சனி, 20 ஜூன், 2015

வாங்க ஜெயிக்கலாம் - 2

படிக்காதவர் / படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு
***************************************************

பல்வேறு காரணங்களால் படிப்பை தொடர முடியாமல் போனவர்கள் சமகாலத்தில் "உருவாக்கப்படும்" பொறியாளர்களை கண்டு சற்றே மிரண்டு போயிருப்பது உண்மை... யாரப்பாத்தாலும் எஞ்சினியருக்கு படிச்சிருக்காங்க.. நாம எப்படி இவங்களோட போட்டி போட்டு வாழறது... என்ற பயம் உள்ளுக்குள் இருப்பதை நன்றாகவே உணர முடிகிறது...

அப்படியானால் இந்த உலகத்தில் படித்தவர்கள்- பட்டம் பெற்றவர்கள் மட்டும் தான் வாழ முடியுமா.. மற்றவரெல்லாம் வாழவே முடியாதா.. என்றால்... "ஏன் முடியாது.... அவர்களை விட படிக்காதவர்கள் தான் நன்றாக, நிம்மதியாக வாழலாம்..." என்றுதான் சொல்வேன் நான்...


ஒரு சர்ச்சிற்கு புதிய பாதிரியார் ஒருவர் வந்தார். அவர் நிர்வாகத்திற்கு வந்ததும் தன்னுடைய நிர்வாகத்தில் பணிபுரியும் எல்லோருக்கும் குறைந்த பட்சம் 10ம் வகுப்பு அளவிற்காவது கல்வி அறிவு வேண்டும் என்று நினைத்தார்... அந்த சர்ச்சில் மணியடிக்கும் வேலை செய்து வந்த ஒருவனுக்கு படிப்பறிவு எதுவும் இல்லை.. ஆகவே அவனை வேலையில் இருந்து நிறுத்திவிட்டார்... வெளியில் சென்ற அவன் கையை பிசைந்துகொண்டு நிற்காமல் கிடைக்கும் வேலைகளை செய்து கொஞ்சம் பணம் சேர்ந்தது மிக சிறியதாக ஒரு பெட்டிக்கடை தொடங்கினான்.. வியாபார சிந்தனை மட்டுமே இருந்தது அவனுக்கு... தன்னுடைய தொழிலில் இருந்த கவனமும் புதிய யுக்திகளும் நாளடைவில் அவனை ஒரு பெரிய சூப்பர் மார்கெட் அதிபராக்கியது...
ஒரு சூப்பர் மார்க்கெட் பல சூப்பர் மார்க்கெட் ஆனது... அந்த ஊரின் பெரிய செல்வந்தர்களுள் ஒருவரான அவர் அந்த ஊரின் சர்ச்சிற்கு 2 லட்ச ரூபாய் நன்கொடையாக கொடுத்தார் .. அந்த சர்ச்சின் பாதிரியார் அந்த செல்வந்தரை சந்திக்க ஆசைப்பட்டு வந்து பேசிகொண்டிருந்த பொது பேச்சு படிப்பு விஷயமாய் திரும்பியது... "நீங்கள் என்ன படித்திருகிறீர்கள் " என்று பாதிரியார் கேட்க.. அந்த செல்வந்தர் "நான் எதுவும் படிக்கவில்லை" என்றார்.. பாதிரியாருக்கோ மிகுந்த ஆச்சர்யம்... "படிக்காமலேயே இவ்வளவு பெரிய தொழிலை நடத்துகிறீர்கள் என்றால் படித்திருந்தால் எவ்வளவு பெரிய ஆளாக வந்திருப்பீர்கள்.." என்றார்..
அப்போது செல்வந்தர் சொன்னார்.."நான் படித்திருந்தால் இதே மாதாகோயிலில் மணியடித்துக்கொண்டு தான் இருந்திருப்பேன்..." என்று பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்தார்...

இந்த கதையில் ஒரு விஷயத்தை நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும்... ஆரம்பத்தில் "அவன்" "இவன்" என்று எழுதப்பட்டிருக்கும்.. கடைசியில் "அவர்"இவர்" என்று முடிக்கப்பட்டிருக்கும்...
இதற்கு காரணம் அவரது படிப்பு அல்ல... அவர் இந்த சமூகத்தில் இருக்கும் நிலை.. அவரின் பொருளாதார வளம் அவருக்கு அந்த மரியாதையை ஈட்டி தந்திருக்கிறது..
இன்றைய கல்வி முறையில் எஞ்சினியர்கள் என்பவர்கள் ஒரு சேணம் கட்டிய குதிரை போல தான் இருக்கிறார்கள்... எஞ்சினியரிங் என்பதை ஒரு கவுரவமாகவே நினைகிறார்கள்.. வெறும் மதிப்பெண்னுகாக மட்டும் படித்து சான்றிதழ் என்ற ஒரு பேப்பருடன் வேலை தேடி அலைகிறவர்கள் தான் நிறைய... இவர்கள் மனப்பாடம் செய்து பதிய வைத்த விஷயங்களை தவிர மற்ற விஷயங்களில் பின்தங்கியே இருக்கிறார்கள்...

இவர்களுக்கு கல்வி முப்புறமும் சுவர் வைத்து ஒரு பக்கம் மட்டும் வாசல் வைத்து கட்டப்பட சிறு அறை மாதிரி.. அந்த சிறு கதவின் வழியாகத்தான் இவர்கள் உலகை பார்க்க முடியும்...ஆனால் படிக்காதவர்களுக்கு அப்படி எந்த கட்டுப்பாடுகளும் இல்லை... இவர்களுக்கு சுவர்கள் இல்லாத உலகம் திறந்தே கிடக்கிறது... இவர்களுக்கு தேவை.. "நம்மால் முடியும்" என்ற ஒரு நம்பிக்கை மட்டுமே...

படித்து பட்டம் பெற்றவர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் மாத ஊதியத்திற்கு பணி புரியவே விரும்புகிறார்கள்.. சவால்களை சந்திக்க இவர்கள் தயாராக இல்லை... மேலும் ஒரு பட்டமோ- பட்டயமோ பெறுவதற்கு இன்றைய காலத்தில் லகரங்களில் முதலீடு செய்ய வேண்டும்.. அப்படி லகரங்களில் முதலீடு செய்து அவர்கள் படிப்பை முடித்து வெளியே வருகையில் அவர்கள் கையில் ஒரு சான்றிதழ் காகிதமும், கடனும் தான் மிச்சமிருக்கும்..


படிக்காதவர்களுக்கு அப்படி எந்த பிரச்சினையும் இல்லை... புத்தக படிப்பு நமக்கு வரவில்லை என்று தெரிந்துவிட்டால் மறுபடி மறுபடி அதற்காக செலவு செய்து போராடுவது வீண்.... மாறாக நமக்கு வேறு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் நமது கவனத்தை திருப்ப வேண்டும்.... பிள்ளை படிக்கவில்லை என்று அவனை கருத்து கொட்டாமல் அந்த பிள்ளைக்கு வேறு எந்த துறையில் ஆர்வமிருக்கிறதோ அதில் செல்ல பெற்றோர் அனுமதிக்க வேண்டும்...
படிப்பால் பெற்ற அறிவு என்பது உபயோகிக்காமல் இருக்கும் பட்ச்சத்தில் மறந்து போய் விடும் வாய்ப்புகள் அதிகம்... ஆனால் அனுபவத்தால் பெரும் அறிவு ஓரிரண்டு முறை தோல்வியை சந்தித்த பின் கற்றதாகையால் அது ஞாபக நினைவடுக்குகளில் அழுத்தமாய் பதிந்திருக்கும்...

அதில் மேலும் ஆர்வமுடம் செயல் படும்போது புது புது வழிமுறைகளை கண்டறியலாம்... அதனை வியாபாரமாக்கும் தந்திரத்தையும் கற்றுவிட்டால் நமக்கான எதிர்காலம் வாலை குழைத்துக்கொண்டு ஓடி வரும்...
ஆகவே படிப்பு என்பது ஒரு கூடுதல் தகுதியே தவிர.. படிப்பு மட்டுமே தகுதி இல்லை...
படித்தவர்கள் மட்டும் தான் வெற்றி பெறுவார்கள் என்பதில்லை... சாதனைக்கு படிப்பு மட்டுமே தகுதியும் அல்ல....

படிக்கவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையை அகற்றுங்கள்... உங்களுக்கான கதவுகள் திறந்தே கிடக்கிறது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக