வியாழன், 29 ஜூன், 2017

குடிநீர்- வன்முறை

உத்திர பிரதேசத்தில் ரயிலில் பயணம் செய்த ஒருவர் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொஞ்சம் தண்ணீர் குடிதத்தால் ஏற்பட்ட தகராறில் தண்ணீர் குடித்தவரை ரயிலின் ஜன்னலில் கட்டி வைத்து அடித்திருக்கிறார்கள் அந்த பாட்டிலுக்கு சொந்தக்காரரும் அவரது நண்பர்களும்...
Image may contain: 2 people, people sitting
மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு சாதாரண செய்தி.... இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து நோக்கினால் ஒரு மனித நேயமற்ற செயல் என்ற கண்டனம் தெரிவிக்கலாம்....

ஆனால்.. செய்தியின் பின் புலம், சம்பவத்திற்கான காரணம் பற்றி ஆழ்ந்து யோசித்தால் பிரச்சினையின் தீவிரம் புரியும்....

நான் கிராமங்களில் பார்த்திருக்கிறேன்... தெருவோர வீடுகளுக்கு முன்பாக மண் குடத்தில் குடி தண்ணீர் நிரப்பி வைத்திருப்பார்கள்.... தெருவில் அன்றாட உபயோகப்போருட்களை விற்பனை செய்து கொண்டு செல்பவர்கள் தாகம் தனித்து செல்வதுண்டு... சில நேரங்களில் வீட்டு வாசலில் நிற்பவர்களிடமோ, பொருட்கள் வாங்குபவரிடமோ கூட "கொஞ்சம் தண்ணி கொடு ஆயி...." என்று கேட்டு குடித்து விட்டு செல்வார்கள்...

நகர் புறங்களில் வீடுகளில் அது சாத்தியமில்லை என்றாலும்... டீக்கடைகளில் அந்த வாய்ப்பு இருந்தது.... ஆனால் இப்ப்போதோ நகரங்களில் அது சாத்தியமே இல்லாத நிலையை எட்டி இருக்கிறது.... தாகம் எடுத்தால் இரண்டு ரூபாய்க்கு தண்ணீர் பாக்கெட்டுகளோ, பத்து-இருபது ரூபாய்க்கு தண்ணீர் பாட்டிலோ வாங்கி குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளபட்டிருக்கிறோம்... இந்த நிலையில் பேருந்து-ரயிலில் பயணம் செய்யும் போது தண்ணீர் எடுத்து சென்றே ஆக வேண்டிய கட்டாயம்.... மறந்துபோய் எடுக்காமல் போய் விட்டாலோ.... யாரேனும் வைத்திருக்கும் தண்ணீரை கேட்க கூட முடியாது... 

ஒருவேளை வாங்கி வைத்திருப்பவர் கொடுக்கும் நிலையில் இருந்தாலும் கூட , கேட்பதற்கு கூச்சமாக இருக்கிறது.... தண்ணீர் ஒன்றும் கேட்டு வாங்கி குடிக்க கூடாத பொருள் இல்லை... ஆனால்.. அதை காசு கொடுத்து வாங்கி வைத்திருப்பதால்.. கேட்கவும்- கொடுக்கவும் தயக்கம் ஏற்படுகிறது...

உலகின் மிகப்பெரிய குளிர்பான நிறுவன தலைவர் ஒருவரிடம் "உங்களது விற்பனை யாராலும் எட்ட முடியாத அளவு உயர்ந்திருக்கிறதே.... உங்கள் போட்டியாளர்களை நீங்கள் வென்று விட்டதாக தானே அர்த்தம்... " என்று கேட்கப்பட்டது....

அதற்கு அவர் சொன்னார்... "இல்லை... எங்கள் போட்டியாளர் வேறொரு நிறுவனம் இல்லை.... தண்ணீர் தான் எங்கள் போட்டியாளர்.... உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் தாகம் எடுத்தால் எங்கள் குளிர்பானத்தை தான் குடிக்க வேண்டும்.. அப்போதுதான் எங்கள் வெற்றி முழுமை பெரும்.."

ஒரு நிறுவனத்தின் தலைவராக அவரது முனைப்பு பாராட்டப்பட வேண்டியதுதான் என்றாலும்.... இதற்கு பின்னால் மானுடத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் "கார்பொரேட் தீவிரவாதம்" பளிச்சென தெரியும்... ஏற்கெனவே கார்பொரேட் நிறுவனங்கள் தண்ணீரை பாட்டிலில் அடைத்து காசு பார்க்க தொடங்கிவிட்ட நிலையில் அவர்களது வியாபாரத்தை பெருக்க தற்போது நிகழ்வில் இருக்கும் சிறு-குறு தண்ணீர் விற்பனையாளர்கள் நசுக்கப்படுவார்கள்... (உள்ளூர் குளிர்பான தயாரிப்பாளர்களை இலவச பிரிட்ஜ்-பெயர்பலகை போன்றவற்றை வைத்து நசுக்கி ஒழித்ததை நினைவில் கொள்க )
நாளடைவில் ஒட்டுமொத்த தண்ணீர் பாட்டில் விற்கும் உரிமையும் வசதியும் அவர்களுக்கு மட்டுமே சொந்தமாகலாம்.. அப்போது ஒரு பாட்டில் தண்ணீரின் விலை நூறு ரூபாயாக கூட இருக்கலாம்.... அதை வாங்கும் வசதி இருப்பவருக்கும் - வசதி இல்லாதவருக்கும் தாகம் இருக்கும்.... அப்போது அது கொலைகளில் முடியும்.


இதை எப்படி தடுக்கப்போகிறோம் தோழர்களே.... நீராதாரங்களை பாதுகாக்க நாமும்-அரசும் தவறி விட்டோம்.... ரியல் எஸ்டேட் முதலைகளின் வாய்ச்சவடாலுக்கு ஆசைப்பட்டும், பேராசையினாலும் அவர்கள் ஏரிகளையும் குளங்களையும் நம் கண் முன்னே தூற்று உருவாக்கிய மனைப்பிரிவில் இடம் வாங்க வரிசையில் நிற்கிறோம்.... மரங்களை அழித்து வான்மழையை தடுத்துவிட்டோம்.... பிளாஸ்டிக்- விஷ மருந்துகளை பயன் படுத்தி பயன் படுத்தி நில வளத்தை கெடுத்து விட்டோம்.... நிலத்தடி நீரை உறிஞ்சி உறிஞ்சி விற்றுவிட்டோம்...

இன்னும் விழித்துக்கொள்ளவில்லை என்றால்... இன்று உத்திர பிரதேச ரயிலில் நிகழ்ந்தது நாளை நமது ஊரில்... நமக்கே கூட நிகழலாம்...
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக