சனி, 20 ஜூன், 2015

தரவரிசை- ஒரு வியாபார யுக்தி

பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை நீதிமன்ற உத்தரவுக்கேற்ப அண்ணா பல்கலை கழகம் வெளியிட்டிருப்பது வரவேற்க தக்க விஷயமே....

அதேநேரம் என் போன்ற சாமானியனுக்கு சில சந்தேகம் எழுவதை தடுக்கவே முடியவில்லை..


கல்வி என்பதே கார்பொரேட் கம்பெனிகள் போன்ற வியாபாரமாகிப்போன இந்த காலத்தில் இந்த தரவரிசை எவ்வளவு நியாயமாக இருக்கும்.. எதிர்காலத்தில் இந்த தரவரிசை பட்டியலின் முன்னனியில் வர கல்வி குழுமங்கள் என்னவெல்லாம் தகிடு தத்தங்கள் செய்யும்??
நாமக்கல் பகுதியில் 12 ம் வகுப்பு பொது தேர்வில் மாநில இடங்களை கைப்பற்றுவதன் மூலம் "இங்கே படித்தால் ஸ்டேட் ரேங்க் நிச்சயம்" என்ற மாயையை ஏற்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பில் 450 க்கு மேல் மதிப்பெண் வாங்கிய மாணவர்களை விலைக்கு வாங்கி அவர்களை ஆலையில் இடும் கரும்பாக பிழிந்து இன்று அந்த மாயையை ஏற்படுத்துவதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்... மேலும் அங்கு பயிலும் மாணவர்கள் தேர்வெழுதும் போது அவர்கள் காப்பி அடிக்கவும் புத்தகத்தை பார்த்து எழுதவும் அந்த பள்ளி நிர்வாகமே உதவியதையும் கடந்தகால செய்திகள் தெளிவாக சொல்கின்றன..


இதே போல இன்று பொறியியல் கல்லூரிகளின் தர வரிசையில் முதலிடம் வருவதற்காக.. அதன் மூலம் கல்வி வியாபாரத்தில் சீட்டுகளின் விலையை உயர்த்தும் நோக்கில் அப்படியான ஒரு செயலில் கல்லூரி நிர்வாகம் ஈடுபடாது என்பதற்கான எந்த உத்திரவாதமும் இல்லை....
மேலும் இந்த தரவரிசைக்கு அவர்கள் பரிசீலித்த விஷயங்கள் - கல்லூரியில் தேர்வெழுதியவர்கள்- அதில் தேர்ச்சி பெற்றவர்கள்- தேர்ச்சி சதவிகிதம் -மதிப்பெண் விகிதம் , இத்துடன் கட்டிட வாகன, உறைவிட வசதிகள்... 
மழைக்கால புற்று போல் முளைக்கும் பொறியியல் கல்லூரிகளை புற்றீசல் போல் பயின்று வெளிவரும் மாணவர்கள் தகுந்த திறமையோடு வெளிவருகிறார்களா?? இவர்களுக்கான வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கிறது.. அப்படி வேலை கிடைத்து சேர்ந்தவர்களில் எத்தனை பேர் ஜொலிக்கிறார்கள். திறமையான நிபுணர்களாக திகழ்கிறார்கள் என்பதை எல்லாம் கணக்கில் எடுக்கவே இல்லை...


இன்று எத்தனையோ பொறியாளர்கள் "டிகிரி" வாங்கி கையில் வைத்துக்கொண்டு அடிப்படை செயல் திறன் இல்லாமல், சுய சிந்தனை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை....


வெறும் தேர்ச்சி விகிதத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு கொடுக்கப்படும் தர மதிப்பீடு மேலும் அவர்களின் வியாபாரத்தை பெருக்கவும் , பெயரளவில் மட்டும் பொறியாளர்களை உருவாக்கவும் மட்டுமே பயன்படுமே தவிர உலக தரமிக்க , நிபுணத்துவம் பெற்ற பொறியாளர்களை உருவாக்க எந்த விதத்திலும் பயன் படாது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக