புதன், 7 செப்டம்பர், 2016

அவனும்தான் வாழட்டுமே..



விவசாயிகளுக்கு இயற்கையால், அரசாங்கத்தால், சிறு வியாபாரிகளால் ஏற்படும் சங்கடங்கள் முதல் பன்னாட்டு கம்பெனிகளின் நீண்டகால திட்டத்தால் ஏற்படும் பிரச்சினைகள் வரை பல பிரச்சனைகளை பேசி விட்டோம்...

விவசாயிகளுக்கு மற்றவர்கள் தான் பிரச்சினையா...?? 

அப்படி சொல்ல முடியாது.. விவசாயிக்கு கூட இருக்கும் இன்னொரு விவசாயியே பிரச்சினை ஆகிறான்... இதை பற்றியும் கொஞ்சம் பேசுவோமே....

பத்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவன், அவனது வயலுக்கு பக்கத்தில் ஒரு ஏக்கர் வைத்திருப்பவனை அழிக்க நினைக்கிறான்.. ஒரு ஏக்கர் வைத்திருப்பவன் அவன் வயலுக்கு பக்கத்தில் கால் ஏக்கர் வைத்திருப்பவனை அழிக்க நினைக்கிறான்... இதற்கான முயற்சிகளை பல்வேறு தொல்லைகள் வடிவில் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்...

விளைந்த பொருட்களை வெளியில் ஏற்றி செல்ல விடாமல் வழியை மறைப்பார்கள்... வரப்புகளை சரித்து வெட்டி ஆள் கூட நடக்க முடியாத அளவு குறைபபர்கள்.... பயிர்கள் விளைந்து நிற்கும் வேளையில் ரகசியமாக ஆடு-மாடுகளை விட்டு மேய்ப்பார்கள்.... இப்படியான தொடர் தாக்குதல்கள் மூலம் அந்த சிறு விவசாயி "இவனுங்ககிட்ட கிடந்தது மல்லாடுறதுக்கு வித்து தொலைஞ்சுட்டு போகலாம் டா " என்ற விரக்தி மன நிலையில் இருப்பான்...

ஏதாவது ஒரு அவசர தேவைக்கு ( மகளின் திருமணத்திற்கோ- மருத்துவ செலவிற்கோ- வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கோ) நிலம் விற்பனை செய்ய நினைத்தால் சமயத்தை சாதகமாக்கிக்கொள்ளும் பெரு நிலக்கிழார்கள் அடிமாட்டு விலைக்கு கேட்பார்கள்.... இப்படி எல்லா விதத்திலும் நொந்து நூலாகி இருக்கும் குறு- சிறு விவசாயி என்ன செய்வான்...??

இப்படி விரக்தியான நிலையில் இருப்பவன் தான் பன்னாட்டு பெருவணிக நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைக்கு நிலம் தேடும்போது முதலில் தன்னுடைய நிலத்தை விற்பனை செய்வான்... பிறகு என்ன ஆகும்..?? கூடாரத்திற்குள் தலையை நுழைத்த ஒட்டகம் மாதிரி கடைசியில் எல்லோராயும் கபளீகரம் செய்வார்கள்...

இப்படி ஒரு வஞ்சிக்கப்பட்ட விவசாயியிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தும் பெருவணிக நிறுவனங்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் கோர முகம் கொண்டவை.... விற்க மறுப்பவர்களை முதலில் பணத்தால் வளைக்க முயல்வார்கள்... பெரும் பணம் கிடைத்த உடன் பெரும்பாலான விவசாயிகள் விற்பனைக்கு சம்மதிப்பார்கள்... இன்னும் சிலர் கடைசி வரை மறுப்பார்கள்... அன்று இவர்கள் பெருநிலக்கிழார்கள்...ஆனால்சுற்றி இருக்கும் மற்ற நிலங்களை பெருவணிக நிறுவனங்கள் வாங்கி சேர்த்த உடன் இப்போது இவர் சிறு விவசாயியின் நிலைக்கு வந்திருப்பார்.... அன்று இவர் என்ன விதமான இடைஞ்சல்களை கால் ஏக்கர் வைத்திருந்தவனுக்கு தந்தாரோ அதை விட ஆயிரம் மடங்கு அதிகமான இடைஞ்சல்களை இப்போது இவர் அனுபவிப்பார்... இன்னும் கூடுதலாக அந்த பெருவணிக நிறுவனங்களிடம் எலும்புத்துண்டுகளை பெற்றுக்கொண்ட உள்ளூர் ரவுடிகள் நேரடியாகவே மிரட்டுவார்கள்.. சமயங்களில் தாக்குதல்களும் நடக்கும்... கடைசியில் வேறு வழி இல்லாமல் இவரும் விற்க சம்மதிப்பார்...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்வார்.... இது தேவையா.. இது தேவையா....
பக்கத்தில் கால் ஏக்கர் வைத்திருப்பவனையும் அரவணைத்து வாழ வைத்திருந்தால் அவன் ஏன் ஒட்டகம் தலையை நுழைக்க சம்மதிக்கப்போகிறான்...??

விவசாயிகளிடம் இருக்கும் ஒரு கேவலமான புத்தி.. பக்கத்து வீட்டுக்காரன்/வயல்காரன் செத்து விட மாட்டானா... அவனுடைய நிலங்களும் நமக்கே சொந்தமாகி விடாதா என்ற பேராசை... அந்த கெட்ட எண்ணம் இவர்கள் அழிவிற்கு காரணம்....

இந்த எண்ணம் வசதி-வாய்ப்புகள் நிறைந்த பெரு விவசாயிகளுக்கு இருக்கும் வரை விவசாயிகளுக்குள் ஒற்றுமை என்பது சாத்தியமே இல்லை.... விவசயிகளுக்குள் ஒற்றுமை இல்லாத போது ஒட்டு மொத்த அழிவிற்கான வாசல் அகலத் திறக்கப்படுகிறது...

பக்கத்து வயல் காரன் / வீட்டுக்காரனும் வாழ வேண்டும் என்று எப்போது உணர்வார்களோ...!!!

புகைப்படம் - இணையத்தில் இருந்து...

இட ஒதுக்கீடு- மறுபரிசீலனை தேவை



சாதிவாரியான கணக்கெடுப்பு தேவை இல்லை என்கிறது மத்திய அரசு.... சாதிவாரியான கணக்கெடுப்பை தவிர்ப்பது பின்னாளில் இட ஒதுக்கீட்டை முழுமையாக பாதிக்கும் என்கிறார்கள் சமகால மாற்றுக்கட்சி அரசியல்வாதிகள்...

இதை அவர்கள் பேசி முடிவெடுக்கட்டும்... ஆனால் சாமான்ய மனிதர்களாக இப்போது நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டை பற்றி நாம் கொஞ்சம் பேசுவோமா....

தமிழகத்தை பொறுத்தவரையில் கல்வி- வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இன சாதிகளான தாழ்த்தப்பட்டோர், பழங்குடி இன மக்களுக்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது... நானும் ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவன் என்ற முறையில் இதை வரவேற்கிறேன்...

பல நூற்றாண்டுகளாக உயர் வகுப்பு சாதியினரால் கல்வி உரிமை மறுக்கப்பட்டு அடிமைப்படுத்தபட்டவர்களுக்கு சிறப்பு சலுகைகள் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு கல்வி- மற்றும் வேலை வாய்ப்புகளில் குறிப்பிட்ட அளவு இடங்களை ஒதுக்கி, அவர்களையும் உயர் வகுப்பு சாதியினருக்கு சமமாக கொண்டு வரும் நோக்கத்திலேயே இந்த இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது....

அதாவது காலம் காலமாக அடிமைப்படுத்தப்பட்ட அந்த மக்களின் மரபணுக்கள் செயல் திறன் குறைந்த அடுத்த தலைமுறையை உருவாக்கும்.. அத்துடன் அவர்களுக்கு வசதி வாய்ப்புகளும் இருக்காது... ஆகவே தான் அந்த மரபணுக்களை மறு சீரமைப்பு செய்யும் நீண்டகால நோக்கமும், பொருளாதார வசதியின்மையால் அவர்கள் கல்வி பெற முடியாமல் போக கூடாது என்பதற்காக பொருளாதார உதவிகள் மற்றும் சலுகைகளும் வழங்கப்படுகிறது....

மேலோட்டமாக பார்த்தால் இது மிகவும் வரவேற்க தக்கதாய் இருக்கும்... ஆனால் இதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள், குளறுபடிகளை பற்றி எந்த அரசியல் வாதியும் பேசுவதே இல்லை..
அப்படியானால் அவர்களுக்கு தெரியாத விபரம் நமக்கு தெரிந்து, அதை நாம் பேசப்போகிறோமா???
அப்படி இல்லை.. நாம் பேசப்போகிறோம் என்பது உண்மை.. அவர்களுக்கு தெரியாது என்பது உண்மையில்லை.. அவர்களுக்கு தெரியும்.. ஆனால் பேச மாட்டார்கள்.. ஏனென்றால் அதை பேசப்போனால் "எங்கே நமக்கு கிடைக்கும் சில்லறை ஓட்டுக்களும் சிதறி விடுமோ "என்ற பயம் அவர்களுக்கு....

ஆனால்.. நமக்கு.... ?? நமக்கான உணவு, உடை, இருப்பிட, ஆடம்பர, அத்தியாவசிய தேவைகளுக்கு நாம் தான் உழைக்க வேண்டும் என்று நன்கு தெரியும்.. உழைக்கிறோம்.. அதனால் மற்றவர்களின் தயவு போய் விடுமோ என்ற பயமின்றி நமக்கு தெரிந்ததை தைரியமாக சொல்லலாம்...!!!

ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு கிடைக்கும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி ஒருவர் பொறியியலோ- மருத்துவமோ படித்து தேர்ச்சியடைகிறார்... பிறகு அந்த படிப்பின் மூலம் அவர் தன்னுடைய பொருளாதார நிலையை நிச்சயம் உயர்த்திக்கொள்வார்... இப்போது அவரது அடுத்த தலைமுறை ஓரளவு வசதியும், நல்ல கல்வி நிலையங்களில் சேர்ந்து, சிறப்பு வகுப்புகள் படித்து இன்னும் சற்று கூடுதல் அறிவும் பொருளாதார பலமும் பெற்று விளங்குவார்கள்...

இப்போது அந்த குறிப்பிட்ட சாதிக்கான இட ஒதுக்கீட்டு போட்டியில், மேற்கண்ட போட்டியில் வென்று பொருளாதார பலமும், சிறப்புப்பயிற்சி கல்வியறிவும் பெற்ற ஒரு மாணவனும் - அடிப்படை வசதிகளே இல்லாத அதே ஜாதியை சார்ந்த ஒரு மாணவனும் இருப்பார்கள்... இப்போது அந்த இடம் யாருக்கு கிடைக்கும்???

இப்படியாக இரண்டாவது - மூன்றாவது- நான்காவது தலைமுறையில் வரும் சந்ததியினர் நல்ல பொருளாதார பலமும்- கல்வி அறிவும் பெற்று விளங்குவார்கள்.. அதேநேரம் அதே சாதியில் இருக்கும் மற்ற நான்காம் தலைமுறை சந்ததியினர் ஆரம்பகால ஏழ்மையுடனும், குறைந்த அளவு கல்வி அறிவுடனும் இருப்பார்கள்... ஆனால் இட ஒதுக்கீடு என்பது சாதியின் அடிப்படையிலேயே இருப்பதால் அந்த வெற்றி பெற்ற தலைமுறையினரே தொடர்ந்து அந்த இட ஒதுக்கீட்டு பலனை அனுபவிப்பார்கள்....

ஆக இட ஒதுக்கீட்டின் நோக்கமே இங்கே கேலிக்கூத்தாகி விடுகிறது.... எல்லோரையும் சமமான நிலைக்கு கொடு வர வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு, முந்திக்கொண்டவர்களை மட்டும் மேலே மேலே தூக்கி சென்று கொண்டே இருக்கும்... ஆனால் எந்த சாதியில் பிறந்ததற்காக அந்த சலுகையை பெற்று முன்னேறினார்களோ.. அந்த சாதிக்காரர்கள் என்று வெளியில் சொல்லிக்கொள்ளவோ, தான் சார்ந்த சாதியின் முன்னேற்றத்திற்காக சிறு துரும்பை அசைக்கவோ கூட மாட்டார்கள்....

வசதியும்- வாய்ப்பும் வந்த உடன் தன்னுடைய சொந்த சாதியை மறைத்துவிட்டு அல்லது மறந்துவிட்டு தம்மையும் மேல்சாதிகாரர்களாய் காட்டிக்கொள்ளவே முனைவார்கள்... அதே நேரம் சலுகைகளை விட்டு விடாமல் தொடர்ந்து அனுபவிப்பதற்காக மட்டும் தாம் அந்த சாதிதான் என்று சான்றிதழ் மட்டும் வாங்கி ரகசியமாய் வைத்துக்கொள்வார்கள்...

இதுதான் சமூக நீதியா???

இதற்கு என்ன செய்ய வேண்டும்...???

இந்த இட ஒதுக்கீட்டு சலுகையை பயன் படுத்தி கல்வி- வேலை வாய்ப்புகளில் பலனடைந்தவர்கள் அதிக பட்சம் இரண்டு தலைமுறைகளுக்கு மட்டுமே அந்த போட்டியில் தொடர்ந்து இடம் பெற முடியும்.. அதன் பிறகு அவர்கள் பொது போட்டிகளில் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்.. இதனால் சம்பந்தப்பட்ட சமூகத்தில் இருக்கும் வாய்ப்பு கிடைக்காத இன்னொருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்... இப்படியாக அந்த இட ஒதுக்கீடு சில பல காலம் தொடரும் பட்சத்தில் வாய்ப்பு கிடைத்தவர்கள் அந்த போட்டியில் இருந்து விலக விலக.. மற்ற அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்... இப்படியாக மட்டுமே சமூக நீதியை கொண்டு வர முடியுமே தவிர.... வாய்ப்பு கிடைக்கப்பெற்றவன் அதே சலுகையை விடாமல் அனுபவித்தால் மற்றவர் எப்படி முன்னேற முடியும்...???

வேண்டுமானால் இப்படி ஒரு சட்டத்தை அரசு அறிவிக்கட்டும்.. முதலில் போராட கிளம்புபவர்கள் இந்த சாதி சலுகையை அனுபவித்து கொழுத்தவர்களாக தான் இருப்பார்கள்....

நம்முடைய கேள்வி இதுதான்... எந்த சாதி அடிமைப்படுத்தப்பட்டது என்று போராடி சலுகை பெற்று நீ முன்னேறினாயோ.... அதே சலுகையை அனுபவிக்க உன் சாதியை சேர்ந்த இன்னொருத்தனுக்கு வாய்ப்பு கொடுக்க நீயே மறுக்கும் போது, காலம் காலமாய் ஆதிக்கம் செலுத்திய அவன் எப்படி உன்னை முன்னேற அனுமதிப்பான்...???

கார்பொரேட் கத்தி



திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதையோ- விமர்சனம் எழுதுவதையோ நான் எப்போதும் ஊக்குவித்ததில்லை... ஆனால் நேற்றைய வெளியீடான திரு A.R. முருகதாஸ் அவர்கள் "கத்தி" மூலம் பேசி இருப்பது எங்கள் பிரச்சினை.. மன்னிக்கவும்.. நம் பிரச்சினை... தண்ணீர் என்பது பொதுவான விஷயமாக இருந்தாலும் மற்றவர்களுக்கு அது தாகம் தீர்க்க மட்டுமே.. தண்ணீருக்கு பதிலாக கோலாவை குடிப்பார்கள் நகரவாசிகள்....

ஆனால் எங்களுக்கு (விவசாயிகளுக்கு) உயிர் பிரச்சினை... உங்கள் பசிக்காகவும் சேர்த்து கவலை படும் எங்களால் கோலாவை கொண்டு விவசாயம் செய்ய முடியாது... கார்பொரேட் அரக்கன் கையில் சிக்கி நாளை நடக்கப்போகும் பயங்கரத்தை ஒரு கலர்புல் திரைப்படம் மூலம் வெகுஜன மக்களுக்கு எடுத்துச்சென்ற இயக்குனர் முருகதாஸ் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்...

ஏற்கெனவே சில பல பதிவுகளில் கார்பொரேட் களவானிகளின் நரித்தந்திரத்தை நானும் சொல்லி இருக்கிறேன்.. ஆனால் என் களம் குளம் மாதிரி... சிறியது..... ஆனால் முருகதாஸ் களம் கடல்...
மற்றபடி விஜய் என்ற ஒரு நடிகர் நடித்த ஒரே காரணத்திற்காக எதிர்க்கும் மற்ற நடிகர்களின் ரசிகர்களோ- லைக்கா என்ற நிறுவன தயாரிப்பு என்பதால் அந்த படத்தை எதிர்த்த "டிராமா" தமிழ் உணர்வாளர்களோ தங்கள் எதிர்ப்பை கை விட்டு இந்த படத்தை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும்... அப்படி இல்லை என்றால் அவர்கள் ஓட்டு மொத்த விவசாயிகளை அழிப்பதை வேடிக்கை பார்க்க சொல்லும் மானுட துரோகிகள்...

சம்பளம் வாங்கிக்கொண்டு "கோகோ- கோலா" விளம்பரத்தில் நடித்ததுபோல.. சம்பளம் வாங்கிக்கொண்டு "கத்தி" படத்தில் நடித்த்ருக்கிறார் நடிகர் விஜய்... அவருக்காக இயக்குனரின் இந்த சமகால சிந்தனையை மக்களிடம் சேர விடாமல் தடுப்பது பாவம்...

நியாயமாக இந்த படத்தை ஏதாவது விவசாய சங்கங்களோ- விவசாய பின்னணி கொண்ட தொழிலதிபர்களோ தயாரித்திருக்க வேண்டும்... ஆனால் எல்லாவற்றையும் காசாக்க தெரிந்த கார்பொரேட் கம்பெனிகள் விவசாயிகளின் பிரச்சினையையும் காசாக்கி விட்டார்கள்...

நன்றி முருகதாஸ் அவர்களே...

குறிப்பு- நான் இந்த படத்தை இணையத்தில் தான் பார்த்தேன்...

இன்னொருத்தன் பொழப்புல மண்ணள்ளி போடலாமா??




சினிமா விமர்சனம் எழுதும் என்னுடைய அன்பான நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்..
பணம் எத்தனை கோடிகள் புழங்குகிறதோ அத்தனை கோடி சென்டிமென்ட்களும் புழங்கும் ஒரு மாபெரும் கனவுத்தொழிற்சாலைதான் சினிமா என்பது. வருடத்திற்கு சுமார் முன்னூறு படங்களுக்கு பூஜை போடப்படுகிறதென்று வைத்துக்கொண்டோமானால் அதில் சுமார் இருநூறு படங்களே படப்பிடிப்பு வரை செல்கின்றன .. அந்த இருநூறில் கால்- அரை- முக்கால் வீதம் படப்பிடிப்பு முடிந்து பல்வேறு காரணங்களுக்காய் முடங்கிப்போபவை சுமார் நூறு படங்கள்..
படப்பிடிப்பு முழுவதும் முடிந்து வெளியட முடியாமல் முடங்குபவை சுமார் இருபத்தைந்து முதல் முப்பது படங்கள்..
ஆக முன்னூறு படங்கள் தொடங்கியதில் சுமார் எழுபது அல்லது அதற்கும் குறைவான படங்களே நமது பார்வைக்கு வருகிறது..

இந்த படங்களில் சம்பளம், கால்ஷீட் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க புதுமுக நடிகர்கள்.. நடிகைகள்.. தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோர்களை வைத்து தொடங்கப்படும் படங்கள் தான் முடங்கிப்போவதில் முதலிடம்..
சுமார் பத்து முதல் இருபது ஆண்டு காலம் கூட போராடி ஒருவர் அவரின் கனவுகளை திரட்டி வெள்ளித்திரையில் கொண்டு வர அவர் படும் பாடு சொல்லி மாளாது.. எந்த காரணத்தால் ஒரு புதுமுகம் (அவர் திரைக்கு முன்னாலோ- பின்னிருந்தோ இயங்குபவராக இருக்கலாம்) அறிமுகமாக கூடிய திரைப்படம் வெளிவர முடியாமல் போனாலோ அல்லது வெளிவந்து தோல்வியை தழுவினாலோ முதலில் "ராசி இல்லாதவன்/ள்" என்று முத்திரை குத்தப்படுபவர்கள் இந்த புது முகங்களே...

இன்றைய தினம் காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலிருந்து செய்திகளை சேகரிக்கும் அளவு சமூக வலைத்தளங்கள் மாபெரும் வளர்ச்சியடைந்திருக்கின்றன.. அந்த வளர்ச்சி பெற்ற வலைத்தளத்தில் பங்கெடுத்து நம்முடைய கருத்துக்களையும் நண்பர்கள்- நண்பர்களின் நண்பர்கள் என பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை நாமும் பெற்றிருக்கிறோம்..
திரைப்படத்திற்கு மதிப்பெண் போட்டு ரேங்க் கொடுக்கும் ஊடகங்கள் எதோ ஒரு வருமானத்திற்காக இப்படி செய்கின்றன.. ஆனால் எந்த லாபமுமின்றி நம் மனதில் பட்டதை எல்லாம் இதில் பதிவு செய்கிறோம்..
அப்படி பதிவு செய்யும் விஷயங்களில் சினிமா விமர்சனமும் ஒன்று.

பல்லாயிரக்கணக்கானோரின் உழைப்பில் சில பல புது முகங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கோடிகள் கொட்டி எடுக்கப்படும் ஒரு படத்தை அது வெளி வந்த அன்றே பார்க்கும் நண்பர்கள் ( இதில் ஓசியில் ஆன் லைனில் பார்ப்பவர்களே அதிகம் ) படம்.. "மொக்கை" "குப்பை " என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக பதிவிடுகிறார்கள்..
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி எப்படி பல்கி பெருகி சமூக தாக்கங்களை ஏற்படுத்துமென்பதை கண்கூடாக காண்பவர்கள் நாம்..

இதில் நம்முடைய ரசனையை வெளிப்படுத்தும் நோக்கமோ- நானெல்லாம் "உலக சினிமாவை அலசி ஆராய்ஞ்சவனாக்கும் " என்று சொல்லிக்கொள்ளும் அதி மேதாவித்தனமும் தான் இருக்கிறதே தவிர வேறொன்றும் இல்லை..
நம்முடைய இந்த அதிமேதாவித்தனம் எத்தனை பேருடைய எதிர்காலத்தில் நெருப்பு வைக்கும் தெரியுமா..??

என் அன்பு நண்பர்களே.. நீங்கள் திரைப்படம் பார்த்துவிட்டு உங்களுக்கு பிடித்திருக்குமெனில் அதனை பார்க்க பரிந்துரை செய்யுங்கள்.. உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் அதற்கென ஒரு ரசிக வட்டம் இருக்கும்.. அவர்கள் பார்த்து முடிவு செய்து கொள்ளட்டும் என விட்டு விடுங்கள்..
இன்னொருத்தன் சோத்துல மண்ணள்ளிப்போட்ற வேலைய நாம செய்யனுமா????
என்னமோ மனசுல பட்டுச்சு.. சொல்லிட்டேன்... அப்புறம் உங்க இஷ்டம்..!!!

முடிந்ததை சேமிக்கலாம்



எங்க வீட்ல அவரைக்கா கொடி நடுவாங்க... ரெண்டு மூணு முருங்கை மரம்,,, அப்புறம் மாமரம்... காய்க்கிற சீசன் வந்ததும் எல்லாமே நல்லா காய்க்கும்... அப்போ குழம்பு, கூட்டு, பொரியல் ன்னு எல்லா ஐட்டத்துலையும் ஒரு நாள் கூட விடாம அந்த காய்களை போட்டு செய்வாங்க....

நமக்கு அந்த காய்கள் மேல ஒரு வெறுப்பே வந்திடும்.... ஐயோ...... இந்த கொடிய/மரத்த வெட்டி போட்டுடலாமான்னு கூட ஆத்திரம் வரும்... ஆனா சீசன் முடிஞ்சதும் மேற்சொன்ன காய்கள் எதையும் நம்ம வீட்டு சமையல்ல கண்ணுல கூட பார்க்க முடியாது..... ஏதாவது கல்யாண வீட்டுலயோ- ஹோட்டல்லையோ சாப்பிட போகும் போது முருங்கைக்காய் சாம்பாரோ- மீன்குழம்புல மாங்காயோ தென்பட்டா ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவோம்...

வீட்ல இருக்கவங்கள சொல்லி குத்தமில்ல.. ஏன்னா விளையுறப்போ அறுவடை செய்து அப்பவே சமைக்கணும். இல்லன்னா வீணாத்தான் போகும்... அத சேமிக்க வசதி இல்ல நம்மகிட்ட....

அது மாதிரி தான் இப்போ பெய்யுற அடைமழையும்..... இந்தமழை ஏண்டா பெய்யுதுன்னு வெறுப்படைகிற அளவுக்கு பெய்யுது... ஆனா இந்த மழை நீர சேமிக்க வசதி இருக்கு.... தனி மனிதர்கள் ( குடும்பங்கள்) வீடுகள்ல மழை நீர் தொட்டி அமைச்சும் , அரசாங்கம் ஏரி- குளங்கள ஆழப்படுத்தியும் வச்சிருந்தா இந்தமழை நீரை சேமிச்சு, சீசன் முடிஞ்ச பிறகும் கூட நிதானமா அனுபவிச்சுக்கலாம்....

இந்த முறை மிஸ் பண்ணி இருந்தா கூட அடுத்த மழைக்காலத்துக்குள்ளயாச்சும் செய்வாங்களா????

கேள்வி:- ஆமா.. இதுக்கும்.. இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம்???

பதில் 1. ஒரு சம்மந்தமும் இல்லங்க..... நம்ம தொடர் வாசகர்கள் எவ்ளோ பெரிசா எழுதினாலும் நிதானமா படிப்பாங்க.. ஏன்னா அவங்க பெரும்பாலும் நமக்கு நண்பராகவோ, அண்ணன்- தம்பி- மாமன்- மச்சி- அக்கா- தங்கோ என அன்பு வளையத்துக்குள்ள அடைபட்டவங்களாகவோ இருப்பாங்க.. இல்லன்னா நம்ம சிந்தனைகள்/ எழுத்துக்கள்ள இருக்க நியாயத்தை உணர்ந்தவங்களா இருப்பாங்க... சோ.. அவங்களுக்காக இல்ல இது....... இதுல போட்டிருக்க படம்.. ஜஸ்ட் ஸ்க்ரோல் பண்ணி லைக் தட்டிகிட்டே போறவங்கள கொஞ்சம் இழுத்து நிறுத்த தான்...

பதில் 2. கஷாயம் கொடுக்கும் போது கூட கொஞ்சம் சர்க்கரை கொடுக்குறது இல்லையா.. அப்படி தான் இதுவும்...

பதில் 3. அனுஷ்கா போட்டோ போட காரணம் எல்லாம் தேவையா...

மாற்றத்திற்கான விதை



எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதென்பது இப்போது ஒரு வியாதியாகவே ஆகிவிட்டது.. இது அறியாமையோ / புகழ் தேடியோ / எதிர்த்தால் தான் நம்மையும் உணர்வாளர்கள் பட்டியலில் மற்றவர்கள் வைப்பார்கள் என்ற நம்பிக்கையோ காரணமாயிருக்கிறது..
அணு உலை முதல் அந்நிய முதலீடு வரை... பால்- பஸ் கட்டண உயர்வு முதல் பெட்ரோல் விலை உயர்வு வரை..எல்லாவற்றிலும் இதே அதிமேதாவித்தனம் தான் நிகழ்கிறது..
எந்த ஒரு விஷயமும் மாற்றங்களை சந்தித்தே வந்திருக்கிறது..உலகமயமாக்களில் அனைத்து நாடுகளுமே ஒரு குடையின் கீழ் வந்துவிட்ட படியால்.. உலகின் எந்த ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகளும் மற்ற நாடுகளின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியே தீரும். இதனை சமாளித்து நாமும் மற்ற நாட்டவரை போல் இருக்க வேண்டுமானால் சில பல மாற்றங்களை நாம் முன்னெடுத்தே ஆகவேண்டிய கட்டாயம் தவிர்க்க முடியாததாகி விடும்..
எதையும் நம்மால் தடுக்க முடியாது.. ஏனென்றால் உலகம் ஒருவருக்கொருவரை சார்ந்தே வாழவேண்டிய கட்டாயம்.. தடுக்கத்தான் முடியாதே தவிர அதனை முறைப்படுத்தலாம்.. அதற்கு நிலையான/ நாட்டு நலனை முன்னெடுக்க கூடிய ஸ்திரத்தன்மை உள்ள அரசும் ஆட்சியாளர்களும், அடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் தவிர்த்த மக்கள் நலனிலும் நாட்டின் வளர்ச்சியிலும் அக்கறையுடைய எதிர்கட்சிகளும் அமைய வேண்டும்..

அது இந்த நாட்டில் சாத்தியமா என்றால் ஒரு பெரிய கேள்விக்குறிதான் நம் கண் முன்னே நமக்கும் உயரமாய் வளைந்து நின்று நம்மை பார்த்து கேலியாய் சிரிக்கிறது..

ஏனென்றால் இன்றைய கிராம / நகர வார்டு உறுப்பினர்கள் கூட குற்றப்பின்னனியும் சுயநலமும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.. இவர்கள் தான் நாளை நம்மை ஆளப்போகும் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்களாக, மந்திரிகளாக வலம் வரப்போகிறார்கள்..

இன்றைய மந்திரிகளின் , சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பழைய வரலாற்றை தோண்டி எடுத்து துடைத்துப்பார்த்தால் ஒரு காலத்தில் லோக்கல் ரவுடியாக இருந்து பிறகு ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து செயலாளர், வட்ட செயலாளர், மாவட்ட செயலாளர் என படி படியாக வளர்ந்து, இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர் ஒரு வார்டு மெம்பர் / ஊராட்சி / ஒன்றிய /நகராட்சி தலைவர்களாகவோ தேர்தலிலும் கலந்துகொண்டு அராஜகத்தின் மூலம் பதவிகளில் இருந்திருப்பார்கள்.. அவர்களின் அன்றைய அந்த பதவிக்கு ஒரு குற்ற பின்னணியும் / பணபலமும் காரணமாய் இருந்திருக்கும்.. அவர்கள் எல்லோரும் இப்போது விருட்சமாய் வளர்ந்து நிற்கிறார்கள்.. அவர்களை அவ்வளவு எளிதில் அழித்து விட முடியாது...

ஆனால் இப்போது முளைக்க ஆரம்பித்திருக்கும் களைகளை மிக எளிதாய் பிடுங்கலாம்.. ஆம்.. உங்கள் ஊரில் வார்டு மெம்பருக்கோ / ஊராட்சி- நகராட்சி தலைவருக்கோ போட்டியிடுபவர் நிச்சயம் உங்களுக்கு நேரடியாய் அறிமுகமானவராய் தான் இருப்பார்.. இவரின் பூர்வீகம், தகுதி திறமை நிச்சயமாய் உங்களுக்கு தெரிந்திருக்கும்.. குற்றப்பின்னணி கொண்டவரை புறக்கணியுங்கள்.. இன்றைய உங்கள் புறக்கணிப்பின் பயன் இப்போதே தெரியாது. அதற்கு இருபது வருடங்களுக்கு மேல் ஆகலாம்... ஆகட்டுமே..

மரத்த வச்சவன்தான் பழம் சாப்பிட்றானா என்ன??

அபி கேள்வி



"அப்பா... என்னப்பா இது...."
"இவங்க எல்லாம் ஏஞ்சல்ஸ் டா...."
"ஏஞ்சல்ஸ்ன்னா யாருப்பா.."
"அவங்க எல்லாம் தேவதைங்கடா .. அவங்க மானத்துல (வானத்துல) இருந்து வருவாங்கடா...."
"எப்படி வருவாங்க....?"
"பறந்து வருவாங்க...."
"எதுக்கு.."
"நம்மளை எல்லாம் பார்த்துட்டு போக..."

பக்ரீத் விடுமுறை தினத்தில் கத்தார் - ஈரானி மார்கெட் பகுதியில் நடந்த கலை நிகழ்ச்சிகளை பார்க்க அபிநயாவை அழைத்து சென்ற போது , அங்கே தேவதை வேடத்தில் நான்கைந்து பெண்கள் அங்குமிங்குமாக உலாவ... அப்போது எனக்கும் அபிக்குமிடையே நடந்த உரையாடல் தான் மேற்சொன்னது...

அப்போது அவளுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை.... அமைதியாகி விட்டாள் ..

இதற்கு பிறகு ஒரு வாரம் கழித்து நேற்று, மங்கல்யான் செவ்வாய் கிரஹத்தின் நிலாவை படம் பிடித்து அனுப்பிய செய்தியை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது....

"மங்கல்யான்னா என்னப்பா..."
"அது ஒரு செயற்கை கோள்டா .. மேல மானத்துல ( வானத்துல) போயிருக்கு...."
"எப்படி மானத்துக்கு போச்சு..?"
"அது ராக்கெட்ல போச்சுடா...."
"ராக்கெட்னா என்னப்பா....?"
"நீ பிளேன்ல வந்த இல்ல.... அது மாதிரி தான் இதுவும்...."
"அப்போ ராக்கெட்ல யாரு போவாங்க...."
"அதுல யாரும் போக மாட்டாங்க... வெறும் மெஷின் மட்டும் தான் போகும்...."
"அப்படின்னா அந்த ஏஞ்சல்ஸ்ஸ அதுல போக சொல்லலாம்ல....?? அவங்களும் வானத்துக்கு தான போகணும்...??"

இப்போது எனக்கு எதுவுமே புரியவில்லை.... அமைதியாகிவிட்டேன்...!!!

உறவை பேணுங்கள்



"அடக்கம் செய்ய வழி இல்லாமல் மகனின் உடலை தானமாக கொடுத்த பெண்"

நண்பர் ஒருவர் இந்த பத்திரிகை செய்தியை பதிந்து "மனிதம் செத்து விட்டதா...?" என்று ஒரு நெருப்புக்கேள்வியை வீசி இருந்தார்... தகவலை மேலோட்டமாக பார்த்துவிட்டு "வருந்த தக்க நிகழ்வு" என்று அந்நேரத்தில் பின்னூட்டமிட்டு நகர்ந்து விட்டாலும் அந்த கேள்வி மனதில் ஆழமாய் தைத்து ஊவாமுளாய் உறுத்திக்கொண்டே இருந்தது..

நிஜமாகவே மனிதம் செத்து விட்டதா???அப்படியானால்..... இரத்தம் வேண்டிய தகவல்கள் பதிந்த உடன் ஓடிச்சென்று உதவுகிறார்களே.... கண் தானம்- உடலுறுப்பு தானம் செய்கிறார்களே....( உடலுறுப்பு தானத்தில் நடக்கும் வஞ்சகம் பற்றி நாம் ஏற்கெனவே பதிந்திருக்கிறோம்) எத்தனையோ பேர் ஏமாற்றுவது தெரிந்தும் கூட மருத்துவ / கல்வி உதவி என்றால் கையில் கிடைத்த பணத்தை அனுப்புகிறார்களே....

அப்புறம் எப்படி மனிதம் மரித்ததாய் ஆகும்??? என்னுள் சில கேள்விகள் எழ... அந்த தகவலை மீண்டும் தேடி பிடித்து முழுதாய் படித்தேன்... .அட.... இயல்பான மனிதனுக்குள் இருக்கும் சாதாரண இரக்க உணர்ச்சி தான் அந்த தகவலுக்கு வருந்த வைத்திருக்கிறது..... சற்றே உள் நோக்கி கவனித்து பார்த்தால் மற்ற சில கேள்விகள் எழுகிறது...

அந்த பெண்ணால் பணம் சேர்க்க முடியாமல் போயிருக்கலாம்... ஆனால் இறந்த மகனின் உடலை தூக்கிப்போட நான்கு மனிதர்களை கூடவா சேர்த்திருக்க முடியாது ???

இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் வனிதா என்ற அந்த பெண்ணின் கணவர், அவர்களின் குழந்தைக்கு (தற்போது இறந்துவிட்ட) 4 வயதாக இருக்கும் போதே அவர்களை விட்டு பிரிந்து சென்றிருக்கிறார்... உறவினர்கள் யாரும் இவருடன் சேர வில்லை.... அக்கம் பக்கம் குடியிருந்தவர்கள் கூட இவருடன் சேர வில்லை எனில்... அந்த பெண்ணின் குண நலன்களை நம்மால் உணர முடிகிறது தானே????

இது ஒரு எச்சரிக்கை மணி....

நம்மோடு இருப்பவர்களை புறக்கணிப்பதோ... அவர்களுடன் ஒட்டாமல் துண்டித்துக்கொள்வதோ நம்மை எப்படி இந்த உலகத்தில் தனிமைப்படுத்தி தண்டிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்... அக்கம் பக்கம் இருக்கும் நண்பர்களை- உறவினர்களை புறக்கணித்து உலகின் பல்வேறு பகுதிகளில் சிதறி க்கிடப்பவர்களை நண்பனாக வரித்து அவர்களுடன் மட்டுமே பொழுதை போக்காமல் அக்கம் பக்கத்தவருடன்,உறவினர்களுடன் இணைந்திருக்க முயலுங்கள்... காசு பணம் இல்லா விட்டாலும் தூக்கி போட நாலு பேர் வேண்டுமல்லவா?????

இந்த புத்திசாலித்தனம் உங்கள...



"சுதர்சன் கெமிக்கல்ஸ் " அப்படின்ற ஒரு தனியார் சுதேசி கம்பெனில மார்க்கெட்டிங் மேனேஜரா வேலை பண்ணிகிட்டிருந்த நேரம்... ஹா ஹா ஹா... இத படிச்ச உடனே உங்க முகத்துல லேசா ஒரு புன்முறுவலும்... கூடவே மனசுக்குள்ள.. "என்னமா புளுகுறான் பாரு..". அப்படின்ற நினைப்பும் வருமே.... மன்னிக்கணும்.. பழக்கதோஷம்.... பொண்ணு கொடுக்க மாட்டாங்கன்னு கல்யாணத்துக்கு முன்னாடி எல்லா இடத்துலயும் பீலா விடற மாதிரி இங்கயும் விட்டுட்டேன்.... சேல்ஸ் ஆபீசரா வேலை பண்ண நேரம்... ( அட... நம்புங்கப்பா.. இது நிஜம்) நமக்கு காஞ்சிபுரம் மாவட்ட சேல்ஸ் பார்க்கிற வேலை....

நம்ம டீலருங்க எல்லோரும் ரொம்ப ரொம்ப நல்லவங்க... போன்ல பேசினாலே ஆர்டர் அனுப்பிடுவாங்க... பேமேண்டும் கரெக்டா கொடுத்திடுவாங்க.... அதனால பிரச்சினை இல்லாம பொழப்பு ஓடிகிட்டிருந்துச்சு.... அந்த கம்பெனியோட தமிழ்நாடு தலைமை அலுவலகத்துல இருக்க மேனேஜருக்கு டெய்லி எந்த ஏரியால நாம குப்பை கொட்றோம்னு ரிப்போர்ட் கொடுக்கணும்... மொபைல் போன் ல இருந்து டெய்லி அவருக்கு கால் பண்றது... நான் மதுராந்தகத்துல இருக்கேன்.. செய்யூர்ல இருக்கேன்.. வந்தவாசில இருக்கேன்னு பொய்ய சொல்லிட்டு காஞ்சிபுரத்துல வீட்டுல படுத்து தூங்குறது.... இப்படியே நம்ம பொழப்பு நல்லா போச்சு.... ஒரு நாள் எங்க பாஸுக்கு நம்ம மேல சந்தேகம் வந்துடுச்சு... இந்த பய மெய்யாலுமே அங்க இருக்கானா.. இல்ல.. பொய் சொல்றானான்னு... திடீர்னு ஒரு ரூலு போட்டார்.... அதாவது,... "நீ எந்த ஏரியால இருக்கியோ.. அங்க இருந்து லேண்ட் லைன் ல கால் பண்ணு."ன்னு.... அந்த ஆளோட ஐடியா என்னன்னா.... செங்கல்பட்டுல இருக்கேன்னு சொன்னா.. லேன்ட் லைன் ல கால் பண்ணினா STD கோடு வரும்... பையன் நிஜமாவே ஏரியால தான் இருக்கான்னு கன்பார்ம் பண்ணிக்கலாம்ன்னு...

யோவ்.. போயா.... நீ கொடுக்கிற சம்பளத்துக்கு பெட்ரோல் விக்கிற விலைல நிஜமாவே நான் எல்லா ஏரியாவுக்கும் போய் ஆர்டர் எடுத்தா வெளங்கிடும் ன்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டே.... ஒரு திட்டம் போட்டேன்.... அதாவது.. செங்கல் பட்டுக்கு போறேன்னு சொல்ற அன்னிக்கு காஞ்சிபுரத்துல இருந்து பைக் ல செங்கல்பட்டு கிளம்புவேன்.... வாலாஜா பாத் தாண்டி அப்புறம் வர ஒவ்வொரு இடத்துலயும் இருக்க STD பூத் ல இருந்து என்னோட மொபைல் க்கு கால் பண்ணி பார்ப்பேன்.. எந்த இடத்துல கால் பண்றப்போ STD கோடு மாறுதோ.. அதுதான் நம்ம வொர்க் பாயின்ட்,, இப்படி எல்லா இடத்துக்கும் செட் பண்ணிகிட்டேன்... அதுக்கப்புறம் நான் எந்த ஏரியாவுக்கு போறேன்னு சொல்றேனோ.. அந்த ஏரியாவோட STD கோடு எந்த இடத்துல ஆரம்பிக்குதோ அந்த இடத்துல இருந்து அவருக்கு ஒரு போன் பண்ணி... "அய்யா.. நான் இன்ன மாதிரி இந்த இடத்துல இருக்கேன்"ன்னு சொல்லிட்டு நேரா கிளம்பி வீட்டுக்கு வந்துடுவேன்... அதுக்கப்புறம் மறுநாள் தான் வேலை....

நியாயமா இந்த புத்திசாலித்தனத்துக்கு நான் எங்கயோ போயிருந்திருக்கணும்.... ஆனா போகல..... இங்கயே தான் இருக்கேன்.. ஏன்னா.. உங்கள எல்லாம் விட்டு போக மனசு வரல....!!!

கேள்விக்கேற்ற பதில்



திருவாவடுதுறை ஆதீனத்தின் மடாதிபதி ஒரு நாள் மடத்தின் கணக்குகளை பார்த்துக்கொண்டு இருந்தாராம்... அப்போது அங்கிருந்த கணக்காளர் மிகவும் நேர்மையானவர்.... ( அப்படியானால் இப்போது இருப்பவர் நேர்மையற்றவரா என்று கேட்க கூடாது... அது பற்றி நமக்கு தெரியாது)

கணக்குகளை பார்த்து முடித்த மடாதிபதி கடைசியாக சொன்னாராம்... "இந்த கணக்குகளில் தவறு இருக்கிறது.... "

மிகவும் நேர்மையாளரான கணக்காளர் பதறிப்போனாராம்.... மடாதிபதியே தம்மை சந்தேகப்படிகிறாரே.. சிவ சிவா... என் நேர்மைக்கு என்ன சோதனை என்று மருவியபடியே... "என்ன தவறு சுவாமி.." என்று நடுக்கத்துடன் கேட்டாராம்...

மடாதிபதி " கடந்த ஒரு வருடத்தில் மடத்தில் விளக்கு எரிப்பதற்காக இத்தனை லிட்டர் எண்ணெய் வாங்கி இருப்பதாக எழுதி இருக்கிறீர்கள்... ஆனால் ஒரு இடத்தில் கூட தீப்பெட்டி வாங்கியதாக எழுத வில்லையே...."

அதற்கு அந்த கணக்காளர் சொன்னாராம்... சுவாமி... நமது மடத்தில் தீபங்கள் அணைவதே இல்லை.... திரி கருகிவிட்டாள் வேறு திரி போட்டு வேறொரு விளக்கின் நெருப்பில் இருந்து பற்றவைத்துக்கொள்வோம்... அதனால் தீப்பெட்டி வாங்க வேண்டிய அவசியம் இல்லை..."

ஒரு லாஜிக்கான கேள்வி... அதற்கு தகுந்த பதில்....

புகைப்படம்:- திருவாவடுதுறை ஆதீன மடம் - இணையத்தில் இருந்து ..

கொடும்பாவி...



சோறு படைத்த சோழநாட்டோட கடைமடை பகுதி எங்க பூர்வீகம்... மண்ணையும் மழையையும் சார்ந்து வாழற மருத நிலத்துக்கு சொந்தக்காரங்க நாங்க.... காவிரித்தாயோட மார்ல சுரந்து வர பால முன்னாடி இருக்க குழந்தைங்க எல்லாம் உறிஞ்சி குடிச்சுட்டு விட்டப்புறம் மிச்சமிருந்தாதான் எங்களுக்கு கிடைக்கும்... 

எங்க விவசாயத்துக்கு முக்கியமான நீராதாரம் மழையும்.. அப்படி பெயர மழைல நிறைஞ்சு கெடக்கும் ஏரி குளங்களும் , வற்றாமல் சுரக்கும் கேணிகளும் தான்...

ஐப்பசி மாசம் மின்னல் வெட்டி, இடியோட பொனுபொனுன்னு தூற ஆரம்பிச்சு.. கொஞ்சம் கொஞ்சமா வலுக்கும் மழை.... ஐப்பசி முடிஞ்சு கார்த்திகை முச்சூடும் அடை மழையா பெய்யும்.... இந்த சுழற்சி வருஷா வருஷம் நடக்குறது தான.... பருவகால மாற்றத்துல எல்லா ஊர்லயும் இப்படித்தான நடக்கும்... ?? ஆமாம்.. நீங்க .சொல்றதும் சரிதான்....

இந்த சுழற்சி எப்போதும் போல இந்த கட்டுரைக்கு வேலையே இல்லாம .போயிருக்கும்..

திடீர்னு ஏதாவது ஒரு வருஷ காலத்துக்கு சுத்தமா மழையே பெய்யாது... வறட்சி தாண்டவமாடும்.. ஏரி குளமெல்லாம் வறண்டு போய் பாளம் பாளமா பொருக்கு வெடிச்சு கெடக்கும்... மாடு கண்ணுகளுக்கு குடிக்க தண்ணி கெடைக்காது... கேணில எல்லாம் தண்ணி வத்தி போய்டும்... மர மட்ட எல்லாம் காஞ்சு சருவா தொங்கும்... அனல்காத்தா அடிக்கும்.......

அந்த மாதிரி நேரத்துல எங்க ஊரு பக்கம் , ஊருல இருக்க முச்சந்தில வைக்கோல் பிரிய சுத்தி அதுல , களிமண்ணை பூசி ஒரு ஆள் மாதிரி செஞ்சு படுக்க வச்சிருப்பாங்க...

இதுதான் வருண பகவான வம்புக்கிழுக்கிற வேலை...

எங்கூரு நம்பிக்கை படி அது வருணபகவானோட பொணம்.... வருண பகவான் செத்து போயிட்டார்.. அதனால தான் மழ தண்ணி இல்லாம போச்சுன்னு ஒரு மாயையை ஏற்படுத்துறது... எங்கூர்ல இருக்க எல்லோரும் ராத்திரி சாப்பாட்ட ஏழு எட்டு மணிக்கெல்லாம் முடிச்சுட்டு, அந்த பொணம் கிடக்குற இடத்துக்கு வந்திடுவாங்க.... வந்த ஆம்பளைங்க எல்லாம் ஒரு பக்கமா உக்காந்து ஏதாவது கதை பேசுவாங்க.... பொம்பளைங்க எல்லாம் அந்த களிமண் பொணத்த சுத்தி உக்கார்ந்து ஒப்பாரி வைப்பாங்க....

நெஞ்சுல அடிச்சுகிட்டு சுத்தி சுத்தி அழுவாங்க....

ஏ.... மானத்து ராசாவே....
மழபேயும் மந்திரியே....
கொட்டந்தரையில.....
நா.. கோலத்த போட்டுவச்சேன்....
என்கோலம் அழியலையே...
ஒரு கொள்ள மழ பேயலையே....

இப்படியா அடுத்தடுத்த பல்லவியோட நீளும் அந்த ஒப்பாரி பாட்டு.... அந்த ஒப்பாரில ஒரு ஆத்மார்த்தம் இருக்கும்.. தார தாரயா கண்ணீரு பெருக பெருக அழுது ஒப்பாரி வைப்பாங்க.... அப்படி அங்க அழும்போது, எங்க அம்மா அழுவுதேன்னு நானும் சேர்ந்து அழுத கதையெல்லாம் கூட உண்டு.... சரி அத விடுங்க....

இப்படி ஒரு வாரம் ஒப்பாரி வச்சு அழுவாங்க.... ஏழாம் நாள் ராத்திரி அழுது, ஊரு ஒறவு மொறைல இருக்க மாமன் மச்சினன் எல்லாம் சம்மந்த கொட்டு கொட்டிகிட்டு சேலை, நெல்லு எல்லாம் கொண்டு வந்து போடுவாங்க.... எட்டாம் நாள் காலைல அந்த வருண பகவானோட பொணத்த ( கொடும்பாவிய) இழுத்து கொண்டு போய் வறண்டு கெடக்குற ஏரில போட்டுட்டு வந்திடுவோம்....சொன்னா நம்ப மாட்டீங்க... அதிக பட்சம், அழுவ ஆரம்பிச்ச நாலாம் நாளே மழை வந்துடும்... தவறி போனா... ஏரில கொண்டு போய் போட்டுட்டு வந்தன்னிக்கு ராத்திரி மழை பின்னி எடுக்கும்.. கொட்டோ கொட்டுன்னு கொட்டி தீத்துடும்...

அதாவது.." நான் இன்னும் செத்துப்போகல....உயிரோடதான்இருக்கேன்.. இது என்னோட பொணம் இல்ல.." னு வருண பகவானே மழையா இறங்கி வந்து , .. அந்த பொம்மைய (கொடும்பாவிய) கரைச்சு விட்டுடுவாராம்.....

வானம்பாத்து விவசாயம் பண்ணி உலகத்துக்கே சோறு போடுற விவசாயிங்களோட நம்பிக்கை அந்த கொடும்பாவி.... இப்போ மழையும் இல்ல.. ஏரியும் இல்லாம போச்சு.... விவசாயமே இல்லாம போச்சே...நாங்க எங்க இருந்து வருண பகவான வம்புக்கு இழுக்க???

வருணனையே சீண்டிப்பாத்த எங்க நம்பிக்கைக்கு இப்போ வேலையிலாம போயி, நாங்க வேணாம்னு விட்டுட்டோம்.....இப்போ உள்ளவிங்க தனக்கு புடிக்காத கட்சிக்காரங்களையும் ஆட்சியாளர்களையும் அவமானப்படுத்த கொடும்பாவி கொளுத்துறாங்க....

புகைப்படம் - வழக்கம் போல இணையத்தில் இருந்து

சதுரங்க ஆட்டை...



நம்மூர்ல இருக்க அம்மா- அக்கா- அத்தை- அத்தாச்சிங்க எல்லாம் நம்மள "அவன் ஒரு முட்டாப்பய... பேச்சு மட்டும் உலகமே தெரிஞ்ச மாதிரி பேசுவான்... ஆனா ஒரு மண்ணும் இருக்காது... சும்மா வாய்ல தான் பிரியாணி போடுவான்... " அப்படின்னு புகழ்றாங்களாம் ...

இப்போ ஒரு சுவாரஸ்யம் வந்திருக்குமே.. கொஞ்சம் பெரிய பதிவுதான்.. இதே சுவாரஸ்யத்தோட தொடர்ந்து படிங்க...

கிராமங்கள்ல சீட்டுக்காரங்கன்னு ஒரு குரூப்பு வாடகை சைக்கிள்லையோ , டி வி எஸ் எக்செல்லையோ சுத்திகிட்டு திரிவாய்ங்க... தவணை முறைல கட்டில், பீரோ, காத்தாடி, நாற்காலி, மேஜை, ஃபிரிட்ஜ் எல்லாம் கொடுப்பாங்க...

வாரம் ஒரு முறை வசூலுக்கு வருவாங்க... நம்ம மக்கள் நூறுநாள் வேலைல மிச்சம் பண்ண காசுலையோ- புருஷன் பாக்கெட்ல ஆட்டைய போட்ட காசுலையோ ( இவனுக்கு எங்கள சீண்டலன்னா பொழுது போகாது ..# மைன்ட் வாய்ஸ் படிச்சுட்டேன் அக்காக்களே ) அம்பதோ- நூறோ கட்டுவாங்க...

பொருளோட மதிப்புல பாதி அளவு கட்டினதும் பொருளை கொண்டு வந்து கொடுப்பாங்க... ஒரு டெம்போவுலையோ, குட்டியானைலையோ கிரைண்டர், பீரோ, பிளாஸ்டிக் நாற்காலி எல்லாம் எடுத்து போட்டுக்கிட்டு அவங்க வசூல் பண்ற எல்லா ஊருக்குள்ளயும் வலம் வருவாங்க... இதுவும் ஒரு விளம்பர தந்திரம் தான் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மூணு பேருக்கோ, நாலு பேருக்கோ பொருளை கொடுப்பாங்க...இதுதான் தூண்டில்ல புழு கோக்குற தந்திரம்...

அட... அவங்க ஏமாத்த மாட்டாங்கப்பா.... கரெக்டா கொடுக்கிறாங்கலாம்னு செய்தி காட்டு தீ போல பரவும்... இதுல முக்கியமான விஷயம் என்னன்னா.... முதல்ல பணம் கட்டி பொருள் வாங்கினவங்க எல்லாம் வசதிக்காரங்களா இருப்பாங்க... அவங்களுக்கு ஒரு நாற்காலியோ, ஒரு ஸ்டீல் பீரோவோ கொண்டு போய் கரெக்டா டெலிவரி கொடுத்திடுவாங்க....

"அதோ... அந்த முக்குல இருக்குள்ள பச்ச கலர் மாடி வீடு... அவங்க வீட்ல இப்போ தான் அக்கா ஒரு பீரோ கொடுத்துட்டு வரோம்... வேணும்னா கேட்டு பாருங்க..." என்று அந்த மாடி வீட்டுக்காரரையும் துணைக்கழைத்து கொள்வார்கள்...

அப்புறம் என்ன... அவங்க வாங்கிட்டாங்க... அப்படின்னு ஒரு எண்ணம் மண்டைக்குள்ள குடையும்.. நாமளும் வாங்கனும்னு ஒரு ஆர்வம் கிளம்பும்... அப்படின்னு ஊரே திரண்டு பணம் கட்டும்.. ஒரு குறிப்பிட்ட தொகை வசூல் ஆகற வரைக்கும் தான் இவங்க வாரம் வாரம் வருவாங்க.. இந்த டார்கெட் ரீச் ஆக சிலருக்கு ஆறுமாசமோ.. சிலருக்கு ஒரு வருஷமோ.. சில கம்பெனிக்கு நாலஞ்சு வருஷமோ கூட ஆகும்... ஆனா ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரையில் அந்த கொக்கு காத்திருக்கும்...

அப்புறம் சொய்ங் ன்னு பறந்து போய்டும்.. கடை இருந்ததுக்கான தடயமே இருக்காது..... 

நான் ஊர்ல இருந்தப்போ ராதா அத்தான் டீக்கடைல உட்கார்ந்திருந்தேன்... நம்மள எப்படித்தான் கரெக்டா கண்டு பிடிக்கிறாய்ங்களோ தெரியல... நம்மகிட்ட வந்து ஒரு ஆள் இந்த மாதிரி விஷயம் னு சொன்னார்.... நமக்கு இந்த மாதிரி சமாச்சாரம் எல்லாம் அரசல் புரசலா காதுல விழுந்திருந்ததால.. ரொம்ப கெட்டிக்காரத்தனமா..... "எனக்கு ஒரு ஃபிரிட்ஜ் வேணும்... எவ்ளோ அமவுண்ட்ட சொல்லுங்க.. அதுல பாதிய நான் இப்போவே கட்டிட்டு பொருள எடுத்துக்கிறேன்" அப்படின்னு சொன்னேன்...

"ஓ.. தாராளமா சார்.... எல்லா பிராண்டும் இருக்கு.. சாம்சங், எல் ஜி, வேர்ல்பூல்... எது வேணுமோ எடுத்துக்குங்க ...அடுத்த திங்கக்கிழமை வந்து எடுத்துக்குங்க.. ஆனா இப்போ நீங்க நூறு ரூபா கட்டி உங்க பெற ரிஜிஸ்டர் பண்ணிக்குங்க சார்..."ன்னு ஒரு வாரம் அப்புறம் வர போற திங்கக் கிழமையை குறிப்பிட்டான் அந்த ஆள்...

நான் ஏன் அப்படி கேட்டேன்??? அவன் ஏன் அப்படி சொன்னான்...???

"எப்படியும் இவனுங்க ஏமாத்திட்டு ஓடிடுவானுங்க,... முதல்ல பாதி பணம் கட்டி பொருள கைப்பத்திட்டோம்னா.... தொடர்ந்து வந்தா மிச்ச பணத்தை கட்டுவோம்... ஒருவேளை ஓடிட்டான்னா நமக்கு பொருள் வந்திடுச்சு.... மிச்ச பணத்தை வசூல் பண்ண வரமாட்டான்.. நமக்கு மிச்சம்..." # இது என்னோட யோசனை...

"அட பக்கி பயலே.... நாங்க எம்புட்டு பெரிய களவானிப்பயலுங்கள எல்லாம் பார்த்தவிங்க.. நீ என்னடா பிஸ்கோத்து..." அப்படின்னு மனசுக்குள்ள சொல்லிட்ட அந்த ஆள் என் கிட்ட நூறு ரூபா வாங்கிகிட்டு, அவனோட ரசீது புத்தகத்துல தெளிவா என்னோட பேர எழுதி கையெழுத்தும் வாங்கி கிட்டான்... ஆனா அத காட்டி காட்டி... "நம்ம செந்திலண்ணன் இல்ல.... வெளிநாட்டுல இருந்து வந்திருக்காருல்லம்மா.... அவரு கூட கட்டி இருக்கார் பாருங்க..."ன்னு சொல்லி சொல்லி ஊரெல்லாம் வசூல் பண்ணிட்டான்...

"அந்த தம்பி ரொம்ப வெவரமா பேசும்.... அந்த தம்பியே பணம் கட்டி இருக்குனா நாமளும் கட்டலாம்"ன்னு ஊருல இருக்க அம்மாங்க, அக்காங்க, அத்தாச்சிங்க, அத்தைங்க எல்லாம் கடுகு டப்பா, மிளகு டப்பால கிடந்த நூறு அம்பது எல்லாம் கொண்டு வந்து கட்டிட்டாங்க....

அவன் குறிப்பிட்ட திங்கக்கிழமையும் வந்துது... நானும் கிளம்பி அவன் சொன்ன இடத்துக்கு போனேன்... கடை புதுசா செட்டப் பண்ணி இருந்தான்... நமக்கு நம்ம எண்ணம் உறுதியாயிடுச்சு... இவன் எப்படியும் ஓடிருவான்.. நாம வாங்க போற பிரிட்ஜ்க்கு கட்டப்போற தவணைல 1000 ரூபா மிச்சம் நின்னாலும் நமக்கு ஆதாயம் தான்...

(இதுவரைக்கும் செந்தில் கெட்டிக்காரத்தனமா தான யோசிச்சு இருக்கான்.. இவனை ஏன் ஊர்ல இருக்க பொம்பளைங்க திட்டனும்...??? கேள்வி வருது தான... )

நான் அவன் கடைக்கு போனப்போ என்கிட்ட வசூல் பண்ணவன் இல்ல.... நான் சீட்ட காட்டி விஷயத்த கேட்டப்போ... அங்க இருந்த ஆள் சொன்னான்... "ஆமா சார்.. இது நம்ம கடைதான்.. அவர் நம்ம ஏஜென்ட் தான்... இருங்க ஹெட் ஆபீஸ்ல கேக்கிறேன்... " அப்படின்னு சொல்லிட்டு எங்கயோ ஃபோன் பண்ணான்... அப்புறம்.." சார்... இப்போதைக்கு சின்ன சின்ன பொருள் மட்டும் தான் வந்திருக்கு... டி வி, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் எல்லாம் அடுத்த வாரம் தான் வருது... நீங்க வேணும்னா இப்போ பணம் கட்டிட்டு போங்க... பொருள் வந்ததும் அனுப்பிட்றோம்"ன்னான்..

அட.... இவன் நமக்கு அல்வா கொடுக்க ப்ளான் பண்றான்னு, எனக்கு இபோ கொடுக்க முடியும்னா கொடு.. நீ கேக்கிற தொகைய நான் கற்றேன்.. இல்லன்னா என் நூறு ரூபாய திரும்ப கொடு.." அப்படின்னு கேட்டேன்.. எதுவும் பேசாம அந்த நூறு ரூபாய கொடுத்துட்டான்...

"அந்த மாடி வீட்டுக்காரங்க பீரோ வாங்கினாங்க"ன்னு சொல்லி ஆள் செர்த்தப்போ அட்லீஸ்ட் அந்த மாடி வீட்டுக்காரங்களுக்கு மார்கெட் விலையை விட நூறு இருநூறு கம்மியா ஒரு பொருள் கிடைச்சுது.. ஆனா நம்ம பேர அவன் இலவசமாவே பயன் படுத்தி அவன் டார்கெட்ட ரீச் பண்ணிட்டான்....

அட.. ஆமாப்பா .. ஆமா..... ஒரு ராத்திரியோட ராத்திரியா எல்லாத்தையும் அள்ளி வண்டில போட்டுக்கிட்டு ஓடிட்டாய்ங்களாம்.. கடை இருந்த தடயமே இல்லையாம்...

இப்போ மறுபடியும் முதல்ல இருக்க பாராவ படிங்க....

# இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்... இந்த மாதிரி களவானிப்பயலுக உங்க ஊருக்குள்ளயும் வருவாய்ங்க... என்னை மாதிரி ஒரு கெட்டிக்கார ஏமாளியும் இருப்பான்.. அவன் உஷாராயிடுவான்... போய்டுவீங்க.... சூதனமா பொழச்சுக்குங்க....

உனது எல்லைக்குள் நில்...




பாதுகாப்பு விதிமுறைகளை கடை பிடிக்க சொன்னால் அதை மீறுவதை பெருமையாகவும் சந்தோஷமாகவும் நினைக்கும் நாம், அதனால் பாதிப்பு ஏற்பட்ட உடன் அரசை குறை சொல்கிறோம்...

பண்டிகை காலங்களில் கடற்கரையில் காவல் துறை தடுப்பு வேலி அமைத்தால் அதை மீறிக்கொண்டு கடலுக்குள் இறங்குவது.. காவல் துறை தடுத்தால் "எங்கள் உரிமையை தடுக்கிறீர்கள்.. எங்கள் கொண்டாட்டத்தை குலைக்கிறீர்கள்" என்று கோஷம் போடுவது.. அதேநேரம் யாரையாவது அலை இழுத்துச்சென்றால்.. உடனே.. "காவல்துறை கடமையை செய்யவில்லை என்று கூவுவது....

ஆட்கொல்லி விலங்குகள் இருக்கும் மிருக காட்சி சாலைகளில் பாதுகாப்பு வேலிகள் அமைத்திருப்பார்கள்... டெல்லி மிருக காட்சி சாலையில் அதை மீறி சென்ற ஒருவர் நேற்று புலியால் இழுத்து செல்லப்பட்டார்...

தடுப்பு வேலியின் உயரம் குறைவு என்று இப்போது அரசை குறை சொல்கிறார்கள்... புலி அந்த வேலியை தாண்டி வெளியே வந்திருந்தால் மட்டுமே வேலியின் உயரம் குறைவு என்பதை பற்றி பேச முடியும்.. இவன் சாகசத்தை காட்ட வேலியை தாண்டி உள்ளே குதித்தால் யார் பொறுப்பாக முடியும்.. இதனால் போனது இவன் உயிர்.. இதனால் பாதிக்கப்பட்டது இவன் குடும்பம்...

எதெற்கெடுத்தாலும் அரசை குறை சொல்வதை கை விட்டுவிட்டு, தனி மனித ஒழுக்கத்தையும், அரசின் கட்டுப்பாடுகளை கடை பிடித்தலையும் எப்போது நாம் முன்னேடுகிறோமோ.. அப்போதுதான் இது போன்ற செயல்களை கண்டிக்கும் உரிமை நமக்கு வருகிறது....

அப்படி கடை பிடிக்க தயாராக இல்லை எனில்...

என்னுடைய பாஷையில் சொல்வதென்றால்.... "சாவட்டும் விடு சனியன...."

எப்படி புரிய வைக்க??


ஒரு வீட்ல ஒரு குழந்தை செத்து போச்சு.... எல்லோரும் கூடி அழுது ஒப்பாடி வச்சு கதறினாங்க....

சத்தம் கேட்டு ஒரு பிறவி குருடர் அங்க வந்தார்... அவருக்கு காதும் அரைகுறையா தான் கேக்கும்.... என்னை மாதிரி கொஞ்சம் முட்டாள் ( உன்னை மாதிரின்னு சொன்ன... சரி... ஆனா கொஞ்சம னு சொல்றியே...... எப்படிப்பா..ன்னு நீங்க கேக்குறது நல்லாவே புரியுது.. கோபத்த கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு தொடர்ந்து படிங்க..)

அந்த பிறவி குருடருக்கும்- அங்க நின்னுகிட்டிருந்த இன்னொருத்தருக்கும் நடந்த உடையாடல கேப்போமா...

"என்ன ஆச்சு.. ஏன் நிறைய பேர் ஒரே நேரத்துல அழுவுறாங்க...?"

"குழந்தை செத்து போச்சுப்பா..."

"அய்யய்யோ... எப்படி.."

"பால் குடிக்கும்போது விக்கிகிச்சு.... செத்து போச்சு.."

"பாலா... அது என்னது...?"

"குழந்தைங்க பசிக்கு குடிக்கிறதுப்பா.. வெள்ளையா தண்ணி மாதிரி இருக்கும் "

"வெள்ளையாவா... வெள்ளைன்னா என்ன...."

"அட.. அது ஒரு கலருப்பா... கொக்கு இருக்கும்ல.. அந்த மாதிரி.."

"கொக்கா.. அது எப்படி இருக்கும்..."

நம்ம ஆள் கடுப்பாயிட்டார்.... தன்னோட கைய கொக்கு மாதிரி வளைச்சு காட்டி "இதோ இப்படி தான் இருக்கும்"ன்னு சொன்னார்...

அத தடவி பார்த்த அந்த குருடர் சொன்னார்.. "இத கொண்டு போய் குழந்தை வாயில கொடுத்தா விக்காம என்னய்யா பண்ணும்..."

# இப்படித்தாங்க நம்மல்ல சில பேர்... ஒரு விஷயத்த பத்தி அடிப்படை அறிவும் இருக்காது.. சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாங்க.... அதே நேரம் என்ன நடந்துதுன்னும் தெரியாது.. ஆனா கிளைமாக்ஸ் ல வந்து அவங்க என்ன நினைக்கிறாங்களோ அதை சொல்லி நம்மள கடுப்பேத்துவாங்க.... என்ன பண்றது.. எல்லாம் டிசைன் ல இருக்குன்னு போக வேண்டியது தான்...!!!

பூமிக்காதலன்...



ஒரு பெரிய பணக்காரர்.... நிறைய மக்கள் சுற்றுலா வர இடத்துல ஒரு நாலைஞ்சு விடுதி கட்டினார்... அதுல ஒரே ஒரு விடுதிய மட்டும் திறந்து, அங்க வரவங்கள இலவசமா தங்க வச்சார்... ஒரே ஒரு கண்டிஷன் தான் போட்டார்... "நீங்க வாடகை எதுவும் கொடுக்க வேண்டாம்... இந்த விடுதிய நான் இப்போ எப்படி உங்ககிட்ட ஒப்படைக்கிறேனோ... அதே மாதிரி வச்சுக்கணும்..."

நிறைய பேர் வருவாங்க... கொஞ்ச நாள் தங்குவாங்க... அப்புறம் போய்டுவாங்க... ஆனா வந்தவங்க யாருமே அவர் சொன்ன கண்டிஷன மதிக்கல... அங்க அங்க குப்பைய போடுவாங்க... செவத்துல கிறுக்கி வைப்பாங்க... டாய்லெட் போயிட்டு தண்ணி ஊத்த மாட்டாங்க... அழகுக்காக வச்சிருந்த பூச்செடிகள எல்லாம் உடைச்சு போடுவாங்க... அங்க இருந்த புல்வெளிகள், நீரூற்றுகள் எல்லாத்தையும் நாசம் பண்ணுவாங்க... அப்போ அப்போ அந்த பணக்காரர் வந்து சொல்லுவார்.. சமயத்துல கோபம் வரப்போ கரண்ட கட் பண்ணிடுவார்... இல்லன்னா பெட் எல்லாம் தண்ணி ஊத்தி விட்டுட்டு போய்டுவார்... ஆனாலும் அந்த இலவச சேவைய அவர் நிறுத்தல... கரென்ட் இல்லாத்தப்போவும், பெட்ல தண்ணி ஊத்தின அன்னிக்கும் மட்டும் ரொம்ப நல்லவங்க மாதிரி நடிப்பாங்க... மறுபடியும் கரென்ட் வந்துட்டாலோ, பெட்ல ஈரம் காய்ஞ்சுட்டாலோ வழக்கமான குசும்ப ஆரம்பிச்சிடுவாங்க....

இதுல இன்னும் கொஞ்ச பேர் பண்ணதுதான் பெரிய லொள்ளு... இலவசமா யூஸ் பண்ண கொடுக்காம மூடி வச்சிருந்த மத்த நாலு விடுதிகளையும் போய் ஜன்னல உடைச்சு உள்ள என்ன இருக்குன்னு பார்க்கிறது.... நாம அதுல போய் தங்கலாமான்னு பார்க்கிறது... அந்த அழுக்கான விடுதிய விட இந்த விடுதி சுத்தமா நல்லாதான இருக்கு.. இதையும் நமக்கு ஓசில கொடுத்தா என்னன்னு யோசிக்கிறது... இப்படி தான் இன்னிக்கு வரைக்கும் நடக்குது.. அந்த பணக்காரர் நிஜமாவே நல்லவர்ங்கிறதால பெரிசா ஒன்னும் பண்ணாம அப்போ அப்போ பெட்ல தண்ணி ஊத்துறது, கரெண்ட புடுங்கிட்டு அப்புறம் மறுபடியும் போனா போகுதுன்னு கனெக்ட் பண்ணி விடுறதுமா இருக்காரு...

ஆனா அவரும் மனுஷன் தான...?? அவருக்கும் கோபம் வரும்... என்னிக்கு மொத்தமா மூடிட்டு எல்லோரையும் தொறத்த போறாரோ தெரியல... பார்க்கலாம்...

# செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் இந்தியாவின் மங்கள்யான் நிலை கொண்டது... செவ்வாயை சீண்டிய ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் வரிசையில் நான்காவதாக இந்தியாவும் இணைந்தது...

ஒரு இந்தியனாய் மகிழ்ச்சியடைந்து விஞ்ஞானிகளை பாராட்டினாலும்... ஒரு பூமிக்காதலனாய் , அவளை சீரழிப்பதை தொடர்ந்துகொண்டே செவ்வாயை சீண்டும் செலவினம் தேவையா என்ற கேள்வியுடன்... - . செந்தில் கே நடேசன்..!!!

சுடிதார்- சல்வார்



ஏறக்குறைய அனைத்து இளம் பெண்கள் மற்றும் பெருவாரியான பேரிளம் பெண்களால் அணியப்படும் ஒரு ஆடையாகி விட்டது சுரிதார் மற்றும் சல்வார்...
சுரிதார் (இதனை சுடிதார் என்று சொல்வோரும் உண்டு.. ஆனால் சுரிதார் என்பதே சரி. இதற்கான பெயர்க் காரணம் பிறகு பார்க்கலாம்)

எல்லோராலும் அணியப்பட்டாலும் சுரிதார்- மற்றும் சல்வாருக்கிடையே என்ன வித்தியாசம் என்பது 70% பெண்களுக்கு தெரியாது என்பதே உண்மை... அவரவருக்கு அப்போது என்ன தோன்றுகிறதோ அதை சொல்வார்கள்.. அல்லது துணிக்கடையில் விற்பனையாளர் சொல்வதையே இவர்களும் சொல்வார்கள்...

இந்த சுரிதார் மற்றும் சல்வார் என்ற இரண்டு பெயர்களுமே குறிப்பது இடுப்புக்கு கீழ் அணியும் பேன்ட் போன்ற காலுறைகளை தான்...

முதலில் சல்வார் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்...

இதன் மேற்பகுதி அகலமாகவும் சற்று லூசாகவும், கீழே செல்ல செல்ல குறுகலாகவும் இருக்கும்... அவரவர் உயரத்திற்கேற்ற சரியான அளவில் தைத்துக்கொள்ளலாம்... சல்வார் ஆண் - பெண் இருவருக்கும் பொதுவான உடை .. வட இந்திய ஆண்களால் சல்வார் அணியப்படுகிறது..

இப்போது சுரிதார் .... இது ஒரு இந்தி மொழியில் இருந்து வந்த வார்த்தை

இதுவும் பார்ப்பதற்கு சல்வார் போன்று இருந்தாலும் இது சற்று டைட் பிட்டிங் உடன் இருக்கும், பிருஷ்டம், தொடை, கெண்டைகால் பகுதிகளை சற்றே இறுக்கி பிடிப்பது போலவும் நீளம் சற்று அதிகமாகவும் இருக்கும்.. இந்த நீளம் அதிகமாக இருப்பதால் கணுக்கால் பகுதியில் சிறு சிறு மடிப்புகளுடன் காணப்படும்.. கால் மடக்கி உட்காரும்போது இந்த மடிப்புகள் நீண்டு வசதியாக அமர உதவும் ..இந்தி மொழியில் "சுரி" என்றால் வளையல்... "தார்" என்றால் .. மாதிரி... இந்த மடிப்புகள் வளையல்கள் போன்று இருக்கும்... இதனாலேயே இதற்கு சுரிதார் என்று பெயரிடப்பட்டது... இது பட்டு, பருத்தி, ஷிபான், ஜார்ஜெட்டி போன்ற துணிகளால் தைகப்படுகிறது.. (இதையே பின்னலாடையில் தைத்து அணிந்தால் அது லெக்கின்ஸ் என்று அறிக)

சுரிதார் மற்றும் சல்வாருக்கு மேலே அணியும் உடல் பகுதியை மூடும் பகுதிக்கு கமீஸ் என்று பெயர்.. சல்வார் மற்றும் சுரிதாருக்கு பெண்கள் கமீஸ் அணிவார்கள்.. ஆண்களுக்கான சல்வார் மேல் அணியும் உடல் பகுதி ஆடைக்கு குர்த்தா என்று பெயர்... கம்மீஸ் ஆண்களால் அணியப்படுவதிலை.. ஆனால் குர்த்தா பெண்களாலும் அணியப்படும்... இவைகள் பொதுவான அடையாளத்தில் "டாப்" என்று சொல்லப்படும்...

இந்த கம்மீஸ்-குர்தா பல்வேறு வடிவமைப்புகளாலும், ஜமிக்கி, மணி, எம்பிராய்டரி போன்ற வேலைகளாலும் அழகு படுத்தப்படுகிறது...

இதற்கு மேல் முன்பொரு காலத்தில் துப்பட்டா என்று சொல்ல கூடிய நீளமான ஒரு துணி அணியப்பட்டது.. அது தற்போது பெண் சுதந்திர போராளிகளால் தடை செய்யப்பட்டிருக்கிறது..

## ரொம்ப முக்கியமான ஒரு பதிவு போட்டிருக்கேன் மக்களே... பார்த்து செய்ங்க...

(இதுவரை இது பற்றி தெரியாமல் இருந்து இப்போது செந்தில் கே நடேசன் பதிவை படித்து அறிந்துகொண்ட இளம் பெண்கள் தங்களது நன்றியை இன்பாக்ஸில் பொழியவும்... குறிப்பு:- என்னுடைய இன்பாக்ஸ் , அண்ணன் என்ற அழைப்பு தடை செய்யப்பட பகுதி)

நிர்வாக சங்கிலி



நான் துபாய்ல வேலை செஞ்ச கம்பெனியோட (நீ வேலை செஞ்சியா.....???? அட நம்புங்க எசமான்... அப்போ எல்லாம் ராத்திரி எட்டு மணிக்கு மேலயும், லீவு நாள்லயும் தான் பேஸ்புக்ல வேலை) வேர்ஹவுஸ்ல ஒரு மெசனைன் ஃப்ளோர் பண்ணி இருந்தாங்க...

அதாவது வேர் ஹவுசோட அளவு 5000 சதுர அடி... உயரம் சுமார் அம்பது அடி இருக்கும்... தரைல இருந்து இருபது அடி உயரத்துக்கு இவங்க நடுவுல டெம்ப்ரவரியா ஒரு ஃ ப்ளோர் ரெடி பண்ணி அதையும் ஸ்டோரேஜ்க்கு பயன் படுத்தினாங்க... 5000 SQ FT வாடகைக்கு எடுத்து , 4000 SQ FT எக்ஸ்ட்ராவா ரெடி பண்ணி ஸ்டோரேஜ் பண்ணினாங்க... ( இப்போ புரிஞ்சுருக்குமே... கரெக்ட்... கம்பெனி ஓனர் இந்தியனே தான் )

ஒரு நாள் துபாய் முனிசிபாலிட்டில இருந்து ஒரு இன்ஸ்பெக்டர் வந்தார்... யாரையும் எதுவும் கேக்கல...நாலைஞ்சு போட்டோ எடுத்துகிட்டு போய்ட்டார்... ஓனர் வந்ததும் நான் தான் சொன்னேன்.. "இது மாதிரி இன்னாரு வந்தாங்க... போட்டோ எடுத்தாங்க.. போய்ட்டாங்க... "ன்னு...

"ஏதாவது சொன்னாரா அந்த ஆள்"ன்னு கேட்டார்...

"ஒன்னும் சொல்ல"ன்னு நான் சொன்னேன்..

ஒரு வாரம் அப்புறம் துபாய் முனிசிபாலிட்டில இருந்து ஒரு நோட்டீஸ் வந்துது...அதாகப்பட்டது..."நீங்க இப்படி இப்படி டெம்ப்ரவரி வேலை பண்ணி இருக்கீங்க.. அதுக்கு முனிசிபாலிட்டி அப்ரூவல் இல்ல... அதனால அதுக்கு அப்ரூவல் வாங்குங்க.."ன்னு...

அந்த லெட்டரை கொண்டு போய் நான் ஓனர்கிட்ட கொடுத்தேன்.. அவரும் அத வாங்கி தூக்கி போட்டுட்டார்... அப்புறம் அடுத்த வாரம் ஒரு ரிமைண்டர் நோட்டிஸ் வந்துது.. அதையும் தூக்கி போட்டாச்சு... ஒரு நாள் திடீர்னு கரெண்டு நின்னு போச்சு... துபாய் ல கரென்ட் கட்டா.... என்னடா இதுன்னு போய் பார்த்தா.. அங்க DEWA (Dubai Electricity & Water Authority) ஊழியர் ஒருத்தர் நம்ம கம்பெனிக்கு வர லயனோட பீச புடுங்கிட்டு நிக்கிறார்.... அவர என்ன சங்கதின்னு கேட்டா எனக்கு தெரியாது.. ஆபீஸ்ல சொன்னாங்க.. நான் புடுங்கிட்டேன்னார்... அவர் பீச புடுங்கினதுக்கு மொத நாளு நம்ம கம்பெனிக்கு DEWA இருந்து ஒரு நோட்டிஸ் வந்திருக்கு.. அன்னிக்கு யாரும் போஸ்ட் பாக்ஸ் செக் பண்ணாததால அந்த நோட்டீஸ் விஷயம் தெரியல... அப்புறம் அத பிரிச்சு படிச்சா "இந்த மாதிரி நீங்க முனிசிபாலிட்டில அப்ரூவல் வாங்காம என்னமோ பண்ணி இருக்கீங்க.. முனிசிபாலிட்டில இருந்து எங்களுக்கு கம்ப்ளைன்ட் வந்திருக்கு.. முனிசிபாலிட்டில இருந்து "அவங்க பிரச்சினை முடிஞ்சுது.. அவங்களுக்கு கரெண்டு கொடுங்க"ன்னு சொன்னா தவிர உங்களுக்கு கரண்டு தர மாட்டோம் " ன்னு...

ஆஹா... இப்போதான் நம்ம ஒன்றுக்கு நிலைமையோட தீவிரம் புரிய ஆரம்பிச்சுது... என்னை துரத்தினார்.. ஓடு.. ஓடு.. என்னன்னு பாருன்னு..... நேரா DEWA ஆபீஸ்க்கு ஓடினேன்... ரம்ஜான் நேரம் அது.... அந்த அதிகாரி "ஒரு மாசம் கிரேஸ் பீரியட்" தரோம்.. அதுக்குள்ளே வேலை முடிச்சுட்டு முனிசிபாலிட்டி அப்ரூவலோட வாங்க.. அதுக்கு முன்னாடி இப்போ கனெக்ட் பண்றதுக்கு 10000 திராம்ஸ் செக்யூரிட்டி டெபாசிட் கட்டுங்க ன்னு சொன்னார்.. அத கட்டி கரென்ட் கனெக்ஷன வாங்கிட்டு அப்புறம் பழைய நோட்டீஸ தூக்கிகிட்டு முனிசிபாலிட்டிக்கு ஓடினோம்.. அவங்க தெளிவா சொல்லிட்டாங்க... "எங்ககிட்ட அப்ரூவல் வாங்காம நீங்க இந்த வேலைய பண்ணி இருக்கீங்க.. எங்க அப்ரூவல் டிபார்ட்மென்ட்ல இருந்து அப்ரூவல் லெட்டர் வாங்கிட்டு வாங்க"ன்னு சொல்லிட்டாங்க... அது வேற இடம்... அங்க ஓடினா.. "மொதல்ல நீ பண்ணின எக்ஸ்ட்ரா வேலையோட டிராயிங் எடுத்துட்டு வா"ன்னாங்க.... ஏற்கெனவே எசெஞ்ச வேலைக்கு இப்போதான் டிராயிங் ரெடி பண்ணனும்.. அதுக்கு ஒரு தனியார் கம்பெனிய புடிச்சா... அவன் ஒரு டிராயிங் ரெடி பண்ணி கொடுத்தான்.... அத எடுத்துகிட்டு மறுபடியும் முனிசிபாலிட்டி அப்ரூவல் டிபார்ட்மென்ட் க்கு போனோம்... முதல்ல இத CIVIL DEFENSE ல ( உள்நாட்டு பாதுகாப்பு- தீயணைப்புத்துறை) காட்டி அப்ரூவல் வாங்கிட்டு வான்னு சொன்னாங்க....

நேரா அங்க ஓடினோம்... "இதுக்கு அப்ரூவல் கொடுக்கணும்னா Fire Alarm , Smoke detector, sprinkler எல்லாம் வச்சு அத யார் வச்சு கொடுத்தாங்களோ அவங்க கிட்ட இருந்து ஒரு செர்டிபிகேட் வாங்கிட்டு வா" ன்னு சொன்னாங்க ...

ஷ்.... ஷப்பா.... ஒரு அம்பது வரி சேந்தாப்ல படிக்கவே கண்ண கட்டுதே.... இதை எல்லாம் நிஜமா செஞ்சவனுக்கு எப்படி இருக்கும்... எனக்கு அப்படி தான் இருந்துச்சு.. ஏன்னா மேல சொன்ன எல்லா இடத்துக்கும் போனவன் நான் தான்... அப்புறம் ஒரு பயர் பைட்டிங் எக்யூப்மென்ட் கம்பெனிய புடிச்சு அந்த வேலைய முடிச்சு, அப்புறம் மறுபடியும் civil defense , municipality, அப்புறம் DEWA ன்னு ஆன்டி கிளாக்வைஸ் ல அப்ரூவல் வாங்கி கரென்ட் கொண்டு வரும்போது அபராதம் சேர்த்து ஆன செலவு ஒருலட்சத்து அம்பதாயிரம் திராம்ஸ்...

இதே நம்மூர்ல நடந்திருந்தா என்ன ஆயிருக்கும்??? விசிடிங் வந்த இன்ஸ்பெக்டர் அவங்க டிபர்ட்மென்டக்கே சொல்லாமையோ, இல்ல மேலதிகாரிகளின் துணையுடனேயோ ஒரு அமவுண்ட வாங்கிகிட்டு யாருக்கும் சொல்லாம வீட்டுக்கு போய் இருப்பர்....

சரிடா.... காலைல துபாய் கவர்ன்மென்ட் தையும் தும்மலையும் லிங்க் பண்ண போறதா சொன்னியே.... இதுக்கும் தும்மலுக்கும் என்ன சம்பந்தம்...???

நம்ம மூச்சுக்குழல்ல அனுமதி இல்லாம ஏதாவது தூசு தும்பு புகுந்திடும்... அந்த மாதிரி நேரத்துல மூச்சுக்குழல் உடனே கம்ப்ளைன்ட் அனுப்பும் மூளைக்கு.... மூளை உடனே இதயம், நுரையீரல், கணையம், கிட்னின்னு உடம்புல இருக்க எல்லா டிபர்ட்மென்ட் க்கும் நோட்டீஸ் அனுப்பும் உடனே அந்த தூசுக்கு எதிரா எல்லா உறுப்புகளும் வேலை நிறுத்தம் செய்யும்... இது எல்லாம் மாசக்கணக்குல நடக்குறது இல்ல.... எல்லாமே மைக்ரோ செகன்ட் டைம்ல நடக்குறது... அடுத்து ஒரு தும்மல் வரும்.. அந்த அனுமதி இல்லாம உள்ள புகுந்த தூசிய வெளில அனுப்பிட்டு தான் மத்த வேலை... அப்படி தும்மும் ஆக்சன் நடக்கும் போது உடம்புல எந்த உறுப்பும் வேலை பண்ணாது.. கண்ணு கூட முடிக்கும்...அனுமதி இல்லாம நம்ம உடம்புல புகுந்தத வெளியேத்த நம்ம உடம்பு காட்டுற ஆர்வம் தான் துபாய் கவர்ன்மென்ட் மக்கள் நலனில் காட்டும் ஆர்வமும்...

நம்மூர் எப்ப சார் அப்படி ஆவும்?????

ஒரு யுத்தத்தின் பின் விளைவு



மிக கோரமான ஒரு யுத்தத்தின் முடிவில் , அந்த போரில் பங்கு கொண்ட ஒரு போர்வீரன் தன்னுடைய சொந்த தேசத்திற்கு திரும்புகிறான்...

ஐயோ... என்னுடைய தேசமா இது.. என்னுடைய ஊரா இது.... எப்படி இருந்த ஊர் இப்படி சீரழிந்து கிடக்கிறதே.. இங்கே சாலையின் நடுவில் அழகாய் இருந்த நீரூற்றுகள் எங்கே....
சாலையோரங்களில் தழைத்திருந்த பூச்செடிகளும் மரங்களும் எங்கே... பூங்காக்களில் விளையாடித்திரிந்த சிறுவர் சிறுமிகள் எங்கே... என பதைத்தபடியே நடந்துகொண்டிருந்தான்....

அவன் இருந்த தெருவிற்குள் நுழைந்தான்... அந்த தெருவின் வீடுகளில் விளக்குகளை ஏந்தியபடியே நின்ற பெண்கள் இவனை கண்டதும்.. "இன்றிரவு என் வீட்டில் தங்கி விட்டு செல்லலாமே" என்று அழைத்தார்கள்... ஆம்.. அவர்களின் வருமானமற்ற வயிற்று தேவை அவர்களை விபச்சாரத்தில் தள்ளி இருந்தது...

ஐயோ.... என்னுடன் பணி புரிந்து போரில் இறந்து போனவர்களின் மனைவிகள் அல்லவா இவர்கள்... என்று பதைத்தபடியே "இல்லை அம்மா.. எனக்காக அங்கே என்னவள் காத்திருக்கிறாள் " என்று சொல்லியபடி நடந்தான்...

கண்ணீர் வழிய வழிய நடந்த அவன் அந்த ஒரு வினாடியில் உடைந்து சுக்குநூறாகிப்போனான்.... ஆம்.. அவன் வீட்டு வாசலிலும் விளக்குடன் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள்...

# கனத்த மனதுடன் இந்த கதையின் முடிவில் சொல்லும் நீதி... போர்... அது எல்லாவற்றையும் இழக்க வைக்கும்...

புதியதோர் உலகம் செய்வோம்,..
கெட்ட போரிடும் உலகை வேரொடு சாய்ப்போம்...!!!

நாகரீக உணவுப்பழக்கம்



காலைல என்ன சாப்டீங்க....?

"கார்ன் பிளேக்ஸ் சாப்பிட்டேன்.."

இப்படி சொல்வதை நாகரீகம் என்று நம்பிய கூட்டம் கொடுத்த உற்சாகத்தில் அதனை தயாரிக்கும் நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருக்கிறது... இன்னும் ஆண்டுகளில் எல்லா மக்களையும் காலை உணவுக்கு எங்கள் தயாரிப்புகளை சாப்பிட வைப்போம் என்று...

இந்த இலக்கை நோக்கிய வளர்ச்சி.. 23 %... இதை பற்றி சொன்னால் அது சோளத்தில் தானே தயாராகிறது.... சோளம் நல்லது தானே... மருத்துவர்கள் அதில் நார்ச்சத்து இருக்கிறது.. வைட்டமின்கள் இருக்கிறது... புரதம் இருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்களே... என்றெல்லாம் கேட்பார்கள்...
முதலில் அந்த விளம்பரங்களில் நடிப்பவர்கள் எல்லோரும் டாக்டர்களே இல்லை என்ற அடிப்படை உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும்... அப்படி நடிக்கும் டாக்டர்களும் காசுக்காக கொலை செய்ய கூடிய நல்ல மனம் படைத்தவர்கள்

இந்த கார்ன் ப்ளெக்ஸ் (சோள அவல் ) எப்படி தயாராகிறது தெரியுமா???

சோளத்தை 80° -120° வெப்ப நிலையில் வேக வைத்து, அதன் பிறகு சுமார் 16 டன் எடை உள்ள ஒரு கருவியால் அடித்து நசுக்கி அவலாக்கி மறுபடி 220° வெப்பத்தில் அதன் ஈரத்தை உலர்த்தி கிடைக்கும் சக்கையில் செயற்கை ரசாயனங்கள் மூலம் வைட்டமின்கள், மினரல்களை சேர்த்து, அது கேட்டுஒப்பாய் விடாமல் இருக்க சில ரசாயனங்கள் சேர்த்து, அதன் பிறகு மணம் மிக்கதாய் ஆக்க சில ரசாயனங்களையும் சேர்த்து....

இப்படி ரசாயனகளை சேர்த்து சேர்த்து சேர்த்து.. கடைசியில் அதனை அழகான கண் கவர் பாக்கெட்டில் அடைத்து , விளம்பரம் செய்து அதனை நம் தலையில் கட்டுவார்கள்...

நாமும் நம் தாத்தா- பாட்டி தலை முறை தலை முறையாய் கம்பு, சோளம், கேழ்வரகு என்று தானியங்களை பயிர் செய்து வந்த விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்று விட்டு அந்த பாக்கெட் விஷத்தை சாப்பிட்டு விட்டு "நான் கார்ன் ப்ளெக்ஸ் சாப்பிட்டேன்.." என்று பெருமைப்படுகிறோம்...

நம்ம புத்திய எதால அடிக்கலாம்???

கணக்கு.



மில்லியன் கணக்கில் ட்ரான்சாக்ஷன் செய்ய கூடிய ஒரு தொழிலதிபர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் போய் , தனக்கு உடனடியாக 50000 டாலர் கடன் தேவைப்படுவதாகவும், அதற்கு ஈடாக தன்னுடைய பென்ஸ் காரை வைத்துக்கொள்ளும் படியும், தாம் அந்த பணத்தை வட்டியுடன் திருப்பி கட்டிவிட்டு தன்னுடைய காரை மீட்டுக்கொள்வதாகவும் சொன்னார்...

பென்ஸ் காரின் டாக்குமென்ட் எல்லாம் மிக சரியாகவே இருந்தது.. அந்த தனியார் நிதி நிறுவனமும் அந்த தொழிலதிபரின் காரை வைத்துக்கொண்டு டாலர்களை கடனாக கொடுத்தது.. வட்டி 1% என்ற விகிதத்தில்...

ஒரு மாதம் கழித்து வந்த அந்த தொழிலதிபர் வட்டித்தொகை 5௦௦ டாலர் மற்றும் அசல் 50000 சேர்த்து கட்டினார்... அப்போது அங்கிருந்த அந்த நிதி நிறுவன அதிகாரி...
"சார்... உங்களது கார் டாக்குமென்ட்களை வைத்து விசாரித்த பொழுது நீங்கள் மிகப்பெரிய தொழிலதிபர் என்றும் மில்லியன் கணக்கில் வங்கிகளில் பண பரிமாற்றம் செய்பவர் என்றும் அறிந்தோம்,... நீங்கள் கேட்டால் வட்டியே இல்லாமல் கடன் கொடுக்க அந்த வங்கிகள் தயாராக இருப்பதாகவும் அறிந்தோம்.. பிறகு ஏன் நீங்கள் எங்கள் நிறுவனத்தில் வெறும் 50000 டாலருக்கு தங்களின் விலை உயர்ந்த பென்ஸ் காரை அடமானமாக கொடுத்தீர்கள்..."

அப்போது அந்த தொழிலதிபர் சொன்னார்... இப்படியான கணக்குகளின் மூலமே என்னால் பெரிய தொழிலதிபராக வளர முடிந்தது.. எனக்கு 30 நாட்கள் வெளியூர் செல்ல வேண்டி இருந்தது... என்னுடைய காரை பார்க்கிங் ஏரியாவில் விட்டு சென்றால் ஒரு நாளைக்கு 30 டாலர் வீதம் 900 டாலர் கொடுக்க வேண்டும்.. அதோடு பப்ளிக் பார்க்கிங்கில் என்னுடைய காருக்கு பாதுகாப்பும் குறைவு... இப்போது உங்களிடம் வாங்கிய 50000 டாலருக்கு வட்டியாக நான் வெறும் 500 டாலர் மட்டுமே கொடுத்து இருக்கிறேன்.. எனக்கு 400 டாலர் மிச்சம்... அதோடு என்னுடைய காரையும் மிகவும் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டீர்கள்..."

## நாம எப்போ பணக்காரன் ஆவுறது???

நம்பிக்கை.... அதானே எல்லாம்...!!!



லண்டன்ல இருக்க கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிடி ல நேரு படிச்சுகிட்டிருந்தாராம்... வெளிநாட்டுல படிக்கிற பையனுக்கு செலவுக்கு பணம் அனுப்புவாராம் அவங்க அப்பா மோதிலால்...

என்னடா.. நாமளும் பணம் அனுப்பிகிட்டே இருக்கோம்... இந்த பய ஒன்னும் கணக்கு சொல்லவே மாட்டேன்றான்.... பய ஒழுங்கா படிக்கிறானா.. இல்ல ஊர் சுத்திகிட்டு வீணா செலவு பண்ணிக்கிட்டு திரியுரானான்னு ஒரு டவுட்டு வந்துச்சு மோதிலாலுக்கு...

ஒடனே ஒரு லெட்டர் எழுதினாராம்... "ஏம்பா... நானும் நீ கேக்க கேக்க பணம் அனுப்புறேன்.. ஒழுங்கா படிப்புக்கு செலவு பண்றியா... இல்ல.. எங்கயாச்சும் ஊர் சுத்துரியா.... ஒரு கணக்கும் சொல்ல மாட்டேன்ற...." அப்படின்னு...

ஒடனே நேரு .... "ஏம்பா..... உங்களுக்கு நம்ம புள்ள கண்டிப்பா கெட்டவழில செலவு பண்ணமாட்டான்னு எம்மேல நம்பிக்கை இருந்தா என்கிட்டே கணக்கு கேக்க மாட்டீங்க.... அப்படி எம்மேல நம்பிக்கை இல்லன்னா.... நான் என்ன கணக்கு சொன்னாலும் "இந்த பய பொய்கணக்கு சொல்றான்னுதான் நினைப்பீங்க... அப்புறம் எதுக்கு நான் செலவு கணக்கு சொல்லணும்??? " அப்படின்னு பதில் எழுதினாராம்....

நீங்க உங்க புள்ளைகிட்ட கணக்கு கேப்பீங்களா...?? கேக்க மாட்டீங்களா??

சமூக மாற்றம்





பூனை கண்ண மூடிகிட்டா பூலோகம் இருண்டு போச்சுன்னு நினைச்சுக்குமாம்....

இந்தியாவுல இருக்க நூத்து நுப்பது கோடி பேர்ல... சரி விடுங்க... தமிழ்நாட்டுல இருக்க எட்டுகோடி பேர்ல மிஞ்சிப்போனா அம்பது லட்சம் பேர் தான் ரெகுலரா பேஸ்புக் யூஸ் பண்ணுவாங்க... (குத்து மதிப்பா ஒரு கணக்குதான்... ) அதுலயும் இருபத்து நாலு மணி நேரமும் பேஸ்புக்கே கதின்னு கிடக்குறது.. நானும்.. இதோ... இத படிக்கிற நீங்களும் தான்...

நம்மள மாதிரி வெட்டி முண்டங்க (  ) என்ன ஒரு லட்சம் பேர் இருப்போமா??? இதுக்கு போய்.. இங்க ஸ்டேடஸ் போடுறவங்க எல்லாம் என்னமோ நாமதான் தமிழ்நாட்டோட அன்றாட நடவடிக்கைகள மாற்றி அமைக்கிறது மாதிரி பேசிகிட்டு கெடக்கோம்....

அட போங்கப்பா... நீங்களும் நானும் தமிழ்நாட்டோட அசைவுல ஒரு துரும்பை கூட நகர்த்தல... வயக்காட்டுல வேலை செய்ற விவசாயி, தொழிற் கூடங்கள்ள வேலை செய்யுற தொழிலாளி... சந்தைல வியாபாரம் பண்ற வியாபாரி... கடல்ல மீன் புடிக்கிற மீனவர்...இவங்கள மாதிரி ஆளுங்கதான் நாட்டோட நகர்வ தீர்மானிக்கிறவங்க...

இதுல பெரிய நகைச்சுவை என்னன்னா.... "நாம தமிழன்.. நம்ம தமிழ்தான் உலகத்துலேயே சிறந்த மொழி"ன்னு நம்மகிட்டே தமிழ் வியாபாரம் பண்ணி ஆட்சிக்கு வந்த கும்பல பார்த்து பார்த்து நாம கெட்டுப்போயிட்டோம்... வெட்டியா பேஸ்புக் ல பொழுத போக்கிட்டு "நாம தான் நாட்டோட நகர்வ தீர்மானிக்கிறோம்"னு பேஸ்புக் லையே ஸ்டேடஸ் போட்டு லைக் வாங்குறது... "என் தமிழ்தான் சிறந்த மொழி"ன்னு போய் ஒரு மலையாளிகிட்ட, தெலுங்கன் கிட்ட, ஒரு கன்னடன் கிட்ட, ஒரு இந்தி காரன் கிட்ட, ஒரு இங்கிலீஷ், பார்சி, அரபிக்காரன்கிட்ட சொல்லணும்.. அத விட்டுட்டு தமிழன்கிட்டயே வந்து "என் தமிழ்தான் உயர்ந்தது.. "அப்படின்னு அவன உசுப்பி விட்டு ஓட்டு வாங்கின மாதிரி.........

"பேஸ்புக் ல எழுதுற எங்கள மாதிரி ஆளுங்கதான் நாட்டோட அடுத்த கட்ட நகர்வ தீர்மானிக்கிறோம்"ன்னு வயக்காட்டுல வேலை செய்றவன்கிட்ட, கொல்லு பட்டறைல இரும்படிக்கிறவன், கடல்ல மீன் புடிக்கிறவன்கிட்ட எல்லாம் சொல்லணும்.. அதுதான் தில்லு... அத விட்டுட்டு. "நாமதான் அத கிழிக்க போறோம்.. நாமதான் இத கிழிச்சோம்"ன்னு பேஸ்புக் லையே ஸ்டேடஸ் போட்டுகிட்டிருந்தா என்ன அர்த்தம்???

(வேற மொழிக்காரன்கிட்ட போய் என் தமிழ் தான் உயர்ந்ததுன்னு சொல்றதும், நிஜமாவே உழைக்கிறவன் கிட்ட போய் நாங்கதான்(பேஸ்புக் யூசர்ஸ்) இந்த நாட்டோட தலை எழுத்த மாத்தப்போறவங்கன்னு சொல்றதும் ஒரே மாதிரி தான்... # மூஞ்சி மேலேயே குத்துவாங்க )

பகுத்தறிவு

பகுத்தறிவு என்பது மனிதனை விட மற்றவைகளுக்குத்தான் தான் அதிகம் என்பதை யாரும் சிந்திப்பதே இல்லை... ஒரு காகமோ, குருவியோ, எறும்போ.. தனக்கு தேவை இல்லாதவற்றை எக்காரணம் கொண்டும் சேர்த்து வைப்பதில்லை... ஒரு எறும்புக்கு அரிசிதான் உணவு என்றால் அது அரிசியை மட்டும் தான் எடுக்கும்.. அரிசி போலவே உருவ ஒற்றுமையுடன் தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களிலோ, கல், களிமண் போன்ற பொருட்களிலோ செய்து அதனை அரிசியுடன் கலந்து வைத்தாலும் அது அரிசியை மட்டும் "பகுத்தறிந்து" எடுத்துச்செல்லும்.. பிறகெப்படி சொல்ல முடியும் அதற்கு பகுத்தறிவு இல்லை என்று??

எறும்புகள் தங்கள் மொழியில் பேசிக்கொண்டிருந்தன... மனிதன் பகுத்தறிவற்றவன் என்று.. எறும்புகள் மட்டுமல்... நாய் பூனை.. கோழி.. கொக்கு என எல்லா ஜீவராசிகளுமே இப்படி தான் தங்கள் மொழியில் பேசிக்கொண்டிருக்கும்.. மனிதன் பகுத்தறிவில்லாதவன்... அவனுக்கு தேவை இல்லாதவற்றை சேர்த்து வைத்துக்கொண்டு, பிறகு அதை காப்பதற்காகவும் , கவர்வதற்காகவும் போட்டி போட்டு வெட்டிக்கொண்டு சாகிறான்... நமக்கெல்லாம் ஏழு அறிவு.. எட்டு அறிவு இருக்கிறது.. ஆனால் மனிதனுக்கு ஆறு அறிவுதான் இருக்கிறது... அவனை பொறுத்தவரை ஆறாவது அறிவுதான் பகுத்தறிவாம்...



ஆனால் நம்மை பொறுத்தவரை தேவை இல்லாதவற்றை சேர்த்துவைத்து பின் அதனை காக்க போராடட வேண்டாம் என்ற ஏழாவது அறிவும்.. நாளைய நமது உணவை நிச்சயமாய் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும்(எட்டாவது அறிவு) உண்டு...

அவைகள் பேசிக்கொள்வதிலும் ஏதோ ஒரு உண்மை இருப்பது போலத்தான் தெரிகிறது..!!!

காக்கைக்கும் தன் குஞ்சு...


மனிதர்களுக்கு தங்கத்தின் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு... அதன் பளபளப்பு, அதன் நிறம், அதன் ஜொலிப்பு, அதன் விலை.. இப்படி அதற்கு பல காரணங்கள் உண்டு..



தங்கத்தை விட விலை கூடுதலான பிளாட்டினம் கூட நிறம் மற்றும் பளபளப்பில் தங்கத்தை வெல்ல முடியவில்லை.. மற்றபடி வைரம் பளபளத்தாலும்/ஒளியை சிதறடித்து மின்னினாலும் அது பெரிய பணக்காரர்களின் ஸ்டேடஸ் சிம்பலாய் மட்டும் தான் இருக்கிறது.. வைரத்தையும், பிளாட்டினத்தையும் பற்றி அவ்வளவாக எல்லோருக்கும் தெரியாது... ஆனால் தங்கம் அனைவராலுமே விரும்பப்படும் மிக விலையுள்ள, மதிப்புள்ள, கவர்ச்சி மிக்க பொருளாக தன் இடத்தை தக்கவைத்துக்கொண்டு இருக்கிறது...

மனிதர்கள் தன்னுடைய குழந்தையை கொஞ்சும் போது.. என் தங்க மகனே/மகளே.. என் பவுனு மகனே/மகளே என்றெல்லாம் கொஞ்சி, தன்னுடைய குழந்தையை மிக மதிப்புள்ளதாய் கொண்டாடுவார்கள்..

மனிதர்களை பொறுத்தவரை தங்கம் என்பது மதிப்பானது... ஆனால் காக்கைகளை பொறுத்தவரை அந்த தங்கம் என்பது என்னவென்றே தெரியாது... கல், மண் போன்று தங்கமும் எதற்கும் உதவாத ஒரு பொருள்.. அவ்வளவுதான்... பின் எப்படி காக்கைக்கு தன குஞ்சு பொன் குஞ்சு ஆகும்??

காக்கையை பொறுத்தவரை, ஒரு வடை, முறுக்கு, இறைச்சி போன்றவைகளே பெரிய மதிப்பான பொருள்.. நியாயமாக "காக்கைக்கும் தன் குஞ்சு வடை குஞ்சு.. முருக்கு குஞ்சு.." என்று தானே இருக்க வேண்டும்...

மனிதர்களுக்கு என்ன தெரியுமோ அதையே மற்ற உயிரனங்கள், உயிரற்றவை மீதும் திணித்து, அவைகளின் எண்ணமும் ஆசையும் இதுவாகத்தான் இருக்கும் என்று மனிதனாகவே முடிவு செய்து கொண்டு அதையே பேசிக்கொண்டும் இருக்கிறான்...

மனிதர்களிலும் இப்படித்தான்.. அதாவது ஒருவன் தான் நினைப்பவற்றைதான் அடுத்தவனும் நினைப்பான் என்று தவறான கற்பனை செய்துகொண்டு , மற்றவர்களின் மீதும் தன்னுடைய என்னத்தை திணிக்க முயல்வான்... அதை தான் நிஜம் என்று நம்புவான்... அவனுடைய எண்ணத்தை வைத்து அவனாகவே ஒரு உலகத்தை சிருஷ்டித்துக்கொண்டு மற்றவர்கள் நம்மை ஏற்றுக்கொள்கிறார்கள்.. நாம் தான் எல்லாம் தெரிந்தவன் என்ற நிலையில் இருப்பான்...

இப்படியானவர்களுக்கு தான் பகுத்தறிவாளன் என்று பெயர்...!!!

முளைப்பாரியும் ஃபேஸ்புக்கும் !!



ஆடி மாசம் மேட்டூர் அணை திறந்து ஆத்து நிறைய தண்ணி போவும்... ஆடி பதினெட்டு அன்னிக்கு ஊர்ல இருக்க பொண்டுக புள்ளைகளெல்லாம் பாலிய கொண்டு போய் அந்த ஆத்து தண்ணில பிச்சு கரைப்பாங்க... (பாலி- முளைப்பாரி என்று சொல்வார்கள்) 

ஆடிமாசம் பத்தாந்தேதி வாக்குல ஒரு தாம்பாளத்துல தொழு உரத்த நிரப்பி அதுல நவதானியங்கள போட்டு தண்ணி தெளிச்சு ஒரு கூடடைய போட்டு கவுத்து வெளிச்சம் படாம மூடி வைப்பாங்க... அப்புறம் தினம் தினம் அதிகாலைளையும் சாயங்காலமும் திறந்து தண்ணி தெளிச்சு உடனே மூடிடுவாங்க... அது நல்லா முளைச்சு வளரும்... சூரிய ஒளி படாம இருக்கறதால நல்ல உயரமா வளரும்.. அதே நேரம் இளமஞ்சள் நிறத்துல அழகா இருக்கும்...

பொண்டுக புள்ளைங்க அப்படி மொளைக்க வச்சு தூக்கிட்டு வந்த பாலிய எல்லாம் ஆத்துக்கரைல ஒரு திட்டாணி போட்டு, அதுல புள்ளையார் புடிச்சு வச்சு கும்மி அடிச்சு பாட்டு பாடி அப்புறம் ஆத்துல பிச்சு விடுவாங்க...

அப்படி கொண்டு வந்து எல்லா பாலியும் ஒரு இடத்துல வைக்கும் போது யாரோடது உயரமா இருக்குன்னும் , யாரோடது பச்சையா இல்லாம மஞ்சளா இருக்குன்னும் வயசுப் பொண்ணுங்களுக்குள்ள ஒரு போட்டி நடக்கும்... அப்படி கும்பலா வச்சிருக்க பாலிகள்ள ஒரு சிலது மட்டும் உயரம் குறைவா வளர்ந்திருக்கும்... நல்ல பச்சை கலரா இருக்கும்... அத வச்சு கிண்டல் பண்ணிக்குவாங்க...

அந்த பாலி ஏன் அடர் பச்சையா, உயரம் குறைவா வளர்ந்திருக்குன்னு பார்த்தா.. அந்த வீட்டுல இருக்க நண்டு சிண்டுகளோட , குஞ்சு குளுவான்களோட (அதாவது சின்ன பசங்க ) வேலைதான் அது... முளைக்க வச்ச அடுத்த நாள்ல இருந்து ஒரு நாளைக்கு அம்பது தடவை திறந்து திறந்து பாப்பாங்க.... முளைச்சிடுச்சா.. வளர்ந்துடுச்சான்னு... அப்படி அம்பது தடவை திறக்கும் போது சூரிய வெளிச்சம் கிடைக்கிறதால அந்த செடி வேகமா வளராது.. அடர் பச்சையாவும் ஆயிடும்...

இப்போ எதுக்குடா இந்த கதை???

அந்த சின்ன குழந்தைகளுக்கு இருக்க அதே ஆர்வ கோளாறுதான் நமக்கும்... ஒரு நாளைக்கு அம்பது தடவைக்கும் மேல பேஸ்புக் ஓபன் பண்ணி பண்ணி நோடிபிகேஷன் எல்லாம் பார்க்கிறேன்... நம்ம நோடிபிகேஷன் பாக்ஸ் அந்த அடர் பச்சை பாலி மாதிரி கொஞ்சமே கொஞ்சம் தான் வளர்ந்திருக்கும்...

ஒரு மூணு மணி நேர பிரேக்ல நூத்தம்பது நோடிபிகேஷன்... ஓவர் நைட் ல ஒலக பிரபலமாயிட்டோமோன்னு பரபரப்பாயிட்டேன்... அட... தம்பி முத்து ராஜ் நம்ம பழைய பதிவ எல்லாம் தோண்டி எடுத்து துடைச்சு பார்த்திருக்கான்....

என்னமோ போங்க....!!!! எதை எதோட எல்லாம் கோர்த்து கோர்த்து யோசிக்க வேண்டி இருக்கு...