புதன், 28 ஜூன், 2017

ஒடிந்த சிறகுகள்..!!!

கருவறை வளர்ந்த குழந்தை..
உயிர் காற்றை சுவாசிக்கும் முன்பே
தாயின் தனத்தினுள்ளே
தயாராகும் அமிழ்தே தாய்ப்பால்..!!!

அமினோ அமிலங்களோடு
அடர் கொழும்பும் புரதமும் சேர்ந்து
இரண்டுக்கு ஒன்றென்றளவில்..
கால்சியம் பாஸ்பரஸ் கலந்து
தாயவள் படைத்திடும் விருந்து...
சேய்க்கு அஃதொரு மருந்து...!!

பிறந்த ஒருமணிக்குள்ளே
சீம்பால் புகட்டிட வேணும்...
இறக்கும் நாள் வரைக்கும்
இது நோயற்ற உடல்நலம் பேணும்...!!

குறைந்தது ஓராறு மாதம்...
நிறைவது முப்பத்தாறுமாதம்..
தாய்ப்பால் கொடுத்திடல் நன்று...
நலமென வளரும் நம் கன்று..!!

மார்போடனைக்கையில் பெரும் இறுக்கம்..
மழலைக்கு தாயுடன் வளர்க்கும் நெருக்கம்...!!
அமுதூட்டும் நாட்களின் இந்த பிணைப்பு..
ஆயுளுக்கும் அறுந்து விடாத இணைப்பு...!!

எல்லாம் தெரிந்து என்ன...
எனை சுற்றி உலகம் வலை பின்ன..

இயந்திர வாழ்க்கையில் சிக்கி
இடைவெளி இல்லா ஓட்டம்...
பிரசவ விடுப்பு முடிந்து சேயை
பிரிந்திடும் தாய்களின் வாட்டம்...

எங்கோ கிடைத்த உணவை தன் குஞ்சுக்காய்
எடுத்தோடி கூட்டுக்கு வருகுது சிறு பறவை
நெஞ்சில் சுரக்கும் பாலை என் பிஞ்சுக்காய்
கொடுக்க வழியற்று அலுவலகம் ஒடித்ததென் சிறகை...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக