சனி, 9 மே, 2015

மனிதர்களை படிப்போம்..

பணி நிமித்த பயணமாக துபாய் செல்ல நேர்ந்தது.. நண்பர் தோஹா விமான நிலையத்தில் இறக்கிவிட்டு இனிமையான பயணத்திற்கு வாழ்த்தி விடை பெற்றார்.. குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது காத்திருப்பு அறையில் இருக்கவேண்டுமென்பதால் உள் நுழையும் முன்பு ஒரு சிகரெட்டை பற்றவைத்து ஆழமாய் உள்ளிழுத்து நிதானமாய் புகைத்தேன்.. விமான நிலையத்தின் உட்பகுதியிலேயே புகைப்பதர்கென்று தனி இடம் ஒதுக்கி இருப்பதை அறிந்திருந்தாலும் அதற்குள் அமர்ந்து பலதரப்பட்ட பிராண்ட் சிகரெட் புகை மண்டலத்தில் மூச்சு திணறுமே தவிர ரசிக்கும் மனநிலை தவறிப்போய் விடுமென்பதால் அதனை அவ்வளவாய் விரும்புவதில்லை..
கடவுச்சீட்டு மற்றும் சுங்கச்சோதனையின் நீண்ட வரிசயில் காத்திருந்து அவைகள் முடிந்த உடன் காத்திருப்பு அறை நோக்கி நகர்ந்தேன்... 
என்னை ஏந்திச்செல்ல ஏதோ ஒரு அல்லாய் பறவை உள்ளே காத்திருக்கிறது..
ஒரு தோளில் உறுத்திய மடிக்கணினி பையையும் மற்றொரு புறம் உறுத்திய உடைகள் அடங்கிய பையையும் கீழிறக்கி ஆசுவாசப்படுத்திய பின் மடிக்கணினியை திறந்து முகநூல் பக்கத்தை திறந்தேன். திடீரென லேசாய் ஒரு ஞானம்.. இதைதான் தினசரி முறைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறோமே.. இன்று வேறு எதையாவது செய்யலாம்..
தலையை நிமிர்த்தி சுற்றுமுற்றும் பார்த்தேன்.. பலதரப்பட்ட , பல்வேறு நாடுகளை சேர்ந்த மனிதர்கள்.. ஒவ்வொருவர் முகங்களிலும் ஒவ்வொரு விதமான உணர்ச்சி வெளிப்பாடுகள்.. மொழிகள் தொலைத்த அந்த முகங்கள் பேசியவை ஒரு மனிதனால் புரியக்கூடிய பாஷை..
எதைபற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய அண்ணனை துரத்தி பிடிக்க ஓடிக்கொண்டிருக்கும் சிறுமி.. அவர்களை கண்காணித்தபடியே பர்தாவின் உள்ளிருந்து கண்காணிக்கும் தாயின் கண்கள்.... பக்கத்திலிருக்கும் மனிதனை புறக்கணித்து உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நண்பருடன், பெற்றோருடன், காதலி/காதலனுடன் வரி வடிவத்தில் கையிலிருக்கும் ஐ பேட்/ அலை பேசி/மடி கணினியில் வரிவடிவத்தில் உரையாடிக்கொண்டோ... இல்லை .. எதையும் தொலைக்காமல் ஏதோ ஒரு தேடலிலேயோ லயித்திருந்தார்கள்..
சில பல ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரையோ- மனைவியையோ- அப்பா என்று உணரும் முன்பே விலகி வந்து விட்ட குழந்தையையோ பார்க்கபோகும் ஆர்வம் கொப்பளிக்க சிலர்..
தன்னுடைய- தான் வேலை செய்யும் நிறுவனங்களை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த கோட் மனிதர்களின் தீவிர முகங்கள்..
பழுப்பேறிப்போன நாவல் புத்தகங்களில் தலை கவிழ்ந்திருந்த சிலர்..

நான் மனிதர்களை படித்துக்கொண்டிருக்கிறேன்.. ஆம்.. படிப்பதற்கு மனிதர்களை விட வேறு ஏதேனும் பெரிய விஷயம் இந்த உலகில் இருக்கிறதா என்ன???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக