செவ்வாய், 28 ஜூலை, 2015

அதிகாரிகளின் நேர்மை




பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதல்வராக இருந்தபோது நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு சங்கையா ரெட்டியார் அவர்களுக்கு சொந்தமான திருநெல்வேலி நகரில் அமைந்திருந்த ஒரு திரையரங்க திறப்பு விழாவிற்கு சென்றாராம்... ஆனால் அன்றைய தினம் அந்த திரையரங்கம் திறப்புவிழாவிற்கு தயாராக இல்லை... என்ன காரணம் என்று கேட்க.. வேலைகள் சரிவர முடியாத காரணத்தான் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் அனுமதிகொடுக்கவில்லை என்று தகவல் சொல்லப்பட்டதாம்...

கூடவே... " முதல்வர் திறந்துவைக்கப்போவதாக நாங்கள் சொல்லியும் கூட அந்த கலெக்டர் அனுமதி தரவில்லை அய்யா... அதுமட்டுமல்லாமல் "நான் நினைத்தால் முதல்வர் ஆகி விடுவேன்... ஆனால் உங்கள் முதல்வர் நினைத்தாலும் கலெக்டர் ஆக முடியாது... எனவே என்னுடைய வேலையை முதல்வருக்காக நான் சமரசம் செய்துகொள்ள முடியாது " என்று அந்த கலெக்டர் சொல்கிறார்" என்றும் தகவல் சொன்னார்களாம்...

மிக சத்தமாய் சிரித்த காமராசர்.. "அவர் சரியாகத்தானே சொல்லி இருக்கிறார்... நான் எப்படி கலெக்டர் ஆக முடியும்.. அவர் நினைத்தால் ஒரு கட்சியில் சேர்ந்து முதல்வர் ஆக வாய்ப்பு இருக்கிறது.. அவர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.. என்று சொன்னாராம்...

அதோடு மட்டுமல்லாமல் மறுநாள் நேரடியாக அந்த கலெக்டரின் வீட்டிற்கே சென்று "நீங்க எல்லாம் இப்படி நேர்மையா இருந்தாதான் நாடு நல்லா இருக்கும்.. உங்கள மாதிரி ஆளுங்க வரணும்னுதான் நாங்க எல்லாம் கஷ்டப்பட்டோம்" என்று சொல்லி பாராட்டிவிட்டு, கலெக்டர் மனதில் எதுவும் சலனம்/பயம் வந்துவிட கூடாது என்பதற்காக ஒரு காப்பி கொடுங்கள் என்று கேட்டு வாங்கி குடித்துவிட்டு வந்தாராம்...

மேற்கண்ட செய்தியை படித்துக்கொண்டிருந்தபோது தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் சொல்லிக்கொண்டிருந்தார்... வட்டச்செயலாலரின் மச்சானிடம் லைசென்ஸ் கேட்ட போக்குவரத்து துறை காவல் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்....

கடந்த நாற்பது ஆண்டுகளில் நாடு எதை நோக்கி நகர்ந்திருக்கிறது என்பது இப்போது நன்றாக புரியுமே...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக