செவ்வாய், 28 ஜூலை, 2015

கீதாரி



எங்கள் தஞ்சை மாவட்டத்திற்கு இவர்கள் இராமநாதபுரம் பகுதியில் இருந்து விவசாயம் தொடங்கும் சில காலம் முன்பு வருவார்கள்.. ஒரு டெம்போவில்/லாரியில் பனை ஓலைகளால் வேயப்பட்ட படப்பு ( குப்புற கவிழ்த்து வைக்கப்பட்ட பரிசலை சற்று பெரிய அளவில் கற்பனை செய்து கொள்ளவும்) தட்டுமுட்டு சாமான்கள், கயிற்று கட்டில், வலை போன்றவற்றுடன் சுமார் இருநூறு முதல் ஐநூறு செம்மெறி ஆடுகள் வரையில் ஏற்றிக்கொண்டு வருவார்கள்..
பகலில் அந்த ஆடுகள் பல இடங்களில் மேய்ச்சலுக்கு செல்லும்.. ஒரு தூக்கு வாளி (முன்பெல்லாம் அலுமினிய தூக்கு.. இப்போதெல்லாம் எவர்சில்வர் தூக்கு) வைத்திருப்பார்கள்.. அதில் பகல் பொழுதுக்கு தேவையான கஞ்சி இருக்கும்.. கையில் ஒரு நீளமான மூங்கில் கம்பும், தேய் ........ந்து வளைந்த செருப்புகளும் இவர்களின் அடையாளம்...
கதிர் அறுவடை முடிந்து அடுத்த சாகுபடி தொடங்கும் முன்போ, தென்னை தோப்புகளிலோ நில உரிமையாளரின் வேண்டுகோளுக்கிணங்க இரவில் அந்த ஆடுகளை ஓய்வெடுக்க வைப்பார்கள்... இதற்கு "கிடை மடக்குதல்" என்று பெயர்..
இரவில் ஆடுகள் கழிக்கும் புளுக்கை , சிறுநீர் போன்றவை பயிருக்கு மிகவும் உகந்த சக்தி மிகுந்த இயற்கை உரம்.. மேலும்.. ஆடுகளுக்கு அதிகமாய் வளர்ந்த முடியை நறுக்கியும் போடுவார்கள்..

அந்த வயலை /தோப்பை சுற்றிலும் இரும்பு கம்பிகளை நட்டு அதனை கொண்டு வந்திருக்கும் வலையால் சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பார்கள்... கயிற்றுக்கட்டிலில் உறங்குவார்கள்.. அதிகாலை கத்திரி பூ கலரிலோ, சிவப்பு கலரிலோ ஒரு சால்வையை தலையில் முண்டாசு கட்டிக்கொண்டும் போர்த்திக்கொண்டும் கிராம டீக்கடைகளுக்கு வருவார்கள்.. அந்த நேரத்தில் கடைக்கு டீ குடிக்க வரும் மற்ற விவசாயிகள் "நாளைக்கு நம்ம வயல்ல கிடை மடக்குப்பா" என்று ஆர்டர் கொடுப்பார்கள்.. ஒரு நாள் இரவு கிடை மடக்க ஆடுகளின் எண்ணிக்கையை பொறுத்து முன்னூறு முதல் அறுநூறு ரூபாய் வரை வாங்குவார்கள்..

வருடா வருடம் கிடை மடக்குவோரும் உண்டு.. நாலைந்து வருடம் ஒருமுறை கிடை மடக்குவோரும் உண்டு.. சுமார் ஒரு மாதமோ, பதினைந்து நாளோ ஒரு ஊரில் தங்கி அதன் சுற்று வட்டார பகுதிகளில் கிடை மடக்கிய பிறகு வேறு பகுதிகளுக்கு செல்வார்கள்.. அப்புறம் மீண்டும் அடுத்த வருடம்.. இப்படி தொடர்ந்து வருவதால் ஊரில் அனைவருக்குமே மிகவும் பழக்கமானவர்களாக இருப்பார்கள்..

இந்த கீதாரிகள் அனைவரும் சிலம்பம் என்று சொல்லப்படும் கம்பு சுழற்றுவதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்... இரவில் யாரேனும் களவாணிகள் ஆடு திருட வந்தால் கையில் வைத்திருக்கும் கம்பால் சுழற்றி அடித்து துரத்தும் வல்லமை படைத்தவர்கள்.. இந்த கீதாரியை மீறி கிடையில் இருந்து ஒரு ஆட்டை கூட திருட முடியாது என்பது களவாணிகள் மட்டுமல்ல.. எல்லோரும் அறிந்த விஷயம்..
இவர்கள் இடையர்கள் என்று சொல்லப்படும் யாதவ சமூகத்தை சேர்ந்தவர்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக