மிகவும் மரியாதையான பார்வையும் , நம்பிக்கையும் வைத்திருந்தனர்... என் மீதான அவர்களின் மரியாதை, நம்பிக்கை என்ற கண்ணாடிப்பாத்திரத்தை கீறல் கூட விழாத அளவு நான் பக்குவமாய் பாதுகாத்து வந்தேன்...


ஒரு நாள் விடுப்பில் வீட்டில் இருந்த போது அந்த தெருவழியே எதிர்காலத்தை கிளியை வைத்து கணிக்கும் (???) ஒரு ஜோசியர் வந்தார். 
சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்ற கதையாக நான் அவரை கூப்பிட்டு ஐந்து ரூபாய் கொடுத்து ( துட்ட கொடுத்து சூனியம் வச்சுகிட்றது இதுதான் ) என்னுடைய எதிர்காலத்தை கணிக்க சொன்னேன்... கிளி ஜோசியரை நான் அழைத்த வேளையில் அக்கம் பக்கம் இருந்த குடும்பத்தலைவிகள் ஒவ்வொருவராய் வந்துவிட்டனர்... 
அடுக்கி வைக்கப்பட்ட சீட்டில் இருந்து அதிகம் யோசிக்காமல் ஒரு சீட்டை எடுத்துக்கொடுத்துவிட்டு ஒற்றை நெல்லை கூலியாக பெற்று , உழைப்புக்கு கூலி உடனே கிடைத்த சந்தோஷத்தில் மீண்டும் அது வீடு என்று நம்பிக்கிடக்கும் சிறைக்கு சென்று விட்டது....
எடுத்த சீட்டில் என் எதிர்காலம் வரவில்லை... வினை வந்தது.... ஆம்... கலயத்தில் இருந்து வெண்ணையை திருடி தின்றுவிட்டு இதழோரம் வழிய சிரித்துக்கொண்டிருந்தார் குழந்தை கிருஷ்ணன் ... கிளி ஜோசியர்.. அடடா என்று பாராட்டிக்கொண்டே ஒரு புத்தகத்தை எடுத்து அந்த கிருஷ்ணர் படத்திற்கான பக்கத்தை விரித்து வாசித்த முதல் வரியில் விழுந்து உடைந்தது நான் ஐந்தாண்டுகலாய் பாதுகாத்து வைத்திருந்த என் மரியாதை கண்ணாடி பாத்திரம்...

"வெண்ணை திருடிய கண்ணன்,,,, இவன் வெண்ணையை மட்டுமல்ல. பெண்ணையும் திருடுவான்.." என்று போட்டாரே ஒரு போடு... அக்கம் பக்கத்து குடும்பத்தலைவிகள் அடி வயிற்றில் உருண்டிருக்கும் போலும் அந்த அக்கினி பந்து... ( அவர்கள் வீட்டில் ஓரிரு பெண் பிள்ளைகள் இருந்தார்கள்)

அன்றுமுதல் ஒரு எதிரியை பார்ப்பதுபோல் பார்க்கத்தொடங்கினார்கள் .. சகஜமாய் பேசிய பெண் பிள்ளைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கினார்கள். அப்புறம் ஒரு வழியாக அடுத்து இரண்டாண்டுகள் கழித்து எனக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த வேலையையும் காஞ்சிபுரத்தையும் விட்டு நான் விலகி வர நேர்ந்தது... 
அப்போது அந்த குடும்பத்தலைவிகளிடம் சொல்லிவிட்டு வந்தேன்.. அப்போது அவர்கள் முகத்தில் தெரிந்தது சந்தோஷமா......... கவலையா??? அந்த கிருஷ்ணனுக்கே வெளிச்சம்.!!!

திருப்பதிக்கு ஒரு நெடும்பயணம்....

மிகத்திடீரென்றுதான் அந்த பயணம் அமைந்தது... ஒரு நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன்... அவர்களின் பக்கத்துவீட்டுக்காரர் ஏழுமலையானுக்கு கோ தானம் (பசு மாடு உபயம்) செய்வதாய் வாக்கு கொடுத்திருந்த நேர்த்திக்கடனை செலுத்த ஒரு டெம்போ வாகனத்தில் பயணப்பட்டார்கள்... நண்பர் அழைக்க அப்போது அவசர பணிகள் இல்லாத காரணத்தால் நானும் அவர்களுடன் இணைந்துகொண்டேன்...

அந்த பசுமாட்டை வண்டி
யின் பாரப்பகுதியில் முன்னிறுத்தி கயிற்றால் பிணைத்துவிட்டு பின் பகுதியில் அமர்ந்து பயணித்தோம்... திருத்தணி- நகரி கடந்து வாகனம் கீழ்திருப்பதியை சென்றடைந்தது... அங்கு இருந்த கோசாலையில் நேர்த்திகடனான பசுவை ஒப்படைத்தபிறகு எங்கள் பயணம் ஏழுமலையான் தரிசனம் நோக்கி புறப்பட்டது...
அப்போது இரவு ஒன்பது மணிக்கு மேலாகியிருந்ததால் கால்நடை பயணமாக மலையேற ஒருமனதாய் முடிவு செய்யப்பட்டு பயணம் தொடங்கியது...
ஆரம்பத்தில் மிக சுலபமாய் இருந்த பயணம் தூரம் கடக்க கடக்க.. சக்தி குறைய குறைய.. மிக கடியதோர் பயணமாக இருந்தாலும்.. ரசிப்புடனே கடந்தோம்.. நடு நடுவே சற்று நேர இளைப்பாறலும். "கோவிந்தா. கோவிந்தா.." என்ற கோஷமும் எங்களை படிக்கட்டுகளில் முன்னேற்றி சென்றன.... அல்லது அப்படி நாங்கள் நம்பினோம்...
ஒருவழியால் மேலேறியபின் அங்கிருக்கும் திருக்குளத்தில் புனித நீராடியபின் வெங்கடரமணா.. ஏடுகொண்டல வாடா... ஸ்ரீனிவாசா... கோவிந்த தரிச
னத்திற்காக காத்திருக்கும் பட்டியில் எங்களையும் அடைத்துக்கொண்டோம்... ஒவ்வொரு பட்டியும் மூன்று மணி நேர இடைவெளியில் கடக்க முடிந்தது... ஒன்று.. இரண்டு.. மூன்று... நான்கு....
அடடா.. தெரியாம வந்து மாட்டிகிட்டோமோ... என்று நினைக்க வைத்தது அந்த காத்திருப்பு...
அவ்வப்போது புளியோதரை- பொங்கல்- சுண்டல் என்று வழங்கப்பட்டாலும் கூட அந்த காத்திருப்பு என்னவோ பெரும் உபாதையாய் இருந்தது....
ஒரு வழியாக 18 மணி நேர காத்திருப்புக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கி நெருங்கி.. இதோ.. இன்னும் சில நிமிடங்களில்.. "கோவிந்தா... கோவிந்தா...... பணக்காரகடவுளின் பார்வை மட்டும் என் மீதும் பட்டுவிட்டால்.... அட அட.... அடுத்த விசிட்ல கட்டா கொண்டுவந்து கொட்றேன் " ... மனசுக்குள்ளயே உரக்க சொல்லிக்கொண்டேன்...

நெருங்கிவிட்டேன்.... வெளிச்ச பிரயோகத்தில் ஜொலிக்கும் அலங்காரத்தில் ஏழுமலையான்... 30 வினாடிகள் கூட இல்லை... அந்த புகை மண்
டலத்திலும் வெளிச்ச பிரவாகத்திலும் லேசாக கண்மணி சுருங்கி வெளிபிம்பத்தை உணர்ந்து மூளையின் சேமிப்பு பகுதியை சென்றடையும் முன்பாகவே..."ஜருகண்டி... ஜருக்கண்டி..."

ஏழுமலையானுக்கும் அதே பிரச்சினைதான் போலிருக்கிறது.... அவர் பார்த்திருந்தால் நானும் இந்நேரம் பணக்காரனாகி இருக்க வேண்டுமே... இழப்பு இப்போது அவருக்கும் தான்... "கட்டாய் கொண்டு வந்து கொட்றேன்" என்ற என் உரத்த சத்தம் நடைமுறைக்கு வராமலேயே நிற்கிறது...!!!

ஒரு பெண்ணை குறிவைத்த பாலியல் தீவிரவாதமும்.. ஒட்டுமொத்த பெண்களையும் குறி வைக்கும் ஓட்டு தீவிரவாதமும்...

இந்த கட்டுரைக்குள் நுழையும் முன்பாக மிக தெளிவாய் சொல்லி விடுகிறேன்... தலைநகர பாலியல் தீவிரவாத விவகாரத்தில் அவர்களிடம் விசாரிக்க எதுவும் இல்லை அவர்கள் தான் அதை செய்தார்கள் என்பதை மட்டும் உறுதிபடுத்திக்கொண்டால் உடனடியாக அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிட வேண்டும் என்பதை அன்றே பதிவு செய்தவன் நான்.

தலை நகரத்தில் அந்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவத்தை பற்றி நிறைய பேசி விட்டார்கள்.. ஆனால் அதனை தொடர்ந்த நிகழ்வுகளில் எவ்வளவு தூரம்ஓட்டு  தீவிரவாத அரசியல் விளையாடுகிறது என்பதை எந்த பெண்ணும் புரிந்துகொள்ள தயாராய் இருப்பதாய் தெரியவில்லை.

இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்ப உடை அணிய சொன்னால் "பெண்களை மூடிக்கொண்டு போக சொல்கிறாயே..." என்று என் மீதும் இப்படி சொல்பவர்கள் மீதும்  எரிந்து விழுகிறார்கள்  உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்வேன் சகோதரிகளே..  சுமார் 37 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு தான் ஒரு பகுதியில் பெண்கள் மார்பகங்களை மூட அனுமதி அளிக்கப்பட்டது தெரியுமா.... அதற்கான போராட்டத்தின் வலி எத்தனை பேருக்கு தெரியும்??
முழு விபரத்திற்கு இங்கே சொடுக்கவும்..



ஆனால் இன்றைய போராட்டங்கள் சுதந்திரம் என்ற பெயரில் எதை நோக்கி செல்கிறது??? நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் பெருவணிகர்கள் புகுத்திய மேலை நாட்டு நாகரீக  மாயையில் சிக்கி உங்களை நீங்களே தரம் தாழ்த்திக்கொள்ள முயற்சிக்கிறீர்கள்.. அது உங்கள் சுதந்திரம்.. அதை பற்றி நான் எதுவும் சொல்ல தயாரில்லை. ஆனால் ஒரு சகோதரனாக ஒரு ஆலோசகனாக உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்... உங்களது பார்வையில் ஆணாதிக்கம் என்றோ- பெண்ணின் தனி மனித சுதந்திர குறுக்கீடு என்றோ நீங்கள் நினைக்கும் இந்த விஷம் இன்றோ- நேற்றோ தொடங்கியதல்ல.. அது பல நூற்றாண்டுகளாய் தொடர்வது... அதற்கு எதிரான உங்கள் யுத்தம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது.. நீங்கள் வெற்றி பெற வில்லை அதற்கு இன்னும் சில பல ஆண்டுகள் ஆகலாம். 

ஒரு யுத்த களத்தில் நிற்கும் போதே கவசத்தையும் கேடயத்தையும் வீசி எறிபவன் புத்திசாலி இல்லை... அப்படி வீசுபவனுக்கு கண்டிப்பாய் இழப்பு நிச்சயம் ... இந்த போரில் கலாச்சார  உடைகள் என்பது இன்றைய நிலையில் உங்கள் கவசம்- கேடயம்.. அதை வெற்றிக்கு முன்பே துறக்காதீர்கள் என்று தான் சொல்கிறோம்..

இந்த போராட்டத்தில் உங்கள் வெற்றி என்பது ஆண்களை சட்டத்தை காட்டி மிரட்டுவதோ- பயப்பட வைப்பதோ இல்லை... 

உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ளும் மனோ பக்குவத்திற்கும் , உங்களை முதலில் மனுஷியாய் பார்க்கும் நிலைக்கும் அவர்கள் வர வேண்டும்.. அதுதான் உங்கள் வெற்றி.. அந்த வெற்றியை அடைந்துவிட்டதாய் நீங்கள் நம்புகிறீர்களா?? 

தலைநகரத்தில் ஒரு பெண் மீது நடத்தப்பட்ட பாலியல் தீவிரவாத தாக்குதல் இங்கே எத்தனை பெண்களுக்கு கணவனாலேயே கூட நடத்தப்படுகிறது..?? ஊடகங்கள் கிளப்பிய பரபரப்பில் இன்று தமிழக முதல்வர் அவர்கள் வேதியல் ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறார்கள்.. அதனை சில முகநூல் சகோதரிகள் "காயடிக்க வேண்டும்" என்று அப்பட்டமாய் பதிவு செய்து கொண்டாடுகிறார்கள்.. 

அப்படி காயடிக்க வேண்டும் என்றால் இங்கே எத்தனை கணவன்களுக்கு காயடிக்க வேண்டும் என்பதை இவர்கள் உணர்வார்களா??? ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் அவளை உடல் ரீதியான தொடர்புக்கு வற்புறுத்துவதே வன்முறைதான்.. அது இங்கே எத்தனை மனைவிகளுக்கு கணவனாலேயே ஏற்படுகிறது தெரியுமா?? எந்த மனைவி தன கணவனுக்கு காயடிக்கும் தண்டனை கொடுக்க சொல்லி புகார் செய்ய போகிறார்..?? 

கற்பு என்பது பேனாவிலோ பென்சிலிலோ எழுதி வைக்கப்பட்டதல்ல அதனை அழிக்க... அது மொத்தமும் மனம், உடல், செயல்கள் சார்ந்த விஷயம் ஆனால் அது இன்று திரிக்கப்பட்டு விட்டிருக்கிறது...   பாலியல் வன்புணர்ச்சி என்பதுதான் சரியே தவிர "கற்பழிப்பு" என்ற வார்த்தையிலேயே ஒட்டு மொத்த பெண்ணினமும் கேவலப்படுத்தபடுவது ஏன் உங்களுக்கு புரியவில்லை??

ஒரு ஜனநாயக நாட்டின் தலைநகரத்தில் ஒரு பெண்ணுக்கு எதிராய் நடந்த வெட்கப்பட வேண்டிய விஷயத்தை ஊடகங்கள் விளம்பரம் செய்ததும் அதில் குளிர்காய அரசியல் வாதிகள் போட்டி போடுவதும் ஏன் இந்த பெண்களுக்கு புரியவில்லை.. நாட்டின் வீர திருமகளை இழந்துவிட்டோம் என்று ஜனாதிபதி சொல்கிறார். அவருக்கு அசோக் சக்ரா விருது வழங்க வேண்டும் என்று ஒரு கட்சி சொல்கிறது. காயடிக்க வேண்டும் என்று ஒரு முதல்வர் சொல்கிறார்... 
இவை எல்லாம் ஓட்டு தீவிரவாதம் என்றும்.. ஆட்டிற்காக கவலை படும் ஓநாய்களின் கூக்குரல் என்றும் உங்களுக்கு புரியவில்லையா ??

இதற்கு முன்பு பாலியல் குற்றங்கள் பதிவானதே இல்லையா அப்படி பதிவானது எந்த அரசியல் வாதிக்கும் / ஆட்சியாளர்களுக்கும்  தெரியாதா???

ஆண்  என்பவன் வானத்திலிருந்து குதித்தவனல்ல .... அவனையும் ஈன்றவள் பாலூட்டி வளர்த்தவள் ஒரு பெண்தான் .... உங்கள் மகனுக்கு நல்ல புத்தியை ஊட்டுங்கள். உங்கள் மகளுக்கு நல்ல புத்தியை ஊட்டுங்கள்... இப்படிப்பட்ட பாலியல் வக்கிரங்களை தூண்டும் காரணிகள் என்னவென்று சிந்தியுங்கள் அப்படிப்பட்ட காரணிகளை அகற்ற முயலுங்கள்.... அதற்காக போராடுங்கள்.. அதை விடுத்து காயடிக்க சொல்லும் சட்டம் கொண்டுவர முயலாதீர்கள் ஏனென்றால் பெண் ஆணுக்காகவும் ஆண்  பெண்ணுக்காகவும் படைக்கப்பட்டவர்கள்.  நேர் முனை மின்னூட்டமும்  எதிர்முனை மின்னூட்டமும்  இருந்தால் மட்டுமே மின் விளக்கு ஒளி  தரும் ...

மானுடம் அழிய சுனாமியோ- எரிகற்களோ  - பிரளயமோ வரவேண்டும் என்பதில்லை. 
விஷம் கொடுத்தும்  கொல்லலாம். வெல்லம் கொடுத்தும்  கொல்லலாம்  என்று எங்கள் கிராம பகுதியில் சொல்வார்கள் அரசு பாதுகாப்பு என்ற பெயரில் உங்கள் ஓட்டுக்களை குறிவைத்து வெல்லம் கொடுக்கிறது... 

புழுக்களுக்கு பின்னே ஒரு விபரீதம்

தலைநகரில் நடந்த பாலியல் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு நிறைய புலிகள் பசுந்தோலை போர்த்திக்கொண்டு அறிக்கை விடுகின்றன.. இப்போது ஏதாவது சொன்னால் அது பெண்ணுரிமை வாதிகளை சீண்டி விடுவதாக இருக்குமோ என்ற பயம் அல்லது "நானெல்லாம் யோக்கியனாக்கும்" என்றுகாட்டிக்கொள்ளும் ஆர்வம் தான் தெரிகிறதே தவிர யாரும் மனச்சாட்சிப்படி பேசுவதாக தெரியவே இல்லை.. நூற்றாண்டுகளாய் , ஆயிரமாண்டுகளாய் தொன்றுதொட்டு வந்த இந்திய கலாச்சாரம் பண்பாடு எல்லாவற்றையும் நவீன யுவதிகள் உடைத்து சிதறடிக்க பதாகைகளை ஏந்தி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. அதற்கு "நனையும் ஆட்டிற்காக அழும் ஓநாய்"ஆண்களும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்..

நடந்த சம்பவம் நமக்கெல்லாம் செய்தி.. ஊடகங்களுக்கோ தன்னுடைய டி ஆர் பி ரேட்டிங் கை உயர்த்த கிடைத்த வரம்.. ஆனால் அந்த பெண்ணின் நிலை.. அந்த பெண்ணை பெற்றோரின் நிலை...??
அந்த பெண் ஒன்றும் மருத்துவமனையில் சேர்த்திருக்கும் தன்னுடைய பெற்றோருக்கு மருந்துவாங்கவோ , இல்லை தான் படிப்பை முடித்துவிட்டோ இரவு பதினோரு மணிக்கு வரவில்லை. ஒரு ஆண் நண்பனை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்,,, இப்படி ஒரு எதிர்பாராத தாக்குதல் நடந்துவிட்டதே.. அந்த ஆண் நண்பர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முன்வருவாரா.??? இதனால் அவருக்கு இழப்பு என்ன?
கொஞ்ச நாளில் ஊடகங்கள் அவர்களை மறந்துவிடும். நாமும் மறந்துவிடுவோம். ஆனால் அவர்கள் உயிரோடிருப்பார்கள். இரவில் ஒரு இளம்பெண்ணுடன் ( யாரோ பெற்ற பெண்தானே ) ஜாலியாக ஊர் சுற்ற போனவர் தனக்கு மனைவியாக வேறொரு பெண்ணை தேடிப்போய் விடுவார்... ஆனால் அந்த பெண்ணை பெற்றவர்கள் அந்த பெண்ணை பார்த்து பார்த்து வாழ்நாளெல்லாம் நரகம் அனுபவித்து செத்து போவார்கள்.. அதையும் மீறி யாரோ ஒரு தியாகி அந்த பெண்ணை மணம் செய்ய முன்வரலாம். ஆனால் அவர்களின் குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்குமா என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லை...

ஒன்றை நன்றாக தெரிந்துகொள்ளுங்கள் சகோதரிகளே..
ஒரு பெண்ணுடன் நட்பாயிருக்க பத்து ஆண்கள் தயாராயிருப்பார்கள் ஆனால் அந்த பெண் காதலியாக இருந்தால் அவள் வேறொரு ஆணுடன் சகஜமாக பழகுவதை ஏற்க மாட்டார்கள்.. அவளே மனைவியாகிவிட்டாலோ வேறொரு ஆணுடன் பழகுவதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்... இதுதான் நிஜம்.
ஒரு பெண்ணுடன் ஒன்றாகவும் தனித்தனியாகவும் வெளியிடங்களுக்கு மிக சந்தோசமாக செல்லும் ஐந்து ஆண்கள் , அந்த பெண் "என்னை திருமணம் செய்துகொள்கிறாயா.." என்று கேட்கும்போது மறுத்து விடுவார்கள். இதை "லவ் டுடே " என்ற படத்தில் திரு பால சேகரன் என்ற இயக்குனர் ஆணி அடித்ததுபோல் சொல்லி இருப்பார்... இதுதான் ஆணின் நிஜ முகம்..

உங்கள் பெற்றோர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்யுங்கள்.. நீங்கள் சுதந்திரம் என்று சொல்வது உங்கள் பெற்றோரின் வயிட்றில் புளிகரைப்பதை உங்களால் இப்போது உணர முடியாது.... அப்படி உணர நீங்கள் பெற்றோராக வேண்டும்.

சும்மா அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ வாழ்ந்துகொண்டிருப்பதுமாதிரி பேசினால் மட்டும் ஆகாது... நமது கலாச்சாரத்தை விரும்பி அந்த மக்கள் வாழ ஆசைபடுகிறார்கள்.. ஆனால் வியாபாரிகளோ.. அதுதான் நிஜமான நாகரீகம் என்று ஒரு மாயையை விதைத்து அதனை வளர்க்கிறார்கள்.. அதை நம்பி அந்த நாகரீகத்தை பின்பற்ற ஆர்வமாயிருக்கிரீர்கள்.அந்த மாயவலை உங்களை வீழ்த்தி அவர்களை பணக்காரர்கள் ஆக்கும்..

சிங்கத்தை வேண்டுமானால் வலை விரித்து பிடிக்கலாம்பிடிக்கலாம்... யானையை குழிவெட்டி பிடிக்கலாம்.. ஆனால் கொசுவுக்கு பயந்து வலைக்குள் ஒளிவது புத்திசாலித்தனமே தவிர அசிங்கம் இல்லை... உங்கள் பெற்றோரை நம்புங்கள்.. உங்கள் சகோதரனை நம்புங்கள்... உங்கள் கணவனை பிள்ளைகளை நம்புங்கள்...

லட்டு சாப்பிட்டால் எப்படி இனிப்பாக இருக்கும் என்று என்று யாரும் விளக்கி சொன்னால் அதை நாம் நம்பிக்கொண்டு போகவேண்டிய அவசியம் இல்லை... உடனே ஒரு லட்டு வாங்கி சாப்பிட்டு பார்க்கலாம்... ஆனால் நெருப்பு சுட்டால் எப்படி இருக்கும் என்று ஒரு மருத்துவ மனையில் ஒருவரை பார்க்க நேர்ந்தால் நெருப்பிடம் விலகி இருப்பது மட்டுமே நலம்.. அதல்லாம் முடியாது நானும் சுட்டுகொண்டால் மட்டுமே நான் நம்புவேன் என்று யாரும் சொல்வார்களானால்... மௌனம் தான் எமது பதிலாக இருக்கும்
தூண்டில்காரனை நம்பாதீர்கள். அந்த புழுக்களுக்கு பின்னே ஒரு விபரீதம் இருக்கும்...

இணையம் வளர்க்கும் ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்

டிபஸ் என்ற கிரேக்க மன்னன் தன்னுடைய தாயின் மீது காதல்வயப்பட்டு தன்னுடைய தந்தையை கொன்றுவிட்டு தாயை கட்டாய திருமணம் செய்துகொண்டான்...  தன்னுடைய தாயை போல் சற்றே வயது அதிகமான உடல் பருமனான பெண்களின் மீதுகாதல் வயப்படும் தன்மை எல்லா ஆண்களுக்குமே இருக்கிறது.. அடி மனதில் எல்லா ஆண்களுக்குமே இது இருக்கும்.. அதன் அளவு அதிகமாகும் ஆண்கள் தன்னைவிட வயது மூத்த , பருமனான பெண்களின் மீது மோகம்  கொள்வார்கள் இதனை மருத்துவ விஞ்ஞானம்  "ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ்" என்று சொல்கிறது...


பொதுவாக ஆண்கள் எல்லோருக்குமே  உள்ளுக்குள் பெண் தன்மை இருக்கும்.. இதன் விகிதாச்சாரம் அதிகமானவர்கள் தான் திருநங்கைகள் ஆகிறார்கள்.. அதே போல தான் ஒவ்வொரு ஆணுக்கு உள்ளும் தாயின் மீது ஒரு காதல் இருக்கும்.. ஒவ்வொரு ஆண்  மகனுக்கும் முதல் காதலி தாய்தான்...
இதன் விகிதாச்சாரம் அதிகமாகிற போது  தான் எதிர் விளைவுகள் அதிகமாகிறது 

காலம் காலமாய் நம்மை வழிநடத்தும் கலாச்சாரம் தாயுடனோ- சகோதரியுடனோ உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது ஒரு அசிங்கமான / பாவமான காரியமாக சித்தரித்து வைத்திருக்கிறது.. 
இந்த கலாச்சாரமே இந்திய கலாச்சாரத்தின் மாண்பை உலகமே வியந்து நோக்க வைத்திருக்கிறது..

தன்னுடைய தாயின் வயதை ஒத்த வேறெந்த பெண்ணை வேண்டுமானாலும் பாலியல் இச்சையோடு  பார்க்கும் ஒரு ஆணால்  தன்னுடைய தாயை அவ்வாறு பார்க்க முடியாமல் இவ்வளவு காலமும் அடக்கி வைத்திருந்தது நமது இரத்தத்தில் ஊறிய இந்த கலாச்சாரம் தான்...

ஆனால் சமீப காலமாக நவீன கலாச்சாரம் நமது பாரம்பரிய கலாச்சாரத்தை எல்லா வகையிலும் சீரழிக்க தொடங்கி,  இந்த தாய் -மகன், சகோதரி-சகோதரன் என்ற உறவு முறையான நமது கலாச்சாரத்தின் ஆணி வேரையும்    அசைக்க தொடங்கி இருக்கிறது..


தற்போது இணையம் என்ற ஒரு மாபெரும் விஷயம் எல்லோரது வாழ்விலும் அத்தியாவசியமாகி விட்டது...அந்த இணையத்தில் நல்லதும் கெட்டதும் கொட்டிக்கிடக்கிறது.. எந்த ஒரு விஷயத்தையும் இந்த இணையத்தின் தேடுதல் பொறியில் தேடும்போது நாம்  தட்டச்சு செய்யும் சொல்லுக்கு தொடர்பான விஷயங்களை அந்த தேடுதல் பொறியே பரிந்துரைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன...

ஆனால் அவைகள் அவ்வாறு பரிந்துரைக்கும் விஷயம் நமது கலாச்சாரத்தை , அதன் ஆணிவேரை அசைப்பது எத்தனை பேருக்கு தெரியும்..? 

நாம் ஒரு விஷயத்தை தேட ஒரு சொல்லை தட்டச்ச்சு செய்யும் போது அதுவாக பரிந்துரைக்கும் விஷயம் நமக்கு முற்றிலும் அறிமுகமில்லாததாய் இருக்கும்...  அவ்வாறு பரிந்துரைக்கும் விஷயங்கள் சுவாரஸ்யமாக இருக்கும் பட்சத்தில் நமது கவனம் அதன் மீது செல்லும்.. இதுதான் ஒரு சாதாரண மனிதனின் மனோ நிலை..

இணைய தேடுதல் பொறியில் அம்மா என்று தட்டச்சு செய்யும் போது "அம்மா- மகன் உறவு" என்றும், அக்கா என்று தட்டச்சு செய்யும் போது "அக்கா- தம்பி உறவு" என்றும் அவைகள் பரிந்துரைக்கிறது.. அப்படி பரிந்துரைக்கும் விஷயங்கள் எல்லாமே நமது கலாச்சாரத்திற்கும், மானுட நாகரீகத்திற்கும் முரணான பாலியல் உறவு தொடர்பான விஷயங்கள் என்பதுதான் வேதனை...

ஒரு சாதாரண இந்திய கலாச்சாரத்தில் வாழும் ஒரு இளைஞன் இப்படி ஒரு விஷயத்தை இணைய பரிந்துரையின் பேரில் படிக்க நேர்ந்தால்  காலம் காலமாக நமக்குள் விதைக்கப்பட்டிருந்த விஷயம் லேசாக தடுமாற தொடங்கும்... ஒருவேளை இது ஒரு சாதாரண விஷயம் தானோ... நமக்குதான் தெரியாமல் இருந்திருக்குமோ.. என்று அந்த இளைஞன் நினைக்க ஆரம்பித்தால் இந்திய கலாச்சாரம் என்ன ஆகும்..?/

அவ்வாறாக கலாச்சார சீரழிவுகள் ஏற்படுமானால் அம்மா- மகன் , சகோதர- சகோதரி உறவுகளே கேள்விக்குறி ஆகி விடாதா??

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்திருக்கும் ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்ற விஷயத்தை இவைகள் கிளறி அதன் விகிதாச்சாரத்தை அதிகப்படுத்தி விடாதா..?

நமது கலாச்சாரத்தை குறிவைத்து அதனை உடைக்கும் வேலையில் கிட்டத்தட்ட வெற்றி பெற்றிருக்கும் அந்நிய சக்திகள் கடைசியாக இதிலும் கை வைக்க நாம் அனுமதிகத்தான் போகிறோமா.??? 

இதற்காக நாம் என்ன செய்ய போகிறோம்.. நமது அரசு என்ன செய்ய போகிறது... எல்லா விஷயத்திலும் கடைசியாக விழித்துக்கொள்ளும் அரசு இதிலும் அப்படித்தான் போகிறதா??

மானுட தீவிரவாதம்

நினைக்கவே பதறும் ஒரு காரியத்தை செய்து இருக்கிறது ஒரு ராட்சஷ கும்பல். ஓடும் பேருந்தில் ஒரு துணையுடன் வந்த பெண்ணை அந்த துணையை அடித்துப்போட்டு தனிமை படுத்தி தமது காம இச்சையை தீர்த்துக்கொண்டிருக்கிறது... ஊடகங்களை பொருத்தவரை இது ஒரு பரபரப்பான செய்தி.... அரசியல் வாதிகளை பொருத்தவரை அவர்கள் ஆளும்கட்சியே இருந்தால் ஒரு தலை வலி. எதிர்கட்சியாக இருந்தால் ஆளும் கட்சியை தூற்ற கிடைத்த ஒரு சந்தர்ப்பம்..

ஆனால் கசக்கி சாலையில் எறியப்பட்ட அந்த பூவின் நிலை???





உலகத்திற்கே கலாச்சாரத்தை கற்றுக்கொடுத்த நாட்டின் தலைநகரத்தில் அரங்கேறி இருக்கும் இந்த கொடூரம் நாட்டில் இருக்கும் சாமானிய மக்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது.. இதற்கு முன் இப்படியான பாலியல் வன்கொடுமைகள் நிகழாமல் இல்லை. ஆனாலும்.. ஒரு பரபரப்பான நகரத்தின் பரபரப்பான சாலையில் இப்படி ஒரு சம்பவம் அதுவும் 9.00 மணி முன்னிரவில்..


யார் இந்த தைரியத்தை கொடுத்தது??? கொஞ்சம் நிதானமாக யோசித்தால் எவ்வளவு பெரிய கலாச்சார சீரழிவில் இந்த நாடு சிக்கி சீரழிந்து சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறது என்பது விளங்கும்..


முதலில் இதை பெண்களுக்கு எதிரான விஷயமாக பார்ப்பதை தவிர்த்து மானுடத்திற்கு எதிரான விஷயமாக பார்க்க வேண்டும். அந்த ராட்சசர்கள் யாரும் சோதனை குழாயில் உருவானவர்களோ- அல்லது இரண்டு ஆண்களுக்கு பிறந்தவர்களோ அல்ல... நிச்சயம் அவர்களும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர்கள்.. ஒரு சகோதரியோ அல்லது மனைவியோ அல்லது மகளோ எதோ ஒரு பெண்ணுடன் தொடர்புடையவர்கள்.. 


ஆனால் இந்த சம்பவத்தில் அவர்கள் ஒரு பெண்ணை ஒரு மனுஷியாக கூட பார்க்க தவறியது எப்படி.. அந்த மனித தன்மை அவர்களுக்குள் அறவே இல்லாமல் போனதெப்படி?


முதலில் பெண்ணியவாதிகளும் , பெண்களுக்கான அமைப்புகளும் இதற்காக போராடுவதே என்னை பொருத்தவரை ஒரு அவமானமான செயல். இதில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருமே பாதிக்கப்படும் பாலியல் தீவிரவாதம் . தீவிர வாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என உலகிற்கு அறைகூவல் விடுப்பதில் ஒன்றும் பலனில்லை . இந்த மானுட தீவிரவாதத்தை ஒழிப்பதில் காட்டவேண்டும் 


மத்திய உள்துறை அமைச்சர் திரு சுஷில் குமார் ஷிண்டே அவர்கள் இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்று மக்களவையில் அறிவிப்பது எவ்வளவு மெத்தனமான செயல்.?? 
ஒரு இடத்தில் குண்டு வைத்தவனையோ மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப்பையோ கூட பிடித்து வைத்து விசாரிக்கலாம் அவர்களின் பின்னணி என்ன.. அவர்களை யார் தூண்டுகிறார்கள் அவர்களின் எதிர்கால திட்டங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளும் நோக்கம் இருக்கிறது... அதற்காக அப்பாவி மக்களின் வரிப்பணம் ரூபாய் முப்பது கோடி செலவு செய்ததை கூட மன்னிக்க தயாராக இருக்கிறோம்..
ஆனால் இப்படி ஒரு படுபாதக செயலை செய்தவர்களிடம் விசாரிக்க என்ன இருக்கிறது...???


இப்படிப்பட்டவர்களை பொது இடத்தில் தூக்கிலிடுவதன் மூலமே இது போன்ற ஒரு எண்ணம் கூட மனதில் முளைக்காமல் இருக்க காரணமாயிருக்குமே தவிர சட்ட திருத்தமோ , விசாரணையோ பலன் தராது.


வழக்கமாக தீவிரவாதிகளை தூக்கிலிடும்போது மட்டும் கூக்குரலிடும் மனித உரிமை அமைப்புகள் இப்போது எங்கே போயிருக்கிறது?? 
இந்த ராட்சஷர்களை இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் சிறையில் வைத்து ஆமை வேக விசாரணையில் தூக்கு தண்டனை கொடுக்க முன்வந்தால் அப்போது இந்த பரபரப்பெல்லாம் ஆறிப்போயிருக்கும் .. அப்போது மனித உரிமை அமைப்பு "மரணதண்டனையா அதெல்லாம் கூடவே கூடாது" என்று கிளம்பி வருவார்கள் .


கடவுள் இப்போதெல்லாம் மனிதர்களை படைப்பதில் சில பங்கை சாத்தானுக்கும் கொடுத்திருக்கிறார் போல இருக்கிறது... சாத்தானின் படைப்புகள்தான் இந்த தீவிரவாதிகளெல்லாம். அவர்கள் குண்டு வைப்பவர்களாயினும் சரி இதுபோன்ற பாலியல் தீவிரவாதிகளா யினும் சரி... இந்த சாத்தானின் படைப்புகளை களை எடுப்பதில் எந்தவித மெத்தனமும் காட்ட கூடாது.. மனித உரிமை ஆர்வலர்கள் முதலில் மனிதனை இனம்காணும் திறனை வளர்த்துக்கொண்டு பிறகு போராட வர வேண்டும்.. ராட்சஷர்களுக்காக போராடுவதை கைவிட வேண்டும்..


அதே நேரம் மேலை நாட்டு கலாச்சாரம்.. என் உரிமை என்றெல்லாம் சில பல வாழ்க்கையில் தோற்றவர்களும் கார்பொரேட் நிறுவனங்களும் உசுப்பி விடும் ஆடை கலாச்சாரம்.. புரிந்துகொள்ளாத பெண்ணுரிமை இதை எல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு நம் கலாச்சாரம் கற்றுக்கொடுத்திருக்கும் அடிப்படை நாகரீகத்தை பின்பற்ற பெண்களும் முன் வர வேண்டும்.

என்னுடைய சுதந்திரம் என்று கவர்ச்சியான ஆடை அணிந்து செல்லும் ஒரு பெண் இதுபோன்ற உணர்சிகளை அடக்க முடியாத ராட்சஷ ஜென்மங்களின் பாலியல் சிந்தனைகளை தூண்டி விட்டு செல்கிறார்கள்... அவர்களை பொருத்தவரை அது அவர்களுக்கான உரிமை.. சுதந்திரம்.. ஆனால் அதன் பின் விளைவு எதிர்க்க இயலாத ஒரு குழந்தையின் மீதோ- ஒரு பலமற்ற பெண்ணின் மீதோ சில நேரம் அது ஒரு வயதான பெண்மணியின் மீதோ கூட பாலியல் வன்முறையாய் பிரயோகிக்கப்படும்... சமூக காரணங்களோ- பொது இடங்களில் பயமோ இப்படிப்பட்ட பெண்கள் உசுப்பி விடும் இச்சைகளை தீர்க்க இன்னொரு பெண்ணினம் தான் பலியாக வேண்டும்... பெண்கள் இதை உணர வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து

ரத்தத்துல ஊறினது

எனது பாட்டமுப்பாட்டனார் திரு அடைக்கலம் , எனது முப்பாட்டனார்... திரு. அண்ணாமலை.. எனது பாட்டனார்.. திரு.முத்துசாமி.., எனது தகப்பனார் திரு .நடேசன்... இப்படி வழி வழியாக வந்த தொப்புழ்கொடி உறவில் கடத்திவரப்பட்ட மரப்பணு க்களில் எங்களின் குலத்தொழிலான விவசாய அறிவு கலந்தே வந்திருக்கிறது...

ஒரு விவசாய கல்லூரியில் பயின்று வந்த தச்சு தொழிலாளியின் மகனை விட, ஒரு சலவை தொழிலாளியின் மகனை விட. ஒரு முடி திருத்துபவரின
் மகனை விட என்னால் விவசாயத்தை திறம்பட செய்ய முடியும்... ஏனென்றால் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் படித்து பட்டதாரியான அவர்களை விட மரபணுக்கள் மூலம் கொண்டுவரப்பட்ட என்னுடைய அனுபவ அறிவு மிக உயர்ந்தது...

ஆனால் வானம் பொய்த்துவிட்டதாலும்... ஏரி குளங்களை எல்லாம் கயவர்கள் திருடி விட்டதாலும், தண்ணீர், தொழிலாளர்கள் பற்றாக்குறையாலும், இடுபொருட்களின் விலை ஏற்றத்தாலும் ,முதலீட்டை விடவும் வருமானம் குறைந்துபோனதாலும் என்னால் அந்த தொழிலை தொடர முடியாமல் போய் விட்டது...

எனவே அப்போது மரபணுக்கள் வழியாக கடத்தப்பட்ட அடிப்படை விவசாய அறிவையும் வைத்துக்கொண்டு என்னுடைய தலைமுறையில் நான் என்னுடைய சிறுவயது தொட்டு சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கொஞ்சம் கொஞ்சமாய் கற்று வந்திருந்த கணிப்பொறி, ஆங்கிலம், இன்னபிற விஷயங்களை பயன்படுத்தி வருமானத்திற்கு வழி செய்திருக்கிறேன்..இதிலும் என்னுடைய நிபுணத்துவத்தை காட்ட நினைக்கிறன்..
அதே நேரம் விவசாயத்துறையில் என்னுடைய மரபணு வழி நிபுணத்துவத்தை பயன்படுத்தி என்னுடைய குலத்தொழிலை என்னால் செய்ய முடியுமானால்... அதற்கான வசதி வாய்ப்புகள் கிடைக்குமானால் நிச்சயமாக அதை நவீனப்படுத்தி 
என் பாட்டன் முப்பாட்டனை விட மிக திறமையாய் செய்ய முடியும்...

ஆனால் எனக்கு முற்றிலும் அறிமுகமே இல்லாத ஒரு விஷயத்தில் இரண்டு மூன்றாண்டுகளில் படித்து என்னால் நிபுணத்துவமடைய முடியுமா???
ஆகவே.. உங்கள் மரபணுக்களின் வழி கடத்திவரப்பட்ட திறமைகளை நவீனப்படுத்தும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்குமானால் அதில் கவனம் செலுத்துங்கள்.. அதனை தவிர்த்து புலியை பார்த்து சூடுபோட்டுக்கொண்டால் பூனை புலி ஆக முடியாது..!!!

தலைமுறை அஞ்சல் ஓட்டம் (RELAY RACE )

தடகள போட்டியில் தொடர் ஓட்டம்/அஞ்சல் ஓட்டம் (RELAY RACE ) என்றொரு விளையாட்டு இருக்கும்.. ஒரு நானூறு மீட்டர் சுற்றளவுள்ள வட்டமான ட்ராக்கில் ஒவ்வொரு நூறு மீட்டருக்கும் ஒரு நபர் வீதம் நான்கு பேர் கொண்டது ஒரு அணி... முதலில் தொடங்குபவர் ஓடி சென்று  தன்னுடைய கையில் இருக்கும் ஒரு குச்சியை இரண்டாவதாய் நிற்கும் தன அணியினரிடம் சேர்க்க வேண்டும்.. இப்படியாக அடுத்தவர்- அடுத்தவர் என்று அந்த குச்சியை தொடங்கிய இடத்திற்கே சேர்க்க வேண்டும்... இதில் யாரொருவர் வேகம் குறைந்தாலும் அடுத்தடுத்து இருப்பவர்கள் அந்த வேகத்தை ஈடு செய்ய வேண்டும்.. அதே நேரம் நம் கையில் குச்சி வந்தவுடன் அடுத்த நபரிடம் அந்த குச்சியை கொண்டு சேர்க்கும் முனைப்போடு ஓட வேண்டும்... மாறாக அந்த குச்சியை வாங்கிக்கொண்டு மெதுவாக நடந்து சென்றாலோ.. இல்லை.... தமக்கு முன்னால் நிற்பவர் ஓடிவந்து வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தாலோ.. ஒருவரின் தவறில் ஒட்டுமொத்த அணியும் தோல்வியைத்தழுவ வேண்டும்...

வாழ்க்கையும் இப்படித்தான்... அடுத்தடுத்த இடங்களில் நிற்பவர்கள் உங்களின் அடுத்தடுத்த தலைமுறை... உங்களது பொறுப்பில் ஒரு குடும்பம் வந்த உடன் அதனை நல்ல முறையிலும், நேர்மையான வழியிலும் , முன்னேற்றப்பாதையிலும் வழிநடத்தி உங்களின் அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்தால்தான் உங்கள் குடும்பம் சீரான வளர்ச்சியுடன் வெற்றி பெற்ற நிலையை அடைய முடியும்.. மாறாக.. உங்கள் தந்தையார் சம்பாதித்து வைத்திருக்கிறார் என்று நீங்கள் நிதானமாய் நடை போட்டால்.. உங்கள் தந்தையார் வேகமாய் ஓடிய ஓட்டமும் வீண்..... உங்கள் மகன் எவ்வளவுதான் ஓடினாலும் வெற்றிக்கோட்டை அடையவே முடியாது...

புகைபிடிப்பதை அறவே விட வேண்டும் - ரஜினிகாந்த்

புகைபிடிப்பதை அறவே விட வேண்டும் - திரு.ரஜினிகாந்த் அவர்கள்.

# இவர் நிஜமாகவே மனச்சாட்சி உள்ள நபரென்றால் புகையால் பாதிக்கப்பட்டோருக்காக 
ஒரு அறக்கட்டளை நிறுவ வேண்டும்.. 
ஏனென்றால் தமிழ்நாட்டில் எண்பதுகள் முதற்கொண்டு இன்று வரை சுமார் கால்நூற்றாண்டு
காலம் சிகரெட் பிடிப்பதை ஒரு ஸ்டைல் என்று வளரிளம் பருவ இளைஞர்களின் 
மனதில் விதைத்தவர் இவர்.. இவரை பார்த்து சிகரெட் பிடிக்க பழகியவர்கள் ஏராளம்.. 
இவர் எவ்வளவு நல்ல விஷயங்களை சொல்லி இருந்தாலும் கூட நல்ல விஷயத்தை விட 
கேட்ட விஷயம் தான் மக்கள் மனதில் பதியும்.. அந்த வகையில் இவர் உணராமல் 
மானுடத்திற்கே ஒரு பெரிய பாவத்தை செய்திருக்கிறார்... அறியாமல் செய்த பாவத்தை 
மன்னிக்கலாம் என்றாலும்.. அறிந்த உடன் அதற்கு தகுதியும், வசதியும் 
இருக்கும்பட்சத்தில் அதற்கு பிராயசித்தம் தேடுவது மனித குணம்..

ஜப்பானில் அணுகுண்டு வீசிய விமானி /ராணுவ அதிகாரி.. மேலிடத்தின் கட்டளையின் 
பேரில்தான் அதனை செய்தாரென்றாலும்.. அவரது கடைசி காலம் எப்படி இருந்தது என்பதை 
அவர் அவசியம் படிக்க வேண்டும்.

இவர் தமிழனா - கன்னடனா- என்பதெல்லாம் ஒதுக்கி இவர் முதலில் 
மனிதனாக நடந்தால் நலம்..

பேர்ல் ஹார்பர்

இரண்டாம் உலக யுத்தத்தின் போது அமேரிக்கா ஜப்பான் மீது ஹைட்ரஜன் அணுகுண்டுகளை வீசியதும்.. அதனால் கொத்து கொத்தாக அப்பாவிமக்கள் செத்தொழிந்ததும் அதன் பாதிப்பு இன்றளவும் இருப்பதையும் எல்லோருமே அறிவோம்... ஆனால் அமேரிக்கா பொழுது போகாமல் இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை...

பேர்ல் ஹார்பர் ( முத்து துறைமுகம்) என்றொரு பகுதியில் இருந்த அமெரிக்க ராணுவ முகாமை எந்தவித முன்னறிவுப்புமின்றி இரவோடு இரவாக யுத்த தர்மங்க
ளை எல்லாம் மீறி துவம்சம் செய்தது அப்போதைய இரண்டாம் உலக போரின் முக்கிய பங்குதாரராய் இருந்த ஜப்பான்... அதற்கான பழிவாங்கும் நடவடிக்கையாகவே அமேரிக்கா இதனை செய்ய துணிந்தது... இது மிகப்பெரிய குற்றமென்றாலும் அதை செய்ய தூண்டியது ஜப்பான் தான்....

நம்மை விட வலிமையா இருக்கும் சும்மா இருக்கவன சொரிஞ்சு விட்டா அடிதான் வாங்கணும்.. அதுவும் மரண அடி...

அப்பா..

அவர் பேரு நடேசன்...  கை கால்ல  நகக்கண் முளைச்ச காலத்துல இருந்து குடும்பத்துக்காக உழைச்சவராம்.. எனக்கும் அவருக்கும் பெரிசா சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் பேச்சு வார்த்தை  இருந்ததில்ல.
ஆனா அவர் பாசம் சொல்லாம இருக்கற விஷயமில்ல...  மாமா வீட்ல அம்மாயி இறந்து போயிட்டப்புறம் அம்மாதான் மாமா மூணு பேரையும் வளத்தாங்களாம் .. அதனால அம்மாவுக்கு மாமாங்க மேல தான் பாசம் பொங்கும்..  அக்கா  ரெண்டு பெரும் நானும் பள்ளிக்கூடம் போயிடுவோம்.. அம்மா மாமா வீட்டுக்கு போயிடுவாங்க. ஒவ்வொரு நாள் அவங்க அங்க தங்கிடுவாங்க. அன்னிக்கு அப்பா தான் சமையல்... வயல் வேலைய முடிச்சிட்டு இருட்டோட வீட்டுக்கு வந்து "இவ இன்னும் வரலையா நாளைக்கு வரட்டும்.. மொத்தமா அடிச்சு தொரத்திட்றேன்..."அப்படின்னு அம்மாவ நாலு திட்டு திட்டிட்டு சமைக்க ஆரம்பிச்சிடுவார்.. மொளகா ,மல்லி,மஞ்சள் ,சீரகம் எல்லாம் மெஷின்ல  அடிச்சு மாவாக்குற பழக்கமெல்லாம் இல்ல அப்போ.. எல்லாமே அப்படியே இருக்கும் அம்மில வச்சிதான் அரைக்கணும்.. "ரெடிமேட்  கொழம்பு வப்பமா.." ன்னு சொல்லிகிட்டே  மசாலா அரப்பார்... மறுநாள் அம்மா வெள்ளன  எந்திரிச்சு வீட்டுக்கு வந்துடுவாங்க. அப்பாவுக்கு ராத்திரி புள்ளைங்கள பார்த்ததும் வந்த கோபம் காணாம போயிருக்கும்..

எங்க ஊர்ல எல்லோருக்குமே விவசாயம் தான் பொழப்பு. எல்லோருக்கும் சொந்த நிலம் இருக்கும்.. சிலருக்கு நிறைய. சிலருக்கு கொஞ்சம்... ஆனா கண்டிப்பா எல்லோருக்குமே சொந்தமா பயிர்வைக்க  நிலமிருக்கும். எங்களுக்கும் இருந்துச்சு... கவனிங்க.. இருந்துச்சு...ஒன்னரை ஏக்கர். அதுல வரப்பு வெட்டுறது.. ஒழவு ஓட்டுறது.. சேரடிச்சு நாத்து விடறது.. உரம்போட்றது.. களை  எடுக்கிறது.. எல்லாமே அப்பா தான்.. நடவு நடுறது.. கதிர் அறுக்கிறது மாதிரியான பெரிய வேலைகளுக்கு தான் அப்பா ஆள் கூப்பிடுவார்...

காலைல எல்லோரும் டீக்கடைல டீய குடிச்சிட்டு ஒழவு ஓட்ட   மாட்ட புடிச்சுகிட்டு வயக்காட்டுக்கு போகும் போது அப்பா நூறு குழி நிலம் ஒரு ஓட்டு ஓட்டி முடிச்சிருப்பார்... ஒன்னரை ஏக்கருக்கும் ஒரே நாள்ல வரப்பு வெட்டுவார்... ஒரு பதினோரு மணி வாக்குல அம்மா டீ  வச்சி கொடுக்கும்.. அத எடுத்துகிட்டு சைக்கிள்ல  போனா ஏரிக்கரைல சைக்கிள நிறுத்தும்போதே அப்பா ஏர  நிறுத்தி மாட்ட இழுத்து கலப்பைல கட்டி வச்சிட்டு வந்துடுவார்.. டீய வாங்கி வச்சுகிட்டு "வெய்யில் சுடும்.. நீ போ.. நான் வரும்போது கூஜாவ எடுத்துட்டு வரேன்" அப்படிம்பார்... ஆனா அப்போ அது ஜாலியா இருக்கும்... ஆனா விவசாயிங்க பொழப்பு எல்லோருக்கும் தெரிஞ்சதுதான.. உழுவுறவன் கணக்கு பாத்தா உழக்கு கூட மிஞ்சாதுன்னு சும்மாவா சொல்லி வச்சாங்க... ஒன்னும் மிஞ்சல.. கிட்டத்தட்ட ஒரு பதினைஞ்சு வருஷ மெனக்கெடு... எங்கபக்கத்துல பெரும்பாலும் எல்லோருமே வெளிநாட்டு தொடர்போட இருந்தாங்க. ஆனா அப்பாவுக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிட்டவே இல்ல... எங்க ஆளுங்கள்ள  வரதச்சினை கொஞ்சம் அதிகம் ரெண்டு லட்சம் மூனுலட்சம் ரொக்கம்.. அப்புறம் நக நட்டு. பாத்திரம் பண்டம்.. அப்படி இப்படின்னு ஒரு தொகை ஆயிடும். ரெண்டு பொண்ண வச்சிருக்கோமே எப்படி கட்டிக்கொடுகிறதுன்னு பெரிய கவலை.. அப்படி இப்படி கெஞ்சி கூத்தாடி துபாய்ல இருந்த மாமா ஒரு விசிட் விசா வாங்கி கொடுத்தார். அப்பாவுக்கு பெரிய நிம்மதி.. எப்படியும் பொண்ணுங்கள கட்டி கொடுக்க காசு சம்பாதிசிடலாம்னு... அந்த நம்பிக்கையோட  அவரு பிளேன் ஏறினப்போ அவருக்கு வயசு நாப்பத்தஞ்சிக்கும் மேல ஆச்சு.. கொட்டி வழுக்கையா போனது போக மிச்சமிருந்ததுல முக்காவாசி முடி நரைச்சு போச்சு... தமிழ தவிர வேற பாஷை தெரியாது... தட்டு தடுமாறி ஒரு அஞ்சு வருஷம்.. துபாய்ல இருந்தார்...ஒரு பர்மனென்ட் விசாவும் கிடைக்கல..பெரிசா ஒன்னும் சம்பாதிக்கவும்  முடியல... ஒரு தோத்துப்போன மனுஷனா ஊருக்கு வந்து சேர்த்தார் . வந்தப்புறம் மனசுக்குள்ள ஏதோ ஒரு விரக்தியோ- ஏமாற்றமோ.இல்லை சுய பச்சாதாபமோ...அதிகமா யார்கிட்டவும் பேசல.. 
இதுக்கு நடுவுல நானும் சென்னை பக்கம் வந்தாச்சு .. பொங்க தீபாவளிக்கு ஊருக்கு போவேன்... நம்ம ஊருக்கு பஸ்செல்லாம் வராது.. எந்த பக்கம் வந்தாலும் மூணு கிலோமீட்டர் நடந்துதான் போகணும்.. அப்பா அப்போ சைக்கிள எடுத்துட்டு வருவார் அழைச்சிட்டு போக... அப்போ கூட இந்த பாவி மகன்.. அவர ஓட்ட சொல்லி உட்கார்ந்துகிட்டு போவேன்.... "வந்துட்டியாப்பா... நல்லா  இருக்கியா" என்பார்... ஓரிரு நாளில் மீண்டும் சென்னை கிளம்பும்போது.."கிளம்பவாப்பா?" என்று நான் சொன்னால் "ரெண்டு நாள் இருந்துட்டு போகக்கூடாதா.... பத்திரமா போ..." என்பார்.. இதுதான் எனக்கும் அவருக்குமான மணிரத்னம் ஸ்டைல் உரையாடல்கள் 
 
இதுக்கு நடுவுல இருந்த நிலத்துல  பாதிக்கும் மேல வித்து அக்கா ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணியாச்சு.. சின்னக்கா வீட்டுக்காரர் துபாய்ல இருந்தார்... அப்பா விட்ட போராட்டத்த நான் தொடங்கினேன் ஆமா வெளிநாட்டு போராட்டம்.. ஆனா அதுக்கான வாய்ப்பு மட்டும் கிடைக்காமையே இருந்துச்சு.. ஒரு வழியா எனக்கும் ஒரு விசிட் விசா... எங்க சின்னக்கா வீ ட்டுக்காரர் வாங்கித்தந்தார்  அப்பா எங்க தோத்துப்போய் வெளியேறினாரோ... அதே  இடத்துல நான் ஜெயிக்கணும்னு வெறி... அப்பா கொண்டுவந்து மெட்ராஸ் ஏர்போட்டுல விட்டுட்டு போனாங்க அவரோட எந்த செயல்ல்யுமே பாசம் மட்டும்தான் தெரியுமே தவிர வார்த்தையா எதுவுமே இருக்காது .நானும் துபாய் வந்தேன் போராடினேன்... ஒரு வழியா ஜெயிக்க ஆரம்பிச்சேன் ஊருல இருந்து தகவல் வந்துச்சு அப்பாவுக்கு ரொம்ப உடம்பு முடியலன்னு நானும் என்னமோ சாதாரணமாத்தான் இருக்கும்னு நினைச்சேன் ஆனா.. அப்புறம்தான் தெரிஞ்சுது அது சாதா ரணம் இல்ல ... சரிபண்ண முடியாத  ரணம்னு .. ம்ம்.... அப்பாவுக்கு கேன்சர் .. இப்போதான் பையன் ஓரளவுக்கு செட்டிலாகி இருக்கான்.. அவன்கிட்ட இப்போ சொல்ல வேணாம்னு மறைச்சுட்டாங்க... அப்புறம் அங்க பாத்தாங்க .. இங்க பாத்தாங்கன்னு  பாத்துகிட்டே இருந்தாங்க.. ஆனா கேன்சர் விடல.. ஒருநாள் சின்னக்கா போன்ல அழுதா. சின்னக்கா எதுக்கும் கலங்க மாட்டா... அவ அழுத ஒடனே எனக்கு பிரச்சினை ரொம்ப பெரிசா போச்சுன்னு தெரிஞ்சிடுச்சு. அப்புறம் நான் கிடந்து அழ.. துபாய்க்கு வந்த எட்டே மாசத்துல கொண்டு வந்த பொட்டியோட ஊருக்கு கிளம்பினேன் ..எட்டு மாசத்துக்கு முன்னாடி மலை  மாதிரி ஏர்போர்ட்டுல விட்டுட்டு போன அப்பா நைஞ்சு போன துணி மாதிரி கிடந்தார்... எல்லா டாக்டரும் கைவிட்ட நிலைமைல கண்ணுல மட்டும் உயிரை வச்சுகிட்டு எலும்புக்கூடா கிடந்தார்...  நான் ஊருக்கு வரேன்னு தெரிஞ்ச உடனே.. காலைல இருந்தே ரெண்டு கையையும் கூப்பி சாமிய கும்பிட்டுகிட்டே கிடந்தாராம்.. எம்பையன் வரவரைக்கும் நான் உயிரோட இருக்கணும்னு வேண்டி இருக்கலாம். அப்புறம் நானும் ஊருக்கும் வந்துட்டேன், நான் அவர்மேல சாஞ்சும்  அவர் என்கையா புடிச்சுகிட்டும் அழுது தீர்த்தோம்... ஒரு பதினாலு நாள்... நான் அவர் கூட இருந்தேன்... கிராமத்துல சொல்லுவாங்க. தீந்த பாடும் இல்ல.. தெளிஞ்ச பாடும் இல்லன்னு... அப்படித்தான் அவரும் கிடந்தார்... அவரோட வேதனைகள சொல்ல முடியாது... நம்மளோட பையன இப்படி தவிக்க விட்டுட்டோமேன்னு அவரோட மனசுக்குள்ள ஓடுனத அவரோட கண்ணீர் சொல்லிட்டே இருந்துச்சு... அந்த பதினாலு நாளும்.. ஒரு புள்ளையா நான்  செய்ய முடியுமோ.. அதெல்லாம் செஞ்சேன்.. வாந்தி எடுத்ததோ.. மலம் கழிச்சதோ.. எனக்கு எந்த அருவருப்பும் தரல ...எனக்கு எல்லாமே எங்கப்பாவுக்கு நான் சேவை பண்ண கிடைச்ச கடைசி வாய்ப்பா நினைச்சு செஞ்சேன்... 

எல்லா சொந்தக்காரங்க. ஊர் காரங்க எல்லோருமே சொன்னாங்க "நீ போயி இப்போதான் ஒரு நிலைமைக்கு வர முயற்சி பண்ணிட்டிருக்க. இப்போ இப்படி வந்து தங்கிட்டா இத்தன வருஷம் மெனக்கெட்டது வீணாயிடும்.. அதுக்குமேல கடவுள்கிட்ட பாரத்த விட்டுட்டு நீ கிளம்பு"ன்னாங்க.. பொருளாதாரம் மனுஷனுக்கு மனிதாபிமானத்தையோ பாசத்தையோ எப்படி அவனுக்குள்ளையே பொதைக்க வைக்குதுன்னு கண்கூடா உணர்ந்த தருணம் அது... நானும் கிளம்பி துபாய் வந்துட்டேன்... நான் வந்த நாலாவது நாள்.. அப்பா சாமிகிட்ட போயிட்டார்..  ஊர்ல ஒரே ஒருத்தர் கூட கெட்டவர்னு சொல்லாத அளவு எல்லோருக்கும் நல்லவரா இருந்த அப்பாவ மரணத்துக்கும் சீக்கிரம் பிடிச்சு போச்சு...

நான் துபாய்ல... இது மனுஷத்தனமா...?. பணம்தான் பெரிசான்னு இப்போ கேக்கலாம் ஆனா பிராக்டிகல் வாழ்க்கை வேற... நான் மறுபடியும் ஊருக்கு போறதுன்னா குறைந்த பட்சம் அம்பதாயிரம் ரூபா ஆகும் அதுக்கும் மேல நான் போயி அரைமணி நேரம் கூட அப்பாவ வீட்ல வச்சிருக்க மாட்டாங்க சோ... போகல.... ஒரு மகனா அப்பாவுக்கு செய்ய வேண்டிய எல்லாம் அந்த பதினாலு நாள்ல செஞ்சேன்.. அத அவர்  ஃபீல் பண்ணார்... அது போதும். இங்க இருந்து இத்தன செலவு பண்ணிக்கிட்டு போய்... "அந்த பையன் அப்படி அழுதான் இப்படி அழுதான்"னு..ஊருக்காரங்க வேணும்னா உச்சுகொட்டி மெச்சுக்குவாங்களே    தவிர அது அப்பாவுக்கு தெரியாது... ஆனா அந்த செலவுக்கு கடன் கொடுத்தவங்க பாவம் பாத்ததெல்லாம் தள்ளுபடி பண்ண மாட்டாங்க.

ஒரே மகனா அவருக்கு கடைசி கடமையா கொள்ளி போட  முடியாம போச்சேன்னு ஒரு உறுத்தல் இருந்தாலும்  கொள்ளி போட்டுத்தான் அவரோட மகன்னு சொல்ல வேண்டியதில்லையே.... அத விட நம்ம மகன் நம்மள தூக்கினான்... பார்த்தான்....எடுத்தான்னு அவர் உணர்ந்தார்.. அப்படிங்கற திருப்தி இருக்கு....

இதுதான் பிராக்டிகல்.. அதுக்கப்புறம் காரு.. வசதி... ஒரு பெரிய போஸ்டிங்.. எல்லாம் கிடைச்சாலும் அன்னிக்கு தளிக்கோட்டை பாலத்துல வந்து நின்னு சைக்கிள்ள மிதிக்க முடியாம மிதிச்சு கூட்டிட்டு போன அப்பாவ நான் பைக்லையோ.. கார்லயோ கூட்டிட்டு போகமுடியலன்ற வலி.. மனசு முழுக்க ஆறாத ரணமா என்னிக்கும் உறுத்தும்...

சமூக வலைத்தளங்களில் குடும்பதலைவிகள்

அக்கம்பக்கத்தில் பேச்சை குறைத்து  மக்களை.. குறிப்பாய் பெண்களை  வீட்டுக்குள்ளயே முடக்கின   காட்சி ஊடகங்கள் , இதன்  அடுத்த கட்டம்..இப்பொழுது படித்தவர்கள்  மத்தியில பிரபலமாகிகொண்டு  வரும்  சமூக வலைத்தளங்கள்... எத்தனயோ நல்ல விஷயங்கள் இருந்தாலும்.. ஒரு குடம் பாலில்  விழுந்த விஷம்  மொத்த நல்லதையும் நாசம் பண்ணுவது  மாதிரி..சில விஷயங்கள்...

இந்த காட்சி ஊடகங்களுக்கு பிறகு மனிதர்கள் வீட்டில் பேசிக்கொள்வதே குறைந்து போய் விட்டது..... யாரும் மனசு விட்டு பேசிக்கொள்வதில்லை  .. கணவனோ- மனைவியோ தங்களின் இணையுடன் பேசுவதில்லை.. பெற்றோர்கள் பிள்ளைகளிடமோ.. பிள்ளைகள் பெற்றோரிடமோ பேசுவதில்லை... ஆனால் பேசாமல் இருந்தால்தான் நாமெல்லாம் செத்துப்போவோமே..வாராது வந்த மாமணியாய் நம்ம கம்ப்யூட்டர் மூலமாகவோ...மொபைல் மூலமாவோ பக்கத்து வீட்டுக்காரன் /வீட்டுக்காரிய..பக்கத்து ஊரு காரன்  / ஊருக்காரிய... பக்கத்து நாட்டுக்காரன் / நாட்டுக்காரிய யாருக்கும் தெரியாம ரகசியமா படுக்கை அறை  வரை கூட்டிக்கொண்டு வர ஒரு வாசல் கதவு திறந்து வைத்து விட்டோம்  

பெரும்பாலானவர்கள் அதிலும் குறிப்பாக குடும்பத்தலைவிகள்.. இதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்  அவர்களை சொல்லியும் தப்பு இல்ல... பிள்ளைகள்  தலை முறை இடைவெளின்னு ஒதுங்கி விடுகிறார்கள்.புருஷனோ.. இந்த உலகமே தன்னுடைய  தலை மேலதான் நின்று  சுற்றுவது மாதிரி ஒரு நிநைப்புடனே இருக்கிறார்..... இவர்கள் யாரிடம் பேசுவார்கள்...???. சுவருடன்  பேச முடியாது... பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் பேச நேரமில்லை ... அவர்களுடைய எண்ணங்களையும்.. அவர்களின் இருப்பையும் அங்கீகரிக்க சமூக வலைத்தள நட்புகள் தான் சரி என்று நினைக்க தொடங்குகிறார்கள்.. அதற்கு தூபம் போடுவது போல இந்த வலைதளங்களில் வலை விரித்து காத்திருக்கும் தந்திர நரிகள் "காலை வணக்கம்" என்று ஒரு நிலை தகவலை பதிந்தால் பலாப்பழத்தில் மொய்க்கும் ஈக்களாய் ஓடி வந்து பதில் வணக்கம் பதிகிறார்கள். கண்டுகொள்ளாத கணவன்.... தலைமுறை இடைவெளியில் விலகும் பிள்ளைகள்.. இப்படிப்பட்ட ஒரு மன உளைச்சல் பின்னணியில் உழன்றவர்களுக்கு இது மாபெரும் அங்கீகாரமாக தெரிகிறது... 

அந்த குடும்பத்தலைவிகளை பொறுத்த வரை இது ரகசியமானது... தான் முன் பின் பார்த்திராத ஒரு ஆணுடன் பேசிக்கொண்டிருப்பது பக்கத்து வீட்டுக்கு கூட தெரியாது..  இதில் தொடுகையோ- வேறெந்த பாலியல் இடற்பாடுகளோ இல்லை... தேவை இல்லை என்றால் விலகி விடலாம் என்றும் நினைக்கிறார்கள்.. அதில் சிலர் இந்த நிலையையும் தாண்டி நேரடி சந்திப்பு.. தனிமை சந்திப்பு என்ற அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லும் போது சிக்கலில் தாமே போய் மாட்டிக்கொண்டு மீள முடியாமல் போகிறார்கள்.. அப்படி மீள முடியாமல் சிலர் காவல் துறைக்கும்.. சிலர் தற்கொலைக்கும் போகிறார்கள்..

சமூக வலைத்தளங்களில் நண்பர்களை தேர்ந்தெடுப்பவர்கள் மிக கவனமாய் இருத்தல் அவசியம்... எதிராளியின் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ள  வேண்டும்.. குறிப்பாக பெண்கள் ஒன்றை மிக தெளிவாய் புரிந்துகொள்ள வேண்டும்... தனக்கு தெரிந்த ராக்கெட் தொழில் நுட்பத்தை உங்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காகவோ..... உலகம் அமைதி பெற உங்களிடம் யோசனை கேட்பதற்காகவோ உங்கள் நட்பை யாரும் தேடவில்லை அவர்களின் நோக்கம்... ..................... சொல்லித்தெரிய வேண்டிய விஷயமில்லை 

உங்கள் கணவரோ பிள்ளைகளோ உங்களை அங்கீகரிக்க வில்லை என்று நினைப்பவர்கள் தான் பாதுகாப்பாய் அமர்ந்திருக்கும் வீடு... தன்னுடைய அடிப்படை தேவைகள்... வண்டி வாகனங்கள் .. நகை நட்டுக்கள்.... இதோ.. இந்த கட்டுரையை படிக்க உங்கள் எதிரிலோ கையிலோ இருக்கும் இணைய சாதனங்கள்.. எல்லாம் தந்தது அவர்கள் என்பதை மறக்க வேண்டாம்... உங்களுக்கு காலையில் கலை வணக்கம் சொல்வதையோ... உங்களை தினசரி பாராட்டுவதையோ.. உங்கள் எண்ணங்களுக்கு செவி சாய்ப்பதையோ அவர்கள் ஒரு சாதாரண நிகழ்வாய் எடுத்துக்கொண்டு தவிர்த்திருக்கலாம் ஆனால் நீங்கள் இல்லை எனில் அவர்கள் ஒரு பூஜ்ஜியம்... அது அவர்களுக்கு தெரியும்... அங்கீகரிக்க வில்லை என்று கவலை படாதீர்கள்.. நான் இல்லை என்றால் என் கணவனோ மக்களோ.. ஒரு நாள் கூட நிம்மதியாய் வாழ மாட்டார்கள் என்று கர்வப்படுங்கள்..

உங்களை அங்கீகரிக்கவில்லை என்று ஆதங்கப்படும் உங்கள் கணவனோ பிள்ளைகளோ... உங்களுக்கு அரணானவர்கள்.. உங்களை ஆஹா ஓஹோ... என்று புகழ்ந்தும் நீங்க அழகோ அழகு என்றும் அறிவோ அறிவு என்றும் புழுக்களை வைத்து தூண்டிலுடன் காத்திருப்பவர்கள் உங்கள் வாழ்க்கையை சிதைக்குமளவு முரணானவர்கள்..

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் தவறில்லை.. அதனை ஆக்க பூர்வமான வேலைகளுக்கும் தகவல் தெரிந்து கொள்ளவும்... தங்களின் மன ஓட்டங்களை பகிர்ந்துகொள்ளவும்  உபயோகிப்பதை வரவேற்கிறேன்.. ஆனால் அதை ஒரு செருப்பு மாதிரி அதன் எல்லையோடு நிறுத்த வேண்டும் இல்லை எனில் வீடு நாற்றமெடுக்கும்.

வேஷ்டி- சட்டை...


என்னை பொருத்தவரைக்கும் உலகத்துலையே கம்பீரமாவும் கம்ஃபோர்ட்டாவும் இருக்கிறது இந்த காஸ்டியூம் தான்... அப்பாவோட முழங்கால் அளவு உயரமா இருந்த போதே இந்த வேட்டிமேலான காதல் வந்துடிச்சு... அப்பாவோட துண்ட எடுத்து மூணு சுத்து சுத்தி இடுப்புல சொருகிட்டு அத மடிச்சுகட்டிகிட்டப்போதான் அந்த காதல் வெளிப்பட்டிச்சு...

வேஷ்டி.... அதுவும் வெள்ள வெளேர்னு தும்பைப்பூ கலர்ல கஞ்சி போட்டு மடமடன்னு கட்டிக்கிட்டு ஊர்ல இருக்க அப்பா அண்ணமாரெல்லாம் நடக்கும்போது நம்மையும் அறியாம ஒரு மரியாதையும். பயமும் பத்திக்கும்.. கட்சிக்காரங்க தன்னோட கட்சி விசுவாசத்தையோ- பெருமையையோ வேஷ்டி மூலமாத்தான் காட்டுவாங்க..


நானும் வளந்து மொதமொதலா வாங்கின வேஷ்டி.. அப்போ என்னோட மனச கவர்ந்திருந்த ரெண்டுகலர் கட்சி கரை போட்ட வேஷ்டிதான்... அத கட்டிக்கிட்டு நடந்தாலே ஒரு ராஜ நடை வரும்.. ஆனா அதே நடை லுங்கி கட்டினாலோ- பேண்ட் போடும்போதோ எங்கயோ போய் ஒளிஞ்சுக்கும்...


பண்னண்டாம் வகுப்பு படிச்சு முடிச்சு (??) பரீட்சை எழுத ஹால் டிக்கெட் வாங்க வர சொல்லி இருந்தாங்க அப்போ எங்க பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில தலைமை ஆசிரியரா இருந்த தேவாசீர்வாதம்.. சினிமால வர வில்லன் மாதிரியே இருப்பார்... அடியும் அப்படித்தான் இருக்கும்.. கண்ணு மண்ணு தெரியாம அடிப்பார்... அவர்தான் ஹால் டிக்கெட் விநியோகம் பண்ணார்... அந்த ஹால்டிக்கெட் வாங்க நான் நம்ம கம்பீர ஆடையான கரை வேஷ்டி கட்டிட்டு போயிருந்தேன்... எல்லோரும் வரிசைல நின்னு வாங்கினோம்... எனக்கு முன்னாடி வரிசைல பத்து பேருக்கு முன்னாடி நின்ன ஒரு பையன் வேஷ்டியோட இருந்தான்.... அட அட... நம்ம ஆசீர்வாதம் சார் அவன் உடம்புல மூங்கில் குச்சியால ஆடினாரு பாருங்க ஒரு கதகளி ... இத்தனைக்கும் அது ஊதாகலார்ல கரை போட்ட வேஷ்டி... கேக்கவா வேணும்.. நமக்கு உள்ளுக்குள்ள ஈரக்கொலை எல்லாம் நடுங்கி போச்சு.. அந்த வேஷ்டிக்கே இந்த அடி அடிக்கிறாரே கரைவேஷ்டி கட்டிட்டு போன என்னோட நிலைமை.??? ஹால் டிக்கெட்டாவது... பரீட்சையாவது.... உயிர் முக்கியம்டா செந்திலுன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு நைசா நழுவிட்டேன்.. அப்புறம் வயித்து வலி சார்னு சொல்லி மறுநாள்தான் ஹால் டிக்கெட் வாங்க போனேன் .. ஆனாலும் வேஷ்டி மீதான அந்த காதல் மட்டும் குறையவே இல்ல 


அதுக்கப்புறம் கல்லூரி- வெளிநாடுன்னு ஓடிட்டே இருந்ததுல வேஷ்டி கட்டுறதுக்கான சந்தர்ப்பங்கள் குறைச்சு போனாலும் கூட ஊருக்கு விடுமுறையில் வரும் நேரத்தில் எல்லாம் வேஷ்டிதான் என்னோட ஆஸ்தான வஸ்திரம்... கஞ்சி போட்டு மடமடன்னு கட்டி.. பச்சை பெல்ட (பெல்ட்)போட்டு இருக்க கட்டி.. ஒரு தலைப்ப தூக்கி பிடிச்சுகிட்டு நடந்தா.... நாட்டாமையாவது... சின்னகவுண்டராவது.. எல்லா அவதாரமும் நமக்குள்ள கிளம்பும்...


வேஷ்டில கரை பட்டுடுமோன்னு வசதியான இடம் இல்லன்னா உட்காராம கூட நின்னுகிட்டே இருப்பேன்... அதே வேஷ்டி சில நேரங்கள்ல போர்வையா கூட ஆகும்... என்னதான் சொல்லுங்க..வேஷ்டி வேஷ்டிதான்...

என்னுள் புதைந்த வாசனைகள்..

ஒருநாள் விகடனில் ராஜூ முருகனின் வட்டியும் முதலும் படித்தேன்... என்ன ஆச்சர்யம்... சில நாட்களுக்கு முன்தான் நானும் இதை பற்றி சிந்தித்து கிடந்தேன்.. எனக்குள் புதைந்த வாசனைகள் பற்றி...


அம்மாவின் புடவையில் இருக்கும் மசாலா... ஈரம் கலந்த ஒரு வாசம்... அது தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா கிராமத்து அம்மாக்களுக்கும் இருக்கும் ஒரு வினோத வாசம்...


அப்பாமீது எப்போதுமே வெற்றிலை வாசமும் வியர்வை வாசமும் படிந்துகிடக்கும்... எனக்கு கதை சொல்வதற்காகவே சிறுவர்மலரை படித்துவிட்டு நிலா வெளிச்சத்தில் கோரைப்பாயில் படுத்துக்கொண்டு தூங்கும் வரை கதை சொல்லும் சித்தப்பாவின் வாசம் இன்றும் மாறாமல்தான் இருக்கிறது...


புதினா வாசம் எனக்கு முதன் முதலாய் ஒரு பற்பசையில்தான் அறிமுகமாகி இருந்தது... அதற்கு பிறகு புதினா சட்னியோ- புதினா தொகையலோ சாப்பிட நேர்ந்தால் அது அந்த பற்பசை சாப்பிடும் உணர்வையே ஏற்படுத்தியது...


காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் குங்குமம் தருவார்களே.. அந்த குங்குமத்தில் மஞ்சள்வாசனை வீசும்.. ஆனால் எனக்கு அந்த வாசனை முன்னாலேயே அறிமுகமாகி இருந்தது... ஆம்... மஞ்சள் பொசிய என் மனைவியின் பின்கழுத்து.... காமாட்சி அம்மன் கோயில் பிரசாதம் என் மனைவியின் வாசனையை கொண்டு வந்ததே தவிர எனக்கு பக்தியை கொண்டுவரவில்லை என்பதை சொல்ல நான் வெட்கப்படவில்லை..


தாய்ப்பால் குடிக்காமல் யாருமே வளர்ந்திருக்கமுடியாது என்றாலும்.. அந்த வாசனையை நம்மால் உணரமுடியும்போது நிச்சயம் அம்மாவாகவோ- அப்பாவாகவோ அவதாரம் எடுத்திருப்போம்.. எனக்கும் அப்படித்தான். என்மகளை தூக்கி உச்சி முகர்ந்தபோது பால்வாசனையும் ஜான்சன் பவுடர் வாசனையும் பதிந்துபோனது.... அந்த பதிவுதான் எனக்கும் என் மகளுக்குமான நெருக்கமாய் இன்று வரை என் ஞாபக அடுக்குகளில் நிலைத்து கிடக்கிறது...


எனக்கான வாசனைகளை தொலைத்துவிட எத்தனையோ வாசனாதி திரவியங்களை பூசினாலும் எனக்கெண்டு இருக்கும் பிரத்தியோக வாசனையும்... காமம் கிளரும் என்னவளின் அக்குள் வாசனையும் பகிரங்கமாய் சொல்ல முடியா ரகசியமானவை..


கல்யாண மாலையில் இருந்த சம்பங்கி பூவாசனை திருமணம் நடந்த மண மேடையையும்... ரோஜா வாசனை .. அகால மரணமடைந்த நண்பனை தூக்கிக்கொண்டு சுடுகாட்டுக்கு சென்றதையும் நினைவில் கொண்டுவரும் பூவாசனைகள்...


புது துணி வாங்கிய உடன் அதனை மூக்கில் வைத்து ஆழமாய் உள்ளிழுக்கும் அந்த வாசனை நிரந்தரமாய் தங்குவதில்லை என்றாலும்.. அதை எல்லோருமே செய்கிறார்கள்.. 
இரண்டு சக்கரவாகனங்கள் அரிதாய் இருந்த காலத்தில் அது கடந்து சென்ற பின்னும் சில நேரம் காற்றில் கலந்திருக்கும் பெட்ரோல் புகை வாசனை..... ரசாயனங்கள் அதிகமாய் கலக்காத காலத்தில் பக்கத்து ஊரில் மழை பெய்வதை காற்றில் கொண்டுவரும் மண்வாசனை. . 
நிறைய வாசனைகளை நிகழ்வில் இழந்திருந்தாலும் நினைவில் இருந்து அனுபவிக்கமுடிகிறது...