செவ்வாய், 28 ஜூலை, 2015

தர்மம் கொடுக்கப்படும் நட்பு



மகா பாரதத்தில் குருஷேத்திர யுத்தத்தில் அர்ஜுனனின் பாணத்தால் அடிபட்ட கர்ணன் தேர்க்காலில் சாய்ந்தபடி படுத்திருப்பான்... அப்போது மாறுவேடத்தில் வரும் கிருஷ்ணன், கர்ணனிடம் தானம் கேட்பான்... "இப்போது கொடுக்க எதுவும் இல்லையே... " என கர்ணன் வருந்த..
கண்ணனோ.."கர்ணா உன்னுடைய செய்புண்ணியத்தை தானமாக கொடு" என கேட்பார்...

இதுவரை செய்த புண்ணியங்களை எல்லாம் தானமாக கொடுத்தால் அதுவே பெரிய புண்ணியமாகி விடுமே.. அப்புறம் எப்படி கர்ணனின் உயிர் போகும்?? எனவே தான் "செய்புண்ணியம்" என்ற வார்த்தையை பயன் படுத்தினார்... அதாவது.. இதுவரை செய்த புண்ணியங்கள், இனிமேல் செய்யப்போகும் புண்ணியங்கள்" என எக்காலத்திற்கும் பொருந்தும் வார்த்தை விளையாட்டு அது...

இன்னும் எளிமையாய் சொல்லப்போனால்.... "ஊறுகாய்"... அதாவது ஊறிய காய்.... ஊறும் காய்.... ஊறப்போகும் காய்.. என்று முக்காலத்திற்கும் பொருந்த கூடிய வார்த்தை போல... "செய்புண்ணியம் " என்பது முக்காலமும் பொருந்தக்கூடிய வார்த்தை ...



திருமண மேடையில் நிற்கும் மணப்பெண் தன்னை சந்திக்க வரும் நண்பனிடம் எதிர்பார்க்கும் அன்பளிப்பு (பரிசு) நட்பு தான்...

அதாவது இதுவரை இருந்த நமது நட்பு... இனிமேல் வரப்போகும் காலத்திற்கான நமது நட்பு எல்லாவற்றையும் எனக்கு பரிசாக கொடு என்பதாய் பார்வையில் கேட்க...

கையில் வண்ணக்காகிதம் சுற்றப்பட்ட பொருளுடன் நட்பையும் பரிசாக கொடுக்கும் நண்பன் கர்ணனாய் வெளியே வருகிறான்...

திருமணத்திற்கு பிறகான கல்லூரிகால ஆண் பெண் நட்பு என்பது இன்றளவும் இந்த நிலையில் தான் இருக்கிறது...


இதுவாவது பரவாயில்லை... நண்பனிடம் நட்பை தான் தானமாக கேட்டாள்.. ஆனால் கணவனிடமோ.. உறவுகளையோ தானமாக கேட்டு விடுகிறாள்...

ஆம்..... திருமணமான உடன் பெண்களின் நட்பு துண்டிக்கப்படுகிறது.. ஆண்களுக்கோ.. உறவுகளே துண்டிக்கப்படுகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக