சனி, 9 மே, 2015

மானுட தீவிரவாதம்

நினைக்கவே பதறும் ஒரு காரியத்தை செய்து இருக்கிறது ஒரு ராட்சஷ கும்பல். ஓடும் பேருந்தில் ஒரு துணையுடன் வந்த பெண்ணை அந்த துணையை அடித்துப்போட்டு தனிமை படுத்தி தமது காம இச்சையை தீர்த்துக்கொண்டிருக்கிறது... ஊடகங்களை பொருத்தவரை இது ஒரு பரபரப்பான செய்தி.... அரசியல் வாதிகளை பொருத்தவரை அவர்கள் ஆளும்கட்சியே இருந்தால் ஒரு தலை வலி. எதிர்கட்சியாக இருந்தால் ஆளும் கட்சியை தூற்ற கிடைத்த ஒரு சந்தர்ப்பம்..

ஆனால் கசக்கி சாலையில் எறியப்பட்ட அந்த பூவின் நிலை???





உலகத்திற்கே கலாச்சாரத்தை கற்றுக்கொடுத்த நாட்டின் தலைநகரத்தில் அரங்கேறி இருக்கும் இந்த கொடூரம் நாட்டில் இருக்கும் சாமானிய மக்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது.. இதற்கு முன் இப்படியான பாலியல் வன்கொடுமைகள் நிகழாமல் இல்லை. ஆனாலும்.. ஒரு பரபரப்பான நகரத்தின் பரபரப்பான சாலையில் இப்படி ஒரு சம்பவம் அதுவும் 9.00 மணி முன்னிரவில்..


யார் இந்த தைரியத்தை கொடுத்தது??? கொஞ்சம் நிதானமாக யோசித்தால் எவ்வளவு பெரிய கலாச்சார சீரழிவில் இந்த நாடு சிக்கி சீரழிந்து சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறது என்பது விளங்கும்..


முதலில் இதை பெண்களுக்கு எதிரான விஷயமாக பார்ப்பதை தவிர்த்து மானுடத்திற்கு எதிரான விஷயமாக பார்க்க வேண்டும். அந்த ராட்சசர்கள் யாரும் சோதனை குழாயில் உருவானவர்களோ- அல்லது இரண்டு ஆண்களுக்கு பிறந்தவர்களோ அல்ல... நிச்சயம் அவர்களும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர்கள்.. ஒரு சகோதரியோ அல்லது மனைவியோ அல்லது மகளோ எதோ ஒரு பெண்ணுடன் தொடர்புடையவர்கள்.. 


ஆனால் இந்த சம்பவத்தில் அவர்கள் ஒரு பெண்ணை ஒரு மனுஷியாக கூட பார்க்க தவறியது எப்படி.. அந்த மனித தன்மை அவர்களுக்குள் அறவே இல்லாமல் போனதெப்படி?


முதலில் பெண்ணியவாதிகளும் , பெண்களுக்கான அமைப்புகளும் இதற்காக போராடுவதே என்னை பொருத்தவரை ஒரு அவமானமான செயல். இதில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருமே பாதிக்கப்படும் பாலியல் தீவிரவாதம் . தீவிர வாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என உலகிற்கு அறைகூவல் விடுப்பதில் ஒன்றும் பலனில்லை . இந்த மானுட தீவிரவாதத்தை ஒழிப்பதில் காட்டவேண்டும் 


மத்திய உள்துறை அமைச்சர் திரு சுஷில் குமார் ஷிண்டே அவர்கள் இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்று மக்களவையில் அறிவிப்பது எவ்வளவு மெத்தனமான செயல்.?? 
ஒரு இடத்தில் குண்டு வைத்தவனையோ மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப்பையோ கூட பிடித்து வைத்து விசாரிக்கலாம் அவர்களின் பின்னணி என்ன.. அவர்களை யார் தூண்டுகிறார்கள் அவர்களின் எதிர்கால திட்டங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளும் நோக்கம் இருக்கிறது... அதற்காக அப்பாவி மக்களின் வரிப்பணம் ரூபாய் முப்பது கோடி செலவு செய்ததை கூட மன்னிக்க தயாராக இருக்கிறோம்..
ஆனால் இப்படி ஒரு படுபாதக செயலை செய்தவர்களிடம் விசாரிக்க என்ன இருக்கிறது...???


இப்படிப்பட்டவர்களை பொது இடத்தில் தூக்கிலிடுவதன் மூலமே இது போன்ற ஒரு எண்ணம் கூட மனதில் முளைக்காமல் இருக்க காரணமாயிருக்குமே தவிர சட்ட திருத்தமோ , விசாரணையோ பலன் தராது.


வழக்கமாக தீவிரவாதிகளை தூக்கிலிடும்போது மட்டும் கூக்குரலிடும் மனித உரிமை அமைப்புகள் இப்போது எங்கே போயிருக்கிறது?? 
இந்த ராட்சஷர்களை இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் சிறையில் வைத்து ஆமை வேக விசாரணையில் தூக்கு தண்டனை கொடுக்க முன்வந்தால் அப்போது இந்த பரபரப்பெல்லாம் ஆறிப்போயிருக்கும் .. அப்போது மனித உரிமை அமைப்பு "மரணதண்டனையா அதெல்லாம் கூடவே கூடாது" என்று கிளம்பி வருவார்கள் .


கடவுள் இப்போதெல்லாம் மனிதர்களை படைப்பதில் சில பங்கை சாத்தானுக்கும் கொடுத்திருக்கிறார் போல இருக்கிறது... சாத்தானின் படைப்புகள்தான் இந்த தீவிரவாதிகளெல்லாம். அவர்கள் குண்டு வைப்பவர்களாயினும் சரி இதுபோன்ற பாலியல் தீவிரவாதிகளா யினும் சரி... இந்த சாத்தானின் படைப்புகளை களை எடுப்பதில் எந்தவித மெத்தனமும் காட்ட கூடாது.. மனித உரிமை ஆர்வலர்கள் முதலில் மனிதனை இனம்காணும் திறனை வளர்த்துக்கொண்டு பிறகு போராட வர வேண்டும்.. ராட்சஷர்களுக்காக போராடுவதை கைவிட வேண்டும்..


அதே நேரம் மேலை நாட்டு கலாச்சாரம்.. என் உரிமை என்றெல்லாம் சில பல வாழ்க்கையில் தோற்றவர்களும் கார்பொரேட் நிறுவனங்களும் உசுப்பி விடும் ஆடை கலாச்சாரம்.. புரிந்துகொள்ளாத பெண்ணுரிமை இதை எல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு நம் கலாச்சாரம் கற்றுக்கொடுத்திருக்கும் அடிப்படை நாகரீகத்தை பின்பற்ற பெண்களும் முன் வர வேண்டும்.

என்னுடைய சுதந்திரம் என்று கவர்ச்சியான ஆடை அணிந்து செல்லும் ஒரு பெண் இதுபோன்ற உணர்சிகளை அடக்க முடியாத ராட்சஷ ஜென்மங்களின் பாலியல் சிந்தனைகளை தூண்டி விட்டு செல்கிறார்கள்... அவர்களை பொருத்தவரை அது அவர்களுக்கான உரிமை.. சுதந்திரம்.. ஆனால் அதன் பின் விளைவு எதிர்க்க இயலாத ஒரு குழந்தையின் மீதோ- ஒரு பலமற்ற பெண்ணின் மீதோ சில நேரம் அது ஒரு வயதான பெண்மணியின் மீதோ கூட பாலியல் வன்முறையாய் பிரயோகிக்கப்படும்... சமூக காரணங்களோ- பொது இடங்களில் பயமோ இப்படிப்பட்ட பெண்கள் உசுப்பி விடும் இச்சைகளை தீர்க்க இன்னொரு பெண்ணினம் தான் பலியாக வேண்டும்... பெண்கள் இதை உணர வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக