சனி, 20 ஜூன், 2015

எங்களூர் சாலையின் சரித்திரம் !!!!

பச்சை கம்பளத்தில் படுத்து நெளியும் கருப்பு மலைப்பாம்பாய் வளைந்திருக்கும் இந்த தார்சாலையில் என்ன இருக்கிறது....??? தார்.... கருங்கல் சரளைகற்கள்... செங்கப்பி.... மண்தரை..... அதற்கும் கீழே.. 

உயிர் இருக்கிறது... இருபது பேரின் இளமை இருக்கிறது.. அவர்களின் இந்திரியம் இருக்கிறது.. அவர்கள் தொலைத்த அடுத்த தலைமுறை  இருக்கிறது... 
ஆம்.. இந்த சாலையின் அடித்தளம் இருபது பேரின் இளமையை காவுகொடுத்து கட்டப்பட்டிருக்கிறது....

அதெப்படி.....??? . இந்த சாலையின் சரித்திரம் தெரிந்ததும் என் கண்களில் நீர் பூ பூத்தது.... நிச்சயம் அந்த நினைவலைகளை மீட்டெடுத்தால் உங்கள் கண்களிலும் பூக்கும்...

 


எங்களூரின் வரலாற்று பக்கங்களில் கனமாய் பதிவு செய்யப்பட வேண்டிய அவர்களின் தியாகம் எங்கும் பதிவு செய்யப்படாமல் போனது வருத்தமான விஷயமே....


நாற்புறமும் ஏரி சூழ் கிராமம் எங்களுடையது... எல்லோருக்குமே சொந்தமாய் விவசாயம் உண்டு... பருவம் தவறாமல் பொழியும் வானம்.... நிரம்பி வழியும் ஏரி -குளங்கள்... முப்போகம் விவசாயம்.... சற்றே பள்ளக்கால் பகுதியான எங்களூர் தான் மேட்டு நிலங்களின் வடிகால்.... பன்னிரெண்டு மாதங்களும் மேட்டுநில வடிகால் நீர் எங்களூரை நனைத்துக்கொண்டோடும்.... இன்றைய தார்சாலை அன்றைய சேறு சாலையாக எப்போதுமிருக்கும்...

ஊரை சுற்றி இருக்கும் விளை நிலங்களில் விளைந்தவற்றை வீட்டிக்கு கொண்டுவரவும்... இடுபொருட்களை வயல்களுக்கு சேர்ப்பிக்கவும், விற்பனைக்கு அருகில் இருக்கும் சிறு நகரமான மதுக்கூர் கொண்டு செல்லவும் இந்த சேறு சாலையே பிரதான வழி....
காளை மாடுகள் பூட்டிய கட்டை வண்டிகள் இந்த செற்றுப்பாதையில் சிக்கிக்கொள்வதால் போக்கு வரத்து என்பது பெரிய போராட்டமாய் இருந்தது....


எங்களூருக்கு அப்போது எங்கள் பகுதியில் "ஈழ வெளி செலமங்காடு " என்றே வழக்கு மொழி செல்லப்பெயர்... (ஈழை - நீர்பிடிப்பும் சகதியும் நிறைந்த பகுதி....ஈழம் என்ற வார்த்தை கூட இவ்வாறான நிலப்பரப்பின் காரணமாய் வந்திருக்கலாம்)
இந்த சேறு சாலையை கப்பி சாலையாக மாற்ற அரசாங்கத்தை அணுகினார்கள்....

அது அறுபதுகளின் இறுதி...
"முப்பதுகோடி முகமுடையாள் அறுபது-எழுபது கோடி முகமுடையாளாக மாறி மக்கள் தொகை பெருக்கத்தால் திணற... அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்த நேரம் அது... அப்போது எங்களூர் சாலையை மாற்ற அரசு ஒரு நிபந்தனை விதித்தது.......அந்த நிபந்தனை எங்களூர் மக்களை உறைய செய்தது...


இருபது பேர் குடும்பக்கட்டுப்பாடு செய்ய சம்மதித்தால் இந்த நிதியாண்டிலேயே இந்த சாலையை மாற்றி தர சம்மதிக்கிறோம்...

குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை என்பது.. விஞ்ஞான வளர்ச்சியில் இன்று வேண்டுமானால் எளிதாய் போயிருக்கிறது.... ஆனால் அன்றைய நிலையில் அது உயிருக்கு உலை வைக்கும் விஷயமென்ற நம்பிக்கை ஆல மரமாய் வேரூன்றி இருந்த காலம்... சாலை அவசியம் தான்.. ஆனால் உயிரை பணயம் வைக்க முடியுமா..... 


சாலை அவசியம் தான்... எம் தலைமுறை செழிக்க.... எம் ஊர் உயர.... எங்களை பணயம் வைக்கிறோம் என்று முன்வந்தார்கள் 20 பேர்... 

அவர்களின் இளமையை காவு கொடுத்து குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முடிந்த பின் தான் அரசு அதற்கு நிதி ஒதுக்கியது.... அந்த சேறு சாலை காப்பி சாலையாய் புது அவதாரமெடுத்தது.. பின்நாளில் காட்சிகள் மாறி.. ஆட்சிகள் மாறி.. அந்த கப்பிசாலை தார் சாலையாய் பச்சைக்கம்பளதிற்கு மத்தியில் நெளிகிறது..

அந்த தியாகிகள் பெயர்கள் பின்வருமாறு....

1.திரு.பொன்னன் ஆசாரி..
2.திரு.சீனு மாதுராயர்.
3.திரு.ராமசாமி வேளாளர் (புது வீடு)
4.திரு.அண்ணாமலை வேளாளர் ( அய்யாவேளாமூடு )
5.திரு.கோவிந்தராஜ் (மணியார் வீடு)
6.திரு.மாவட்டம் என்கிற பன்னீர் செல்வம்
7.திரு.சொக்கன்.
8.திரு.பொதியப்ப கண்டியர்
9.திரு.நடேச வேளாளர் ( கீழ வீடு)
10.திரு.ரெங்கசாமி வேளாளர்(காத்தாயி வீடு )
11.திரு.சின்னு வேளாளர் (மணியார் வீடு)
12.திரு.வேலாயுத வேளாளர் ( அடைக்கல வேளாமூடு )
13.திரு.சின்ன வீரப்ப வேளாளர் ( அருணாசல வேளாமூடு )
14.திரு.வேலாயுத வேளாளர் (கருத்தண்டியாமூடு)
15.திரு.சந்திரேசன் ஆசாரி..
16.திரு.ராமன் முத்தரையர்..
17.திரு.கிருஷ்ண சாமி செட்டியார்
18.திரு காத்தமுத்து வேளாளர் (அய்யாவேளாமூடு)
19.திரு.ப சொ .அப்பாவு வேளாளர் (புது வீடு)
20.திரு.வேலாயுதம் கண்டியர்

இந்த பட்டியலில் அவர்கள் சார்ந்த சமூகத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டிருபதன் முக்கிய காரணம்... எங்கள் ஊரில் அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவும்... எல்லோருடைய பங்களிப்புனும் அந்த சாலை உருவாகி இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவும் மட்டுமே....


பொது நலனுகாய் இன்னொரு தலைமுறை உருவாக்கும் இளமையை தொலைத்த இவர்களில் இருந்து உருவான சமுதாயம் எப்படி உருவாகாத மூன்றாவது தலைமுறைக்காக எடுத்து வைத்துக்கொண்டு மிச்சமிருக்கும் பணத்தில் சாலை அமைக்கும் சுயநலமாய் மாறிப்போனது....??


எங்கு தொலைத்தோம் நம் மனிதாபிமானத்தை....?????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக